Tuesday, 23 November 2010

புத்தியும் மனமும்!

அப்பா உன் கண்ணில் செய்யும்


அறுவை சிகிச்சை என்னவோ

அரைமணி நேரம்தான்

ஆபத்தும் இல்லாததுதான்

காலை சென்று மாலையில் வீடு திரும்பி விடுவாய்தான்

சுற்றமும் நட்பும் உன்னருகில் இருக்கிறதுதான்

அத்தனையும் என் புத்திக்கு தெரிகிறது

மனம் கேட்க மறுக்கிறதே அப்பா!

உன் அருகில் நானின்றி

அயல்நாட்டில் அமைதியின்றி தவிக்கிறேன்

அலைபேசியில் ஆயிரம் தைரியம் சொன்னாலும்

உன் கண்ணில் ஆயுதமிடப் போவதை எண்ணி

என் கண்ணில் நீர் வடிகிறதே

அண்ணனும் இதே மனநிலையில்தான்

செய்வதறியாது தவிக்கிறான்

விரைவில் நீ குணமடைய வேண்டுமென

பிரார்த்திக்க மட்டுமே முடிகிறது எங்களால்!

Thursday, 18 November 2010

சந்தேகமுங்கோ!

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஹலோ எங்க ஓடறீங்க? சத்தியமா இது ஜெய்லானி கேட்கற மாதிரி சந்தேகம் இல்லை.  நம்புங்க அட நம்புங்கப்பா? பாருங்க ஜெய் உங்க சந்தேகங்கள் நம்ப மக்களை எம்பூட்டு தூரம் பாதிச்சிருக்குன்னு :)
என்ன பிரச்சினைன்னாலும் நம்ப எதிர்க்கட்சி எம்பி க்களும் எம்எல்ஏ க்களும் உடனே நாடாளுமன்றத்தையும் சட்டசபையையும் கத்தி கூச்சலிட்டு குடுமிப்பிடி சண்டையிட்டு ஸ்தம்பிக்க வைத்து ஒத்தி வச்சுடறாங்களே! அதனால அந்த பிரச்சினைக்கு என்னிக்காவது ஏதாச்சும் உருப்படியான முடிவு வந்திருக்கா?

அப்புறம் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிங்கற பேர்ல சபையை கூட்டி உடனே ஒத்தி வைக்கறது எல்லாம் ஓவரா இல்லை! இதுவா அஞ்சலி செலுத்தும் லட்சணம்? ஒரு நிமிடம் கண்மூடி மௌனமாக அஞ்சலி தெரிவித்து விட்டு அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் என்ன?

ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் கூடணும்னா கோடிக்கணக்கில் செலவாகுதாமே!  இப்படி ஒத்தி வைக்கறதுனால ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டறது யார்? இளிச்சவாய் மக்கள்தானா :(.

இவங்களுக்கு எல்லாம் சபை கூடும் நாளில் அகவிலைப்படி அந்தப்படி இந்தப்படின்னு படியளக்கறாங்களாமே அந்த படிகள் இப்படி ஒத்தி வைக்கப்படும் நாளுக்கும் சேர்த்துதானே கொடுக்கப் படுது?! யார் அப்பன் வீட்டுப் பணம் இப்படி பணியே செய்யாதவர்களுக்கு படி என்ற பெயரில் வீணடிக்கப் படுகிறது?

திடீர்னு எனக்கு ஏன் இந்த சந்தேகம்னு பார்க்கறீங்களா? நம்ப மாண்புமிகு(குறை) முன்னாள் அமைச்சர் ராசா விவகாரதில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது. ஏதாச்சும் பயன் இருக்கா :(. தெரிஞ்சவங்க தெளிவு படுத்தினா புண்ணியமா போகும்.

