Tuesday 30 March 2010

மில்லியனர் ஆக வேண்டுமா? இதைப் படியுங்க.


இந்தோனேஷிய மொழியை கத்துக்கத்தான் கஷ்டப்பட்டேன்னா இங்க பணத்தை எண்ணுவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன்.என்ன சாமானை வாங்கினாலும் அவன் சொல்லும் விலையைக் கேட்டதும் என் உச்சி மண்டையில "சுர்ர்" ருங்கும். எல்லாமே ஆயிரங்களிலும் லட்சங்களிலும்தான்.

பில் போடற இடத்துல உள்ள ஸ்க்ரீன்ல வர்ற விலையை படிக்கவே கொஞ்ச நேரம் ஆகும். ஆறு இலக்க எண்ணுக்கு குறையாமல் இருக்கும். அதுவேற கமா போடற இடத்துல புள்ளிய வச்சு புள்ளி வைக்கற இடத்துல கமாவைப் போட்டு தொலைச்சிருப்பான். 100,000,000.00ன்னு எழுத வேண்டியதை 100.000.000,00ன்னு எழுதியிருப்பான். லட்சம் கோடின்னு படிச்ச நமக்கு மில்லியன் பில்லியன்னு படிக்க வேற கஷ்டம். நமக்கு ஒண்ணும் விளங்காது.

ஒருவழியா எவ்வளவு பணம்னு படிச்சு டாலரில் எவ்வளவுன்னு கணக்குப் போட்டு அதை நம்ம ஊர் பணத்துக்கு கணக்கு போட்டு அடப்பாவிங்களா இந்த கொள்ளை அடிக்கறீங்களேடான்னு மனசுக்குள்ள திட்டிட்டு அதுக்கப்புறம் பணத்தை எண்ணி கொடுத்துட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். பணத்தை எண்ணவும் திணற வேண்டி வரும்.

பணத்தை எண்றதுல என்ன பிரச்சினை வரும்னு யோசிக்கறீங்களா? பில் 605500ருப்பியா வருதுன்னு வச்சுக்கோங்க. முதலில் 6லட்சத்தை 50000 அல்லது 100000ருப்பியா நோட்டா எடுக்கணும். அப்புறம் அந்த 5000ருப்பியா அப்புறம்500ருப்பியான்னு தேடி எடுத்து கொடுக்கணும். சும்மா 650000கொடுத்துட்டு மீதியை வாங்கி போட்டுக்க வேண்டியதுதானேன்னு கேட்கப்படாது. பின்ன அவன் மீதி 44500ருப்பியாவில் 4500 ருப்பியாவை காயினா கொடுப்பான். அப்புறம் இந்த மாதிரி சில்லறையெல்லாம் சேர்ந்து சேர்ந்து டப்பா டப்பாவா காயின்ஸா இருக்கும். அதை எப்படி செலவளிக்கறது. என்ன இதுக்கே தல சுத்துதா? மில்லியனர் ஆகணும்னா கொஞ்சமாவது கஷ்டப் பட வேண்டாமா?

நம்ம ஊர் ஒரு ரூபாயைக் கொடுத்தால் இங்குள்ள 150ருப்பியா கிடைக்கும். ஆஹா இது ரொம்ப நல்லா இருக்கே 100ரூபாய் எடுத்துட்டுப் போனா நிறைய சாமான் வாங்கலாமேன்னு சரோஜா சாமான் நிக்காலோ ன்னு பொட்டிய தூக்கிட்டு இந்த ஊருக்கு கிளம்பிடப்படாது.

ஒரு குச்சி மிட்டாய் வாங்கணும்னா கூட ஆயிரம் ருப்பியா வேணும். பை நிறைய பணம் கொண்டுபோனா பாக்கெட் நிறைய சாமான் வாங்கலாம். இந்த ஊருல பொட்டிக்கடை வச்சிருக்கறவனும் மில்லியனர்தான். அதனால யாருக்கெல்லாம் மில்லியனர் ஆகணும்னு ஆசை இருக்கோ அவங்க எல்லாம் இந்தோனேசியாக்கு ஓடி வந்துடுங்க. மல்டி மில்லியனர் என்ன பில்லியனரே ஆகலாம் :).

Sunday 28 March 2010

வேண்டாமே மதுவும் புகையும்


ரொம்ப நாளாக மனதுக்குள் வேதனைப்படுத்திக் கொண்டிருந்த விஷயம். யாரையும் குறை சொல்லணும்னோ இப்படித்தான் இருக்கணும்னோ சொல்றதுக்காக இல்லை. இப்படியும் இருக்கலாமேன்னு அன்பா சொல்றதுக்குத்தான் இந்த பதிவு.

சிங்கப்பூரில் நம் ஊரிலிருந்து வந்து வேலை பார்ப்பவர்கள் அதிகம். அதுவும் கட்டுமானத்துறையிலும் மற்றும் ப்ளூ காலர் வேலைகளிலும் இருப்பவர்கள் அதிகம். என்னதான் சிங்கப்பூர் அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதாக சொன்னாலும் அவர்கள் வசிக்கும் இருப்பிடங்கள் நெருக்கடியானதுதான். திங்கள் முதல் சனி வரை காலை முதல் மாலை வரை பிழிந்தெடுக்கும் வேலை முடித்து இருப்பிடம் திரும்பி உணவு சமைத்து உண்டு உறவுகளை நினைத்து ஏங்கி களைப்பில் உறங்கி மீண்டும் காலையில் வேலைக்கு சென்று என்று வாரத்தில் 6நாட்களும் எந்திரமாக உழைத்து இருப்பவர்கள் ஞாயிறு விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்று எண்ணுவது இயல்பு.

