Saturday, 28 August 2010

இவர்களெல்லாம் மருத்துவர்கள்தானா? மனிதர்கள்தானா?

நேற்று ஒரு மலையாள சேனலில்(அம்ரிதா டிவி) பார்த்த ஒரு நிகழ்ச்சி இப்படி கூடவா மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் இருப்பார்கள் என்று கோபப்பட வைத்தது.

அது 'கதையல்ல நிஜம்' போன்றதொரு நிகழ்ச்சி. பல பிரச்சினைகளுக்கும் இரு தரப்பினரையும் அழைத்து ஒரு லீகல் பேனல்(Legal pannel) முன்பு வைத்து பேசி சுமூகமான முடிவை எட்ட உதவுகிறார்கள். சில எபிசோடுகளில் சுமூக முடிவை எட்டாமல் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறோம் என்று பிரிவதும் நடக்கிறது.

நேற்று நடந்த நிகழ்ச்சியின் சுருக்கம் இதோ.

24வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரித்த ஆறாவது வாரத்தில் ரத்தப்போக்கு ஏற்படவே உடனே கணவரும் மாமியாரும்(கணவரின் அம்மா) சேர்ந்து பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கர்ப்பம் கலைந்து விட்டதாகவும் டி அண்ட் சி செய்யவேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்கள். கணவரும் சம்மதித்து அட்மிட் செய்திருக்கிறார்.

திடீரென்று ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்து நர்சுகளும் டாக்டரும் உள்ளே போவதும் வருவதுமாக பரபரப்பாக இருந்திருக்கின்றனர். ஒருவர் வந்து அந்த பெண்ணின் கணவருக்கு ப்ளட் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூட்டிக் கொண்டு போய் ரத்த சாம்பிள் எடுத்திருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து கணவரின் சகோதரியை அழைத்து பலரின் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு ஹெச் ஐ வி பாசிட்டிவ் எனவும் பயப்பட வேண்டாம் இன்னும் 20வருடங்கள் உயிரோடு இருப்பார் எனவும் சொல்லியிருக்கிறார். குடும்பத்தினருக்கு பயங்கரமான அதிர்ச்சி. இதற்கிடையே கணவரின் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் வரவும் அவருக்கு நெகட்டிவ் என்றும் சொல்லியிருக்கின்றனர்.

மருத்துவனை ஊழியர்கள் பலரும் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் போவதும் அந்த பெண்ணை எட்டிப் பார்ப்பதுமாக இருந்துள்ளனர். ஆனால் அப்பெண்ணோ சுயநினைவற்ற நிலையில்(அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டிரூப்பதால்). அந்த பெண்ணின் மாமியார் பொறுக்க முடியாமல் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் நுழைந்ததும் அங்கு அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்துள்ளது. அந்த பெண்ணின் மீது எந்த துணியும் இல்லாமல் அப்படியே படுக்க வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான பலரும் (ஆண்கள் உட்பட) வந்து எட்டிப் பார்த்து விட்டு போயிருக்கின்றனர். எந்த ஒரு நர்சும் அந்த பெண்ணின் மீது ஒரு போர்வையை எடுத்துப் போடக் கூட மனமற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். அருகில் செல்லவே தயங்கியிருக்கின்றனர்.

அந்த மாமியாரும் அவரது பெண்ணும் சேர்ந்து இந்த பெண்ணுக்கு உடை போட்டு விட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து நடந்து மூன்று கட்ட பரிசோதனைகளிலும் அந்த பெண்ணுக்கு ஹெச் ஐ வி நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளது. அந்த மூன்று டெஸ்ட்களும் முடிந்து ரிசல்ட் வரும் நாள் வரை அந்த பெண்ணுக்கு உற்ற துணையாக இருந்து கவனித்துக் கொண்டது கணவரும் மாமியாரும்தான். அந்த பெண்ணின் தாய்க்கு தகவல் தெரிவித்து அவரையும் கலங்கச் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கவில்லை. ஒருவேளை பாசிட்டிவ் ஆக இருந்தால் மூவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

இதன் பின்னர் முதலில் சென்ற மருத்துவமனையை தொடர்ந்து விளக்கம் கேட்டதற்கு சரியாக பதிலளிக்காமல் இழுத்தடிதிருக்கின்றன்ர். நேற்றைய நிகழ்ச்சிக்கும் அவர்கள் வரவில்லை. மருத்துவமனைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க எல்லா விதத்திலும் உதவுவதாக அம்ரிதா டிவி உறுதியளித்துள்ளது .