Tuesday, 9 November 2010

கவிசிவானந்தாவின் தனிமை இனிமை கொடுமை-வாழ்வியல் போதனைகள் :)

பெரும்பாலானவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி "எப்படி தனியா இருக்கறீங்க கஷ்டமா இல்லையா?". தனியா இருக்கறது அவ்வளவு கஷ்டமா என்ன? இவங்க அகராதியில் காலையில் ரங்ஸ் அலுவலகம் சென்றதிலிருந்து இரவு திரும்ப வரும்வரை வீட்டில் இருப்பதுதான் தனிமை, தனியாக இருப்பது எல்லாம்.


நம்ப அம்மாவும் இப்படித்தானே இருந்தாங்க. அவங்களுக்கு இல்லாதிருந்த தனிமை உணர்வு இப்போ எப்படி வருது? வெளிநாட்டில் இருப்பதாலா?! நானும் வெளிநாட்டில்தான் இருக்கிறேன். ஆனா எனக்குத் தனிமை உணர்வு இல்லையே! அது ஏன்?!

யோசிச்சுப் பார்த்தா எனக்கு புரிஞ்சது இதுதான். மனசு... இதுதான் தனிமை உணர்வுக்கும் அது இல்லாமல் இருப்பதற்கும் ஒரே காரணம்.

திருமணமாகி வெளிநாடு வரும் பல பெண்களும் சந்திப்பதுதான் இந்த பிரச்சினை. கணவர் துணையின்றி வெளியில் செல்ல முடியாது. கணவர் வரும் வரை வீட்டிற்குள்ளேயேதான் இருக்க வேண்டும். இவை ஒரு வித மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது தனிமையின் இனிமையும் கொடுமையும்.

எந்த விஷயத்தையும் பாசிட்டிவாகவும் பார்க்கலாம். நெகடிவாகவும் பார்க்கலாம். திருமணமான புதிதில் ஏற்படும் இந்த தனிமையை எப்படி பாசிட்டிவா பார்க்கலாம்?  கணவன் மனைவிக்கிடையே மூன்றாவது மனிதர் இடையூறு இல்லாமல் இருக்கலாம். இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்க இந்த தனிமையை பயன் படுத்திக் கொள்ள முடியும். கணவர் வரும் நேரத்தில் புன்னகையுடன் எதிர்கொண்டு இனிமையாக பேசி களித்து சந்தோஷமாக இருந்தால் அதுவே அடுத்த நாளுக்கான புத்துணர்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்குமே!

இதையே எப்படி நெகடிவாக அணுகலாம்?  பகல் எல்லாம் நான் தனியாக இருக்கிறேன். கஷ்டப் படுகிறேன்னு கணவர் அலுவலகத்தில் இருந்து வந்ததும் மூக்கைச் சிந்தினால் முதலில் கணவர் பரிதாபப் பட்டு நம்மை வெளியில் அழைத்து சென்று சமாதானப் படுத்த முயன்றாலும் இது தொடர்கதையானால் அவருக்கே சலிப்பு தட்டி விடும். தாம்பத்தியத்தையே அது பாதிக்கும். தேவையா இது?

இப்போதெல்லாம் திருமண நிச்சயதாம்பூலத்திற்கும் திருமணத்திற்கும் இடையே குறைந்தது ஆறு மாத காலம் இடைவெளி இருக்கிறது. அந்த காலத்தில் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அப்போதே அந்த ஆண் அவர் இருக்கும் ஊரைப் பற்றி அவருடைய வேலையைப் பற்றி வேலை நேரத்தைப் பற்றி பெண்ணிடம் விளக்கி விட்டால் அந்த பெண்ணாலும் புதிய வாழ்க்கையை எதிர்கொள்ள மனதைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். (திருமணம் நிச்சயிக்கப்பட்ட, நிச்சயிக்கப்பட இருக்கும் மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ளவும் :D)

என்னதான் மனதைத் தயார்ப் படுத்தினாலும் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். தனிமையை வெல்ல இணையம் ஒரு வரப்பிரசாதம். மெல்லிய இசையை வீட்டில் எப்போதும் ஒலிக்க விடலாம். நமக்குப் பிடித்த ஹாபியை தொடரலாம். படிக்க நினைத்து முடியாது போன விஷயங்களைப் புதிதாக கற்றுக் கொள்ளலாம். மொத்தத்தில் நமக்குப் பிடித்த விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு நம்மை எப்போதும் எங்கேஜ்டாகவே வைத்திருந்தால் தனிமைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பீங்க என்னை மாதிரி :-)).