ஆனால் சிலர் அந்த சந்தோஷம் சிகரெட்டிலும் மதுவிலும்தான் கிடைப்பதாக நினைத்து ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்த காசையும் வீணடித்து உடலையும் பாழ்படுத்திக் கொள்வதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. நான் அடிக்கடி செல்லும் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் ஒவ்வொரு சனி இரவுகளிலும் ஞாயிறுகளிலும் அதிகம் பார்க்கும் காட்சி இது. அங்குள்ள இந்திய சாமான்கள் விற்கும் கடையில் வார இறுதியில் இந்த இரண்டு பொருட்களின் விற்பனை மிக அதிகம். மனசுக்கு ரொம்பவே வேதனையா இருக்கும்னு சொல்றதை விட கோபம்தான் அதிகமாக வரும்.

இதற்காக இவர்கள் செலவளிக்கும் குறைந்தபட்ச தொகை வாரத்திற்கு 10லிருந்து 15டாலர் வரை இருக்கும். ஒரு மாதத்திற்கு 40லிருந்து 60டாலர் வரை. இந்திய மதிப்பில் 1200 முதல் 1800ரூபாய் வரை. இந்த பணத்தை ஏதேனும் பாதுகாப்பான பாலிசிகளில் முதலீடு செய்தால் உங்கள் எதிர்காலத்திற்கு உதவுமே சகோதரர்களே! இல்லை அந்த பணத்தை நல்ல சாப்பாட்டிற்காகவாவது செலவளிக்கலாமே!
யோசியுங்கள் சகோதரர்களே!

டிஸ்கி: புகை பிடிக்கும் மது அருந்தும் எல்லா சகோதரர்களுக்கும் சேர்த்தேதான் இந்த பதிவு.

Wednesday 24 March 2010

விருது விருது வருது வருது!


பரிசு விஷயத்தில் ஏமாந்து நான் அழுததைப் பார்த்து
வேதனைப்பட்ட என் தோழி மேனகா எனக்கு விருது கொடுத்து குஷிப்படுத்திட்டாங்க. நன்றி மேனகா!

நான் பெற்ற இவ்வையம் பெற வேணும்ங்கற நல்ல எண்ணத்துல இந்த விருதை இவர்களுக்கெல்லாம் பகிர்ந்து அளிக்கிறேன்

"இமாவின் உலகம்" இமா (அழகான கைவண்ணத்திற்காக வழங்கப்படுகிறது)
மங்குனி அமைச்சர் (எவ்வளவு சீரியசான பதிவுகளிலும் மொக்கை கமெண்ட் போடுவதற்காக :))
நாஞ்சில் பிரதாப் (மொட்டை மாடி கவுஜ க்காக இல்லை திரைப்படங்களை குறிப்பாக மலையாள திரைப்படங்களை அருமையாக விமர்சிப்பதற்காக வழங்கப்படுகிரது)
பிரியமுடன் வசந்த் (தமிழ் சேவைக்காக வழங்கப்படுகிறது)
இலா (மொக்கை போடாமல் உபயோகமான பதிவுகள் போடுவதற்காக வழங்கப்படுகிறது)
"எல்போர்ட்" சந்தனா ( உபயோகமான பதிவுகளை நகைச்சுவையோடு போட்டு அசத்துவதற்காக வழங்கப்படுகிறது)

To the award winners, please pass this on to your favorite bloggers! Here are the Rules:1. Put the logo on your blog or within your post
2. Pass the award on to 12 bloggers!
3. Link the nominees within your post
4. Let the nominees know they have received this award by commenting on their blog
5. Share the love and link to the person from whom you received this award

Tuesday 23 March 2010

கம்பன் கழகம் கொடுத்த பல்பு




இது ஒரு கொசுவத்தி மொக்கைங்கோ! ரெடி ஸ்டார்ட் ரொட்டேட் கொசுவத்தி....

அப்போ நான் பதினொண்ணாம் கிளாசு படிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ கம்பன் கழகம் சார்பா மாவட்ட அளவிலான வினாடி வினா... அதாங்க க்விஸ் போட்டி வச்சாங்க. எங்கள் பள்ளி சார்பாக நானும் என் தோழிகள் மூவரும் கலந்து கொண்டோம். எல்லா ரவுண்டிலும் ஜெயிச்சு ஃபைனலில் ஃபர்ஸ்ட் ப்ரைசும் ஜெயிச்சிட்டோம்.(இதெல்லாம் சாதனைன்னு சொல்ல வந்துட்டியாக்கும் அடங்கு மவளே அடங்கு...)

ஆனா ப்ரைசை கையில் கொடுக்கவே இல்லை :(. ஏதோ விழா எடுத்து அப்புறமாத்தான் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. சரின்னு நாங்களும் வந்துட்டோம். ரெண்டு மாசம் கழிச்சு எங்க ஊரு சித்ரா லைப்ரரியில் வச்சு விழா நடத்தி ப்ரைஸ் கொடுக்கப் போறதா சொல்லி பள்ளிக்கு லெட்டர் வந்துது.

பள்ளி ஆசிரியையின் துணையோடு நாங்களும் அங்க போனோம். சாயங்காலம் 4 மணிக்கு விழான்னு சொல்லியிருந்தாங்க. நாங்களும் போய் உட்கார்ந்தோம். மொத்தமே ஒரு 50பேர் வந்திருந்தாங்க. அதிலயும் 10பேர் மேடையிலத்தான் இருந்தாங்க.