என்னைப் பொறுத்த வரை தனிமை எனக்கு கொடுமையாக இல்லை. இனிமையாகவே இருக்கிறது :-). ஆரம்பத்தில் கொடுமையாக இருந்தது உண்மை. ஆனால் எதிர்பார்ப்புகளைத் தூர எறிந்து விட்டு யதார்த்தத்தை மனம் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்ததும் இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. சந்தோஷமாகவே இருக்கிறோம்.

எனக்கு மற்றவர்கள் எல்லாம் எப்படி தனியா இருக்கீங்கன்னு கேட்கும் போதுதான் நாம் தனியாத்தான் இருக்கோமோ அப்படீன்னு தோணுது :(. ஆனால் நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரியும். என் மனதுக்குத் தெரியும். என் சொந்தங்கள் நட்புகள் தொலைவில் இருந்தாலும் எனக்காக அவர்கள் இருக்கிறார்கள் என்று என் மனதுக்கு நல்லாவே தெரியும். நான் தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லை :-).

தனிமையை தூக்கி எறியுங்க சந்தோஷமா இருங்க. எனக்கு அது இல்லையே இது இல்லையேன்னு இல்லாததை நினைத்து இருப்பதைத் தொலைக்காமல் இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவேது :-)
 
அன்புடன்,
கவிசிவானந்தா :-)

Wednesday, 3 November 2010

மலரும் தீபாவளி நினைவுகள் :-)

தீபாவளி வருது. அது பற்றி பதிவு போடலேன்னா மொக்கை போடும் பதிவுலகம் என்னாவது?

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி அலங்காரம்(2009ல்)

    சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி அலங்காரம்(2008ல்)சிறுவயதில் தீபாவளின்னா (அப்போ நீ கிழமான்னு கேணத்தனமா உண்மையை எல்லாம் கேட்கப் படாது :D) கொண்டாட்டம் குதூகலம்தான். புதிய காலெண்டர் வந்தவுடன் பார்ப்பது இரண்டு விஷயங்கள். முதலில் எனது பிறந்த நாள்(நட்சத்திரப் படி) . அடுத்தது தீபாவளி!

எப்படி பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதம் முன்பே எங்கப்பாவை ட்ரெஸ் வாங்கணும்னு கேட்டு நச்சரிப்பேனோ அதே போல் தீபாவளிக்கும் நச்சரிக்க ஆரம்பித்து விடுவேன் :). பெரும்பாலும் ரெடிமேட் ஆடைகள்தான். அதனால் டெய்லர் கடையில் போய் காத்து நிற்கும் வேலையெல்லாம் அப்போ கிடையாது.

நல்ல நாள் எல்லாம் பார்த்து அப்பா அம்மா அண்ணா நான்னு தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்க கிளம்புவோம். நமக்கு ட்ரெஸ்சை விட அதன் விலைதான் ரொம்ப முக்கியம் :). அழகான ட்ரெஸ்ஸாக இருந்தாலும் விலை குறைவானது என்றால் எனது அப்போதைய அகராதியில் நல்லா இல்லைதான் :). எங்க அப்பாவுக்கு கொஞ்சமே கொஞ்சம் எங்கயாவது ஜரிகை இருந்து விட்டால் போது ரொம்ப பிடித்துப் போகும் (அப்பா அப்படித்தானே :D). அப்படி இப்படி கொஞ்சம் அழுது அடம் பிடிச்சு நான் நினைக்கற ட்ரெஸ்ஸை வாங்கிடுவேன். அண்ணா பாவம் அதிகமா எதுவும் சொல்ல மாட்டார். கொஞ்சம் வளர்ந்த பிறகு அவரே ஃப்ரெண்ட்ஸோட போய் எடுத்துக்குவார். அம்மாவும் அதிகமா எதுவும் சொல்ல மாட்டார். (நீதான் குடும்பத்தில் ரவுடியான்னு கேட்கக் கூடாது. ஹி ஹி கடைக்குட்டி அதான் அப்படி)