பத்து பேரும் ஒவ்வொருத்தரா எந்திரிச்சு தலைவர் அவர்களே இவர்கள் அவர்களே... அவர்கள் அவர்களேன்னு ஆரம்பிச்சு (ஆனாலும் எல்லாருக்கும் ரொம்ப நல்ல மனசுங்க. எங்களையும் மறக்காம மாணவ மாணவிகளேன்னு அன்பா சொன்னாங்க) ஒவ்வொருத்தரும் குறைஞ்சது 20நிமிடமாவது ரம்பம் போட்டுக்கிட்டுத்தான் உட்கார்ந்தாங்க.

அப்படீ இப்படீன்னு எல்லாரும் எட்டு மணிபோல பேசி முடிச்சாங்க. எங்க கழுத்துக்கெல்லாம் உடனடியா ஹாஸ்பிட்டல் போய் கட்டு போட வேண்டிய நிலைமை. ஆனாலும் எங்க டீச்சர் கெஞ்சி(?) கேட்டுக்கிட்டதால பொறுத்துக்கிட்டு உட்கார்ந்திருந்தோம்.

ஒருவழியா பல்பு... சே... பரிசு கொடுக்கும் படலம் ஆரம்பிச்சாங்க. வினாடி வினா முதல் பரிசு @@@@பள்ளின்னு அறிவிச்சு எங்கள் ஒவ்வொருத்தர் பேரையும் சொன்னதும் நாலு பேரும் போய் பரிசை வாங்கினோம். பரிசுன்னதும் பெரிய ட்ராஃபி அல்லது ஷீல்டுன்னு நீங்க ரொம்ப குறைவால்லாம் நினைச்சுடக் கூடாது. ஆளுக்கொரு சர்ட்டிஃபிக்கேட் மட்டும்தாங்க கொடுத்தாங்க :(. ஃபோட்டோ கூட புடிச்சாங்க.

அதைக் கூட பொறுத்துக்கிட்டோம் ஆனா இரண்டாவது பரிசு @@@பள்ளி ன்னு சொல்லி அவங்க வந்ததும் அவங்களுக்கு எல்லாம் ஆளுக்கு ஒவ்வொரு பெரிய புத்தகமும் சர்ட்டிஃபிக்கேட்டும் கொடுத்தாங்க பாருங்க... நாங்க நொந்து போயிட்டோம். என் தோழி கோபத்தில்(?) அழவே செய்துட்டா..

எங்க கூட வந்த டீச்சரோ ரொம்ப பாவம் அதிர்ந்து கூட பேச மாட்டார். அவங்க சரி சரி போனா போகுது சர்ட்டிஃபிகேட் வாங்கியாச்சுல்ல போவோம்னு கூட்டிக்கிட்டு வந்துட்டார்.

கொசுவத்திக்குள் ஒரு கொசுவத்தி>>>>> இரண்டாம் பரிசு பெற்ற அணியிலுள்ள ஒரு பையன் என்னோடு கணக்கு ட்யூஷன் படித்தார். எங்க ரெண்டுபேருக்கும் எப்போதுமே ஜென்ம பகைதான். நான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைச்சதில் அவனைப் போட்டு நல்லா வெறுப்பேத்தியிருந்தேன்.<<<<<கொசுவத்தி முடிஞ்சுது.

ரெண்டாவது நாள் தினமலரில் கம்பன் கழக பரிசளிப்பு விழான்னு ஒரு செய்தி வெளியாகி ஒரு ஃபோட்டோவும் போட்டிருந்தாங்க. அதுலயும் அவனுங்க படத்தைப் போட்டுட்டு கடைசியா குட்டியூண்டு முதல் பரிசு பெற்றவர்கள்னு எங்க பேரைப் போட்டிருந்தானுங்க. அடப்பாவிங்களா இங்கயும் எங்களை கவுத்திப்புட்டானுங்களேன்னு நொந்துக்கிட்டோம்.

ட்யூஷனுக்குப் போனா அவன் வேற அந்த பேப்பர் கட்டிங்கையும் புத்தகத்தையும் வச்சுக்கிட்டு பந்தா காமிச்சு பழி தீர்த்துகிட்டான் :(. எங்க ட்யூஷன் சார் வேற உன் ஃபோட்டோ போடாம இவன் ஃபோட்டோ வந்திருக்குன்னு அவர் பங்குக்கு வெறுப்பேத்தினார்.

எல்லா கோபமும் தலைக்கேறியிருந்த நேரத்துல எங்க வீட்டுக்கு எங்க அப்பாவைப் பார்க்க ஒருத்தர் வந்தார். கம்பன் கழக உறுப்பினரும் கூட. அவரோட போதாத நேரம்... முந்தாநேத்து உன்னைய அங்க பார்த்தேனேம்மா.. ன்னார். அவ்வளவுதான் என் எல்லா கோபத்தையும் அவரிடம் தீர்த்து விட்டேன். உங்களுக்கு அந்த ஸ்கூலுக்குத்தான் ப்ரைஸ் கொடுக்கணும்னா கொடுக்க வேண்டியதுதானே எதுக்கு போட்டின்னு ஒண்ணை வச்சு இப்படி கேவலப்(?!) படுத்துனீங்கன்னு அவரை போட்டு நொங்கி எடுத்துட்டேன்.

மனுஷர் பாவம் "இல்லம்மா ஏதாச்சும் தப்பு நடந்திருக்கும் இல்லேன்னா இப்படி ஆகியிருக்காதுன்னார்". அடுத்த(மறுபடியுமா?!) தடவை தப்பு நடக்காம பார்த்துக்கறோம்னு சொல்லி என்கிட்ட இருந்து தப்பியோடிட்டார்.

அப்புறம் கொஞ்சகாலம் வரை கம்பன் கழகம்னு சொல்லிக்கிட்டு என் முன்னாடி வந்தவங்க கதை எல்லாம் அவ்வளவுதான். இப்போ நினைச்சா சிரிப்பு வருது. ஆனா அப்போ அம்புட்டு கோவம். அந்த பையன்(இப்போ டாக்டர்) கிண்டல் பண்ணலேன்னா ஒருவேளை அவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டேனோ என்னவோ :)

ஆனா இன்னிக்கு வரைக்கும் கம்பன் கழகம் எங்களுக்கு ஏன் பல்பு கொடுத்திச்சுன்னு மட்டும் புரியவே இல்லை.

Sunday 21 March 2010

பின்னூட்ட குலசாமிக்கு படையல் தொடர்பதிவு

இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த அன்பு(?) உள்ளங்கள் மங்குனியார், செல்விம்மா மற்றும் அதிரா ஆகியோருக்கு நன்றி(கர்...கர்.......)

நாம்ப போட்டதே மொத்தம் 21பதிவுகள்(மொக்கைதான்). இதுக்கு வந்த பின்னூட்டங்களையும் விரல்விட்டு எண்ணிடலாம் இதில் எங்கயிருந்து பிடிச்சது பிடிக்காததுன்னு சொல்ல :(.

ஆனாலும் ஒரு தொடர்பதிவாவது எழுதலேன்னா நானும் பதிவர்தான்னு சொல்லிக்கிட்டு திரிய முடியுமா! அதான் இந்த பதிவு. எவ்வளவோ சகிச்சுக்கிட்டீங்க இதையும் சகிச்சிக்கிட மாட்டீகளா என்ன :)

பிடித்த பின்னூட்டங்கள்: எல்லா பின்னூட்டங்களும் பிடிக்கும். இல்லேன்னா அதையெல்லாம் இங்கிட்டு போடுவோமாக்கும். அதுக்குத்தானே மாடரேஷன்னு ஒண்ணை வச்சிருக்கோம். ஆனா ஒண்ணுங்க நம்ப மக்கள்ஸ் எனக்கு டெலீட் பண்ற வேலையே வைக்கலீங்க. ரொம்ப... நல்லவங்க :)

நான் பிறருக்கு அளித்த பின்னூட்டங்களில் எனக்குப் பிடித்தது:

நான் முன்னாடி ஒரு பேச்சு பின்னாடி ஒரு பேச்சு பேச மாட்டேனுங்க. அதனால முன்னாடி சொன்னதுதான் இதுக்கும். நான் அளித்த எல்லா பின்னூட்டங்களும் பிடிக்கும்(டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் உட்பட). அட சத்தியமாத்தானுங்க நம்புங்க அட நம்புங்க.

நாங்கள்லாம் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவங்களாச்சே! கழுவற மீன்ல நழுவற மீனாத்தான் இருப்போம்.

டிஸ்கி: இலையில ஒவ்வொரு ஐட்டமா வச்சா இலையே நிறைய மாட்டேங்குதுங்க. அதான் அல்லாத்தயும் அள்ளி மொத்தமா வச்சிட்டேன்.

சரிங்க குலசாமிக்கு படையல் போட்டாச்சு . அடுத்து எந்த வூட்டுக்காரங்க படையல் போடணும்னா சமையலை அட்டகாசமாக்கிக் கொண்டிருக்கும் ஜலீலாக்காவும் எல் போர்ட் மாட்டி சுற்றிக் கொண்டிருக்கும் சந்தனாவும். வந்துடுங்க போட்டுடுங்க.

Wednesday 17 March 2010

படைப்பு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும்

சமீப காலமாக எங்கும் அதிகம் புழங்கப்படும் வார்த்தை கருத்து சுதந்திரம் மற்றும் படைப்பு சுதந்திரம்.

ஒருவர் தன் படைப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்த அவருக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. அப்போதுதான் அவரது படைப்பு சிறப்பானதாக இருக்கும். ஆனால் அப்படிப் படைக்கும் ஒரு படைப்பு பல்லாயிரக்கணக்கானோரின் மனதைப் புண்படுத்தும் என்று தெரிந்தும் அதை வெளியிட்டால் அதை படைப்புச் சுதந்திரம் என்ற பாதுகாப்பு அடையாளத்தின் கீழ் கொண்டுவர முடியாது. அப்படியே அது அவரது படைப்புச் சுதந்திரம் என்றால் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மற்றவர்களின் கருத்துச் சுதந்திரமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும்.

இவ்வளவு நேரம் எதைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று எல்லோருக்கும் புரிந்திருக்கும். அதேதான் ஓவியர் எம்.எஃப். ஹூசைன் விவகாரம்தான்.

இந்திய குடியுரிமை வேண்டாம் என்கிறார் என்றால் அது அவரது இஷ்டம். அதைத் தடுக்கவோ எதிர்க்கவோ அவசியம் இல்லை. எத்தனையோ இந்தியர்களும் இன்னொரு நாட்டின் குடியுரிமை பெற்றிருகின்றனர்.

கோவில் சிலைகளில் இல்லாத ஆபாசமா இவரது ஓவியத்தில் உள்ளது என்கின்றனர் ஒரு பக்கம். உன் தாயை இப்படி வரைவாயா என்கிறது இன்னொரு பக்கம். என் மனதில் ஒரே ஒரு கேள்விதான் வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்களின் மன உணர்வுகளையும் நம்பிக்கையயும் புண்படுத்தும் ஒரு ஓவியத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும். மீண்டும் மீண்டும் அந்த அப்பாவிகளை ஏன் புண்படுத்த வேண்டும் அறிவுஜீவிகளே! ஒரு பக்குவப்பட்ட படைப்பாளியாக இருந்தால் மக்கள் மனதைப் புண்படுத்தியதற்கு மன்னிப்பு அல்லவா கேட்டிருக்க வேண்டும்.