பலகாரங்கள் எல்லாம் அம்மாவும் பாட்டியும் பத்து நாட்களுக்கு முன்னாடியே செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. அச்சு முறுக்கு, முறுக்கு, முந்திரி கொத்து இந்த மூணு ஐட்டங்களும் தவறாமல் எல்லா தீபாவளிக்கும் செய்யப்படும். வழக்கம் போல் நான் முதலில் எதுவும் சரியாக சாப்பிடாமல் எல்லாம் தீர்ந்த பிறகு நான் சாப்பிடவே இல்லைன்னு சொல்லி அழுவேன் :(. எங்க பாட்டி என் குணம் தெரிந்தே கொஞ்சம் தனியா வச்சிருப்பாங்க :)

எட்டு வயது வரை நாங்கள் இருந்தது ஒரு கிராமம். தீபாவளிக்கு முன் சிவகாசியில் படித்துக் கொண்டிருந்த உறவினர் ஒருவரிடம் சொல்லி அப்பா பட்டாசு வாங்கிட்டு வரச் சொல்வார். கம்பி மத்தாப்பு வைக்கக் கூட பயப்படும் படுதைரியசாலி நான் :). அப்பா வாழைத்தண்டில் கம்பி மத்தாப்பை குத்தி பிடிக்க வைப்பார் :). அதையும் அப்படியே கையை நீட்டிக் கொண்டு தலையை திருப்பிக் கொண்டு பிடிப்பேன். ஆனால் அதிலும் ஒரு சந்தோஷம். அண்ணாவும் அப்பாவும் சேர்ந்து ராக்கெட் எல்லாம் வெடிப்பாங்க.

கடைசியா ட்ரெயின் வெடி! நீளமா கயிறு கட்டி அதன் ஒரு முனையில் பத்த வச்சா அது அப்படியே ட்ரெயின் மாதிரி போகும். அதைப் பார்க்க எல்லாரும் ஏதோ புல்லட் ட்ரெயினின் வெள்ளோட்டம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நிற்போம் :)

கொஞ்சம் வளர்ந்த பிறகு மதுரை நாகர்கோவில்னு வந்துட்டோம். மதுரையிலும் தீபாவளி ஜாலிதான். முந்தைய நாள் இரவு வீட்டிலுள்ள ஆண்கள் மட்டும் (நிறைய உறவினர்கள் மதுரையில் இருந்ததால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு வீட்டில் கூடிதான் தீபாவளி கொண்டாட்டம்) மதுரை டவுன்ஹால் ரோட்டுக்கு போவாங்க பட்டாசு வாங்க. எல்லா சாமான்களும் மிகவும் மலிவாக கிடைக்கும். இப்போது நடக்கிறதான்னு தெரியலை. அங்கேயே ஒரு பெரிய பையோ பக்கெட்டோ வாங்கி அது நிறைய பட்டாசு வாங்கிட்டு வருவாங்க. கம்பி மத்தாப்பு மட்டுமே எனக்கு :(

அப்புறம் நாகர்கோவிலில் தீபாவளி. சேட்டிலைட் தொலைக்காட்சியின் தாக்கம் ஆரம்பித்திருந்த நேரம். நானும் கம்பி மத்தாப்பிலிருந்து ஊசிவெடிக்கு பிரமோஷன் ஆகியிருந்தேன். அதைக் கூட ஏதோ ஆட்டம் பாம் ரேஞ்சுக்கு திரியை எல்லாம் பிய்த்து ஊதுபத்தியால் பயந்து பயந்து வைப்பேன் :)