எதிர்ப்பவர்களின் கேள்வியிலும் நாகரீகம் இருக்க வேண்டாமா? பெற்றவளையும் மனைவியையும் உடன் பிறந்தவளையும் வரைவாயா என்று கேட்பது அசிங்கமாக இல்லையா? அவர்களும் உன் தாயும் சகோதரிகளும்தானே!

இன்று படைப்பு சுதந்திரம் பற்றி இவ்வளவு பேசும் நாம் நம் தேசப்பிதாவின் படம் இன்னொரு வெளிநாட்டில் அவமதிக்கப்பட்ட போது கொதித்தெழுந்து சம்பந்தப்பட்டவரை மன்னிப்பு கேட்க வைத்தோமே அப்போது எங்கே போனது நம் படைப்பு சுதந்திரம் பற்றிய கருத்துக்கள்?

காந்திஜியை விமர்சிப்பவர்கள் நம் நாட்டிலேயே இருக்கும் போது இன்னொருத்தன் அவரை அவமதித்த போது ஒட்டுமொத்தமாக வெகுண்டெழுந்தோமே ஏன்? நம் நாட்டவர்கள் அவரை அவமதித்ததை விடவா (அதான் இன்னமும் பூரண மதுவிலக்கை கொண்டு வரவில்லையே) வெளிநாட்டவன் அவமதித்து விட்டான் என்று அமைதியாகவா இருந்தோம்.

மத நம்பிக்கைகள் தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் இன்னொருவர் மூக்கை நுழைத்து கருத்து சொல்வதும் கேலி செய்வதும் மனம் புண்படும்படி செயல்படுவதும் என்னைப் பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனம். கடவுள் இல்லை என்று நம்புவதும் பிரம்மா விஷ்ணு இயேசு கிறிஸ்து என்று பெயரும் உருவமும் கொடுத்து வழிபடுவதும் அல்லாவின் மீது நம்பிக்கை கொண்டு வணங்குவதும் அவரவர் விருப்பம். இதில் மற்றவர் கருத்து சொல்வதும் கேலி செய்வதும் தேவையற்ற ஒன்று.

அறிவுஜீவிகள் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டவும் அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்கு சேகரிக்கவும் மதங்களைப் பயன்படுத்துவதை தயவு செய்து விட்டு விடுங்கள். நாங்கள் எங்கள் நம்பிக்கைகளோடு ஒற்றுமையாக இருந்து விட்டுப் போகிறோம்.

Wednesday 10 March 2010

நவீன தீண்டாமை

சமீபத்தில் அறுசுவை.காம் இல் நடந்த ஒரு பட்டிமன்ற வாதங்களைப்(பட்டிமன்றத்துக்கு நாட்டாமை நான் தான் :)) படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இங்கே!

ஜாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
பணிவோடு ஆசிரியர் சொன்னதைக் கேட்டோம்
ப்யூன் வந்து கொடுத்தார் ஸ்காலர்ஷிப் ஃபாரம்
ஏழையாய் இருந்தாலும் முற்படுத்தப்பட்ட ஜாதிக்காரனை
ஏற்றிவிட ஊக்கத்தொகை கிடையாதாம்!

கல்லூரியில் அடி எடுத்து வைக்க நினைக்க
கல் வந்து விழுந்தது கல்விக் கனவில்!
முற்படுத்தப்பட்டவனாம் ஜாதியால்!
முகம் சுளித்து தீண்டத் தகாதவனாய் தள்ளி வைத்தது அரசு!

சொந்த ஜாதிக்காரன் கல்லூரியும்
சொல்லாமல் புறந்தள்ளி தாளிட்டது
கையில் காசு இல்லாததால்!
கையில் காலணா இல்லாதவனை தள்ளி வைத்தது சமூகம்!

அலுக்காமல் கிடைத்ததைப் படித்து
அரசு வேலைக்கு முதல் விண்ணப்பம்...
அதிகாரமாக சொன்னது ஒதுக்கீடு இல்லை என்று
மீண்டும் தீண்டத் தகாதவனாய் தள்ளி வைத்தது அரசு!

ஜாதியால் தள்ளி வைத்தால் வன்கொடுமைச் சட்டம் பாயுமாமே!
முற்படுத்தப்பட்ட ஜாதி என ஒதுக்கி வைக்கும் அரசு..
பாயுமா இச்சட்டம்?!

முற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒரு ஏழையின் புலம்பல்!


டிஸ்கி: இதற்கு எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனால் இதுவும் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது என் கருத்து.

Monday 8 March 2010

புதிய சட்டசபைக் கட்டிடம்

மார்ச் 13ம் தேதி தமிழ்நாட்டின் புதிய சட்டசபைக்கட்டிடம் திறந்து வைக்கப்படுகிறது. எல்லாரும் சாமியார் பின்னாடி ஓடுனதுல இந்த செய்தி அடிபட்டு விட்டது.

செய்தி இதுதான்... சட்டசபைக்கட்டிடத்தின் மேற்கூரை குறிப்பிட்ட 13ம்தேதிக்குள் கட்ட முடியாதாம். அதனால் 2கோடி ரூபாய் செலவில் சினிமா செட்டிங் போல சட்ட சபையின் மேற்கூரை அமைக்கப்படுகிறதாம். எவன் அப்பன் வீட்டுப்பணம் இப்படி வீணடிக்கப்படுகிறது?அப்படி 13ம் தேதியே திறந்தாக வேண்டும் என்ற கட்டாயம்தான் என்ன? வேலைகள் முடியும் வரைப் பொறுத்தால் என்ன?

பல லட்சம் மக்கள் வீடின்றி நடுரோட்டில் உறங்கும் போது இந்த 2கோடி ரூபாய் வீண்செலவு அவசியமா? நாட்டில் வேறு எந்த பிரச்சினைகளுமே இல்லாமல் பாலாறும் தேனாறும் ஓடுகிறது. அரண்மனை தர்பாரில் பாராட்டுக்கூட்டங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தி ரசிக்க வேண்டுமே! அதற்கு தற்போதுள்ள அரண்மனையில் வசதி இல்லையே. மனசு குமுறுது. இவனுங்களை கேட்க யாருமே இல்லையா!

இதையெல்லாம் கேள்விகேட்க வேண்டிய பொறுப்பிலுள்ளவர்களோ காலவரையற்ற ஓய்வில்...அறிக்கை விடுவதோடு அவரது வேலை முடிந்துவிட்டது. கொடநாடுதான் தமிழ்நாடுன்னு முடிவு பண்ணிட்டார் போல!

எல்லாம் தமிழ்நாட்டின் தலைவிதி. பாதிபேர் ஒட்டுப் போடவே போக மாட்டான். பலர் காசுக்கு வோட்டு என்ற கொள்கையுடையவர்கள். அப்புறம் எப்படி இவனுங்களை கேள்வி கேட்க முடியும். அனுபவி ராஜா அனுபவி!

பின்குறிப்பு: நான் எந்தக்கட்சி ஆதரவாளனும் இல்லை. நாங்க வெறும் சோத்துக் கட்சிதான்:-)

Sunday 7 March 2010

அட்வைஸ்னு சொல்ல மாட்டேன்!


இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் பெற்றோரை ஊரில் விட்டு விட்டு பிற நகரங்களில் அல்லது பிற நாடுகளில் இருக்கிறோம்.

அவர்களுக்கு தனிமை தெரியாமலிருக்கவும் நாம் தள்ளி இருந்தாலும் மனதளவில் அவர்களோடேவேதான் இருக்கிறோம்கிற ஒரு பாதுகாப்புணர்வை அவர்களுக்கு கொடுப்பது ஒவ்வொரு பிள்ளையின் குறைந்தபட்ச பொறுப்பு என்றே நினைக்கிறேன். தங்களோடவே அவர்களை வைத்துக் கொள்ளும் பொருளாதார நிலையும் பெற்றோருக்கு நம்மோடு வந்து தங்கிக்கொள்வதில் விருப்பமும் இருந்தால் நம் பெற்றோர்களுடன் இணைந்திருப்பதே ஒவ்வொரு பிள்ளையின் உரிமை. ஏன் "உரிமை"ன்னு சொல்றேன்னா "கடமை" என்ற வார்த்தை அன்புக்கு உரியது அல்ல. அன்பு உரிமையானதாக இருக்க வேண்டுமே தவிர கடமைக்காக இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

நாம் பெற்றோருடன் இணைந்திருக்க முடியாத சூழ்நிலையில் நாம் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு நடந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் பிசியான இயந்திர வாழ்க்கையில் மறந்து விடுகிறோம். அதை ஞாபகப்படுத்தவே இந்த பதிவு.

அவரவர் பொருளாதார மற்றும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப தினந்தோறுமோ வாரம் ஒருமுறை அல்லது இருமுறையோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வேண்டும். எல்லாரும் இத செய்துக்கிட்டுத்தானே இருக்கோம்னு நினைக்கத் தோணும். ஆனால் ஏதோ அவசர வேலை அல்லது ஏதோ சூழ்நிலையால் பேச முடியாவிட்டால் ஒருநிமிடம் அவர்களை தொலைபேசியில் கூப்பிட்டு பின்னர் பேசுவதாக சொல்லி விட்டால் அவர்களுக்கும் நிம்மதி.

நமக்கு இது சிறிய விஷயமாக இருக்கும். ஆனால் வழக்கமான தொலைபேசி அழைப்பு தாமதமாகும் போது வயதானவர்கள் நிச்சயம் பதற்றமடைவார்கள். அதை தவிர்ப்பது நலம்.

குழந்தைகளையும் தாத்தா பாட்டியோடு பேச ஊக்கப்படுத்த வேண்டும். அதற்காகவவது பிள்ளைகளுக்கு தாய்மொழியில் பேசக்கற்றுக் கொடுக்க வேண்டும். இன்று வெளிநாட்டில் உள்ள குழந்தைகள் அழகாக தாய் மொழியில் பேசுகிறார்கள் என்பதைப்பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு.

நம் பெற்றோர் வழக்கமான செக்கப்புக்கு போகும் டாக்டரின் தொலைப்பேசி எண்ணைத் தெரிந்து கொண்டு இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருதடவை அவர்களது உடல்நிலை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது பல டாக்டர்கள் இதை ஊக்கப்படுத்துகிறார்கள். நாம் இப்படி செய்யும் போது பெற்றோர், தன் பிள்ளை தூரத்தில் இருந்தாலும் நம் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். நிச்சயம் அது அவர்களுக்கு மனத்தெம்பைக் கொடுக்கும். நமக்காகவாவது தங்கள் உடல்நிலையை நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.

நம் வேலையைப்பற்றியும் வாழ்க்கைச்சூழலைப்பற்றியும் அவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்கள் குழந்தையின் (ஏழுகழுதை வயசானாலும் நாம் அவர்களுக்கு குழந்தைதான்) வேலைப்பளுவும் லைஃப்ஸ்டைலும் பிரச்சினைகளும் தெரிய வரும். புரிந்து கொள்வார்கள். அதற்காக எப்போதும் புலம்பிக் கொண்டிருந்தால் சலிப்பு தட்டி விடும்.