அப்புறம் காலேஜ் போன பிறகு வெடிகளின் மீது நாட்டம் குறைந்து விட்டது. ஆனாலும் தீபாவளின்னா சந்தோஷம் இருந்துச்சு.
இப்போ இங்கே தீபாவளி வார நாட்களில் வந்தால் வார இறுதிக்கு தள்ளிவைக்கப் படுகிறது :(. தீபாவளி நேரத்தில் இந்தியாவில் இருந்தால் கூட முன்பிருந்த கொண்டாட்டம் குறைவாகவே இருக்கிறது. எல்லோரும் டிவி முன்னே தவம் கிடக்கிறார்கள். தெருக்களில் குழந்தைகள் வெடி வெடிப்பது கூட குறைந்து விட்டது :(. ஏதோ கடமைக்காக கொண்டாடுவது போல் இருக்கிறது.
இங்கு தீபாவளிக் கொண்டாட்டங்கள் வசதியான நாட்களுக்கு மாற்றப் பட்டாலும் கூட அன்றைய நாள் நிஜம்மாகவே தீபாவளி போல் நண்பர்கள் இணைந்து கொண்டாடுகிறோம். வெடிகள் வெடிக்கிறோம். ஆட்டம் பாட்டம்னு சந்தோஷமா இருக்கோம். ஆனாலும் எதையோ இழந்த உணர்வு இருக்கவே செய்கிறது. இந்த தடவை எங்கள் ஊர் தீபாவளிக் கொண்டாட்டம் நவம்பர்28 :).

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தலைதீபாவளி கொண்டாடுபவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

தனி தீபாவளி கொண்டாடும் சகோஸ் அடுத்த வருடம் ஜோடியோடு தலை தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்! :)

Tuesday, 2 November 2010

தூதரகம்னா இப்படி இருக்கணும்!

நமது இந்திய தூதரகங்கள் மீது பொதுவாக நமக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. கசப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கும். தூதரக அதிகாரிகளை பலவாறாக குறை சொல்லியிருப்போம்.


ஆனால் சில நல்ல இந்திய தூதரகங்களும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டவே இந்தப் பதிவு.

நாங்கள் இருப்பது இந்தோனேஷியாவில். (அதான் தெரியுமே திரும்ப திரும்ப எதுக்கு சொல்லிக்கிட்டு :D). நாங்கள் இருக்கும் தீவின் அருகே இருக்கும் இந்திய தூதரகம்னா அது மேடான் ல் இருக்கும் தூதரகம்தான். கடல் கடந்து விமானத்தில்தான் போக முடியும். சிறு சிறு தூதரக வேலைகளுக்கு கூட போய் வருவது என்பது சிரமம்.

அதனால் தூதரக அதிகாரிகள் இங்குள்ள இந்தியர்கள் சங்கத்தோடு இணைந்து வருடத்திற்கு இரண்டு முறை நாங்கள் இருக்கும் தீவில் கேம்ப் நடத்துவார்கள். கேம்ப் நடக்க ஒரு மாதம் முன்பாகவே இந்திய சங்கங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் மெயில் மூலம் தெரிவிக்கப் பட்டு விடும்.

அப்போது தங்களுக்கு என்னென்ன பாஸ்போர்ட் மற்றும் தூதரக சேவைகள் வேண்டுமோ அது பற்றி தூதரகத்துக்கு மெயில் அனுப்பி விட வேண்டும். ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டியதையும் செய்து விட வேண்டும். உதாரணமாக பிறப்புச் சான்றிதழ் பெறுவது, பாஸ்போர்ட் புதுப்பித்தல், பாஸ்போர்ட்டில் கணவர்/மனைவி பெயர் சேர்த்தல், பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்க வேண்டிய சான்றிதழ் பெறுதல் இப்படி தூதரகத்தில் செய்யப்படும் அத்தனை சர்வீஸ்களும் செய்து கொடுக்கப் படும்.

கேம்ப் நடக்கும் அன்று காலையில் நம்மிடம் இருந்து டாக்குமெண்டுகள் மற்றும் கட்டணத் தொகையை பெற்றுக் கொள்வார்கள். மாலையில் போய் வாங்கிக் கொள்ளலாம். சில வேலைகள் உடனேயே முடிந்து விடும். ஒரு மணிநேரத்திற்குள் கையில் கொடுத்து விடுவார்கள்.அப்போது தூதரக அதிகாரிகளும் நம்மோடு தோழமையோடு பேசுவார்கள். நமக்கு ஏதும் பிரச்சினை இருக்குதான்னு கேட்டு தயங்காமல் அணுகுங்கள் என்றும் சொல்லுவார்கள்.