வயதாகும் போது தாம் ஒதுக்கப்படுகிறோமோ என்ற எண்ணம் வருவது இயல்பு. அதை அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்வது நம் பொறுப்பு. இனிமையான வார்த்தைகளும் நம் வாழ்வில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவர்களை கலந்தாலோசிப்பதும் அந்த வேலையை செய்து விடும். அவர்கள் சொல்லும் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் போது பக்குவமாக ஏன் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முடியலைன்னு விளக்கமா சொல்லிட்டோம்னா கண்டிப்பா ஏத்துக்குவாங்க.

கடைசியா பெற்றோருக்கும் ஒரு வார்த்தை. உங்கள் குழந்தைகள்தான் ஆனால் தனி மனிதர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு அவர்களிடம் ஏதேனும் வருத்தம் இருந்தால் அவர்களிடமே நீ இது செய்வது எனக்கு பிடிக்கவில்லை எனக்கு கஷ்டமா இருக்குன்னு மெதுவா அன்பா அவர்களை குற்றம் சாட்டாமல் சொல்லிவிட்டால் இருவருக்கும் பிரச்சினை இல்லை. அதை விட்டு மூன்றாம் மனிதரிடம் இதை சொன்னால் அதற்கு கண் காது மூக்கு எல்லாம் முளைத்து உங்கள் பிள்ளைகள் காதை எட்டும். தேவையற்ற மனசங்கடங்கள் உருவாகும்.

ரொம்ப அறுத்துட்டேன்னு புரியுது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்கள் தனிமையில் இருந்து, நாம் அறியாமல் செய்யும் சில தவறுகளால் மனம் வருந்துவதைக் கண்கூடாக பார்த்திருக்கிறேன். பிள்ளைகளுக்காக மேலே சொன்னவை அனைத்துமே பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் தாங்கள் எதிர்பார்ப்பதாக சொன்ன விஷயங்கள்தான். புதிதாக நான் ஒன்றுமே சொல்லவில்லை.

Thursday 4 March 2010

மீண்டும் ஒரு ஏதோவானந்தாவும் ஏமாளி மக்களும்

இன்று பதிவுலகின் ஹாட் டாப்பிக் நித்யானந்தா! எல்லாம் அடுத்த வேறு ஏதாவது நியூஸ் வர்ற வரைக்கும்தான். அப்புறம் இந்த நித்யானந்தாவை நாமும் மறந்து விடுவோம். வெளிப்படுத்திய ஊடகமும் மறந்து விடும். இப்போது வழக்கு பதிந்துள்ள காவல்துறையும் சிலநாட்களில் இதை மூலையில் போட்டு விடும் வழக்கம் போல. கொஞ்ச நாளில் இன்னொரு ஏதோவானந்தா வந்து விடுவான்.

மக்களும் அவன் பின்னால் பக்தி என்ற பெயரில் ஓடுவார்கள். ஏதேனும் பத்திரிக்கையில் அவனது ஆன்மீக உரைகள் வெளிவரும். நாமும் விழுந்து விழுந்து படிப்போம். கொஞ்ச நாளில் அவன் முகத்திரையும் கிழியும். இப்போது கொண்டாடியவர்கள் அப்போது அவன் படத்தை செருப்பால் அடிப்பார்கள். உருவ பொம்மை கொழுத்துவார்கள். அத்தோடு அடுத்த சீரியலில் மூழ்கிவிடுவார்கள்.

இப்படி எத்தனை போலிச்சமியார்களிடமும் ஃபைனான்ஸ் நிறுவனங்களிடமும் ஏமாந்தாலும் நாங்கள் ஏமாறப் பிறந்தவர்கள் என்ற சபதம் கொண்டவர்களாக மீண்டும் மீண்டும் ஏமாறுவார்கள். கண்ணீர் மல்க பேட்டி கொடுப்பார்கள். கொந்தளிப்பார்கள்


பேராசையும் எதையும் எளிதில் அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் இருக்கும் வரை இப்படிப்பட்ட போலிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டேதான் இருப்பர்கள். நம்மிடையே விழிப்புணர்வு இல்லாதவரை இவனைப்போன்றவர்களை தடுப்பது சிரமம்தான்

அது எங்க! நம்மக்கிட்ட விழிப்புணர்வு வர வுட்டுடுவாங்களா நம்ம பாழாப்போன அரசியல்வியாதிகள். எல்லாவற்றையும் இலவசமா கொடுத்து ஒரு டிவி பொட்டியையும் கொடுத்து அது முன்னாடியே சிந்திக்க விடாம கட்டிப் போட்டுருக்கானுங்களே! அப்புறம் எங்க இருந்து விழிப்புணர்வு முழிப்புணர்வு எல்லாம்!

பிட்ஸ்: நம்மூரு சாமியாருங்க இந்தோனேசியாவிலும் வேலையை காட்டிட்டதா ஒரு செய்தி! யோகா சொல்லிக் கொடுக்க வந்தாராம். வந்த இடத்தில் வேலையை காட்டிட்டாராம். இப்போ விசாரணை நடக்கிறதாம்.

Monday 1 March 2010

அல்லல் படுத்தும் பஸ் பயணம்

இந்தியாவில் பஸ்ஸில் பயணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் கொடுமை இது. சில ஆண்களின் வக்கிரப்பார்வை மற்றும் அசிங்கமான தடவல்களிலிருந்து ஒரு பெண் கூட தப்பித்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அனுபவமே எனக்கு இல்லை என்று சொல்பவர்கள் பஸ்ஸில் பயணித்திருக்க மாட்டார்கள் அல்லது வெளியில் சொல்ல கூச்சப்படுகிறார்கள்.

இந்த நாய்கள் சிறு குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை! கண்ணியமாக உடையணிந்தால் கூட இவர்களின் கழுகுப் பார்வைக்கு தப்ப முடிவதில்லை. போதாக்குறைக்கு இப்போது செல்ஃபோன் கேமராக்கள் வேறு. இந்த தொல்லைகளுக்கு பயந்தே படிக்கும் போது நான் கல்லூரிப் பேருந்தை தவிர மற்ற பஸ்களில் செல்வதை முடிந்த வரை தவிர்ப்பேன்.

எதற்கு பயப்பட வேண்டும் துணிச்சலுடன் எதிர்க்கலாமே என கேட்கலாம். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொன்னால் ஏன் எதிர்க்க தயங்குகிறோம் என்பது புரியும்.

அன்று நானும் என் தோழியும் புராஜெக்ட் விஷயமாக திருநெல்வேலி சென்று நாகர்கோவில் திரும்பிக் கொண்டிருந்தோம். சங்கர் நகரிலிருந்து ஏறியதால் பஸ்ஸில் கூட்டம். உட்கார இடம் கிடைக்கவில்லை. நின்று கொண்டுதான் பயணம். அந்த நிறுத்தத்திலேயே சில கல்லூரி மானவர்கள் தப்பு தப்பு கல்லூரி பொறுக்கிகள் ஏறினார்கள். ஏறியதிலிருந்தே நாம் எவ்வளவு விலகி நின்றாலும் நெருக்கியே நின்று உராசிக் கொண்டிருந்தார்கள். முதலில் அமைதியாக இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்தேன் கேட்கவில்லை. பின்னர் கோபம் வந்து செருப்பை கழற்றி அடிக்க ஓங்கி விட்டேன்.

என்னடி பெரிய பத்தினி மாதிரி பேசற அப்படீன்னு ஆரம்பிச்சு கேவலமா பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனால் மற்றவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை பெண்கள் உட்பட. அதன் பின்னும் அந்த பஸ்ஸில் பயணம் செய்வது கஷ்டம் என்பதால் ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் இறங்கி அடுத்த பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்தோம். நான்கு பேர் முன்னால் காரணமே இல்லாமல் கேவலப்பட்ட மன உளைச்சல்தான் எதிர்த்ததற்கு எங்களுக்கு கிடைத்த பரிசு.

ஒரு அநியாயம் நடக்கிறது ஆனால் அது எனக்கு நடக்காதவரை ஏன் என்று கேட்க மாட்டோம் என்ற மனநிலை நம்மிடையே ஊறிப் போயிருக்கிறது.

பெண்களுக்கு எதிரான இந்த கொடுமை இன்னும் நம் நாட்டில் தினம் தினம் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. கேரளாவில் பஸ்ஸில் பயணித்த ஒரு பெண்ணின் மீது ஒரு வக்கிரப்புத்தி ஜென்மம் தன் விந்தை வெளியேற்றி ரசித்திருக்கிறான். எழுதவே கூசுகிறது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் சுதாரித்துக் கொண்டு நேரே காவல்நிலையம் சென்று புகாரளித்துள்ளார். ஆனால் அதன் பின் அரங்கேறியவைதான் மிகவும் வேதனைக்குரியது.

விசாரணை என்ற பெயரில் அந்த பெண்ணை மிக அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருகின்றனர் நம் காவல்துறை அதிகாரிகளும் வழக்கறிஞர்களும். சமூகமும் இவரையே குற்றவாளியாக்கியது. இவர் புகாரளித்தது தவறாம்! வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு சும்மா இருந்திருந்தால் இப்படி கோர்ட்டும் போலீஸ் ஸ்டேஷனும் ஏறி இறங்கியிருக்கவேண்டாமாம். இப்போது குடும்பத்துக்கும் கெட்ட பெயர் வந்து விட்டதாம்! என்ன கொடுமை இது?!

பெண்ணாய் பிறந்ததற்காக தனக்கெதிரே நடந்த கொடுமையைக் கூட வெளியில் சொல்லாமல் அமைதியாக பொறுத்துப் போகச் சொல்கிறதா சமூகம்?! நல்லவேளையாக அந்த பெண் மனோதிடம் மிக்கவராக இருந்ததால் இத்தனை தடைகளையும் தாண்டி வந்திருக்கிறார். வழக்கு முடிய ஆன காலம் எவ்வளவு தெரியுமா அதிகம் இல்லை 10 வருடங்கள் மட்டுமே! அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை வெறும் அபராதம் மட்டுமே!

ரயிலிலும் பிரச்சினைதான். நான் சென்னை சென்று கொண்டிருந்த போது மனைவியுடன் ஏறிய ஒருவன் எதிர் பெர்த்தில் மனைவி படுத்திருக்கும் போதே அப்பர் பெர்த்தில் படுத்திருந்த என்னிடம் வாலாட்ட முயன்றான். கையில் இருந்த பெல்ட்டால் நாலு போடு போட்ட பின் முக்காடு போட்டுக் கொண்டான் அந்த பொறுக்கி.

சில ஆண்களிடம் இருக்கும் இந்த வக்கிரப் புத்திக்கு காரணம் என்ன? எல்லாரும் சொல்வது போல் ஆண் பெண்ணை இயல்பாக பழகவிடாமல் தடுக்கும் நம் சமூக அமைப்பா அல்லது பெண்ணைப் போகப்பொருளாக காட்டும் மீடியாக்களா அல்லது ரவுடியிசத்தை ஹீரோயிசமாக காட்டும் சினிமாக்களா?! எதுவாக இருந்தாலும் இது மாற வேண்டும்.