இந்த சேவைகளை நாம் பெற தூதரகத்தில் நம் பெயரை பதிந்திருக்க வேண்டும். ஏற்கெனவே பதியாதவர்கள் இந்த கேம்ப் நடக்கும் போதே பதிந்து கொள்ளலாம். அப்படி பதிந்து கொண்டால் கேம்ப் நடக்கும் வரை கூட காத்திருக்கத் தேவையில்லை.

ஆன்லைனில் அப்ளை பண்ணி விட்டு டாக்குமெண்டுகளை கூரியரில் அனுப்பி வைத்து தூதரக அதிகாரிக்கும் ஒரு மெயில் செய்து விட்டால் போதும். நமக்கான வேலைகள் எளிதில் முடிந்து விடும். நமக்கு ஏதும் சந்தேகம் என்றாலும் நேரடியாக தொடர்பு கொண்டு பேச முடியும்.

சென்ற ஆண்டு தீபாவளிக்கு இந்திய தூதரகம் இங்குள்ள இந்தியர்களுக்காக சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அருமையாக நடத்தினார்கள் (மழைதான் கொஞ்சம் சொதப்பிடுச்சு).

ஒருமுறை இங்கே சுற்றுலா வந்த இந்திய பயணி இறந்து விட அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க எல்லா உதவிகளையும் தூதரகம் செய்தது. ஆனால் பொதுமக்களாகிய நாமும் அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த பத்து வருடங்களில் இரண்டு முறை பாஸ்போர்ட் அடிஷனல் புக்லெட் வாங்கியிருக்கிறேன். ஒருமுறை பாஸ்போர்ட் புதுப்பிக்கவும் செய்தாச்சு. எந்த பிரச்சினையும் இல்லை. பாஸ்போர்ட் புதுப்பிக்க எல்லாவற்றையும் கூரியரில்தான் அனுப்பினேன். இரண்டு வாரத்தில் வீடு தேடி பாஸ்போர்ட் வந்திடுச்சு.

எங்கள் நண்பர் ஒருவர் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு தவித்த போது கூட அவருக்கு எல்லா உதவிகளையும் செய்து புது பாஸ்போர்ட் கிடைக்க வழி செய்து கொடுத்தது.

எல்லா தூதரகமும் இதுபோல் இருந்தால் நல்லா இருக்கும் :). ஒருவேளை மற்ற நாடுகள் போல் இல்லாமல் இங்கு இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் எல்லோரையும் அவர்களால் சரியாக கவனிக்க முடிகிறதோ!

நாமும் இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமாவது தமிழர் சங்கம், மலையாளி சங்கம், பஞ்சாபி சங்கம்னு மாநில வாரியா ஒரு சங்கம் வச்சுக்காம பொதுவா இந்திய சங்கமாக இணைந்து தூதரகங்களோடு இணைந்து பணியாற்றினால் எல்லோரும் பயனடையலாம்.

சில தூதரகங்களில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவு. அப்படிப்பட்ட சூழல்களில் இது போன்ற கேம்ப்கள் அமைத்து தன்னார்வ ஊழியர்களையும் இணைத்துக் கொண்டு பணிகளைச் செய்தால் பலரும் ஒரே நேரத்தில் பலனடையலாம். ஒரேயடியாக குறை சொல்லிக் கொண்டிருக்காமல் இப்படியும் முயற்சிக்கலாமே!

டிஸ்கி:

ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகம் பற்றி தெரியவில்லை. மேடானில் உள்ள இந்திய தூதரகம் சிறந்ததுதான். எனக்குத் தெரிந்தவரை இங்கே யாரும் தங்களுக்கு கசப்பான அனுபவம் நடந்ததாக சொல்லவில்லை.