எனக்குத் தோன்றிய சந்தேகங்கள்

1. ஹெச் ஐ வி டெஸ்ட் ரிசல்ட்டின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது சட்டம். அது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
2. டி அண்ட் சி செய்யப்படும் பெண்ணுக்கு அவரது அனுமதியில்லாமலேயே ஹெச் ஐ வி டெஸ்ட் செய்ய வேண்டியதின் அவசியம் என்ன?
3. முதல் டெஸ்டில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தால் அடுத்த இரண்டு கட்ட சோதனைகளுக்கு பின்னர் மட்டுமே பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
4. ஹெச் ஐ வி தொடுவதால் தொற்றுவதில்லை என்பது மருத்துவருக்கும் அங்கு வேலை பார்க்கும் நர்சுகளுக்கும் தெரியாதா?
5. அந்த கணவரும் மாமியாரும் கொஞ்சம் விவரம் உள்ளவர்களாக இருந்ததால் அந்த பெண்ணை அங்கேயே நிராதரவாக விட்டுச் செல்லாமல் வேறுமருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தாலும் அந்த குடும்பத்தினர் அனுபவித்த மனவேதனைகளுக்கு யார் பரிகாரம் செய்வார்கள்?

இதுபோன்ற மருத்துவர்கள் உண்மையிலேயே மருத்துவம் படித்தவர்கள்தானா? முதலில் அவர்கள் மனிதர்கள்தானா?

இந்த லட்சணத்தில் அந்த மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டதாம் :(. அங்கீகாரம் கொடுப்பதற்குத்தான் கேதன் தேசாய் போன்றவர்கள் இருக்கின்றனரே! இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

Wednesday, 25 August 2010

எனக்கொரு சந்தேகம் நான் இந்தியரா?!


நான் கடந்த 10வருடமாக வெளிநாட்டில் இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே இந்தியாவில் இருக்கிறேன். என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது. அப்போ நான் இந்தியனா அல்லது நான் இந்தோனேஷியாவில் வாழ்வதால் இந்தோனேஷியனா?

எனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்ததுன்னா...

நம்ப செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியரான்னு நம்ப மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு சந்தேகம் வந்திடுச்சாம் :-(. நம் நாட்டுக்காக விளையாடி நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். பத்ம விபூஷன் விருதால் சிறப்பிக்கப்பட்டவர். முதல் கேல் ரத்னா வாங்கியவர். எப்போதும் போட்டிகளில் விளையாடும் போதும் இந்திய கொடி வைத்துக் கொண்டுதான் விளையாடுகிறார். இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்.

விளக்கமான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

இம்பூட்டும் இருக்கறவர பார்த்தே நீ இந்தியனான்னு சந்தேகப்படும் போது நானெல்லாம் எம்மாத்திரம்?

எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் இருக்குதுங்கோ யாராச்சும் தெளிவு படுத்தினா புண்ணியமா போகும்.

சோனியாகாந்தி இத்தாலியில் பிறந்தவர். இந்தியாவில் இருப்பவர் அவர் இந்தியரா இத்தாலியரா?

அவரின் தலைமையின் கீழ் ஆளும் கட்சியான காங்கிரஸ் இயங்குவதால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எந்த குந்தகமும் வந்து விடவில்லையா?

முக்கியமான சந்தேகம் வெளிநாட்டில் இருக்கும் நாமெல்லாம் இந்தியரா இல்லை நாடில்லாத நாடோடிகளா?

Monday, 23 August 2010

பரிசுக் கவிதை

அறுசுவை.காமில் நடந்த கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை இங்கே

நான் கலந்து கொண்ட முதல் கவிதைப் போட்டி இது. பரிசு பெற்ற மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன் :-)).

Friday, 20 August 2010

ஏர் இந்தியா லொள்ளு

இந்த ஏர் இந்தியா ஆட்களோட லொள்ளு தாங்க முடியலப்பா. திடீர்னு ஃப்ளைட்டை கேன்சல் பண்ணிடறானுங்க. இல்லேன்னா ஒருமணிநேரம் இரண்டு மணி நேரம் இல்லை ஒருநாள் இரண்டுநாள் தாமதமாகத்தான் புறப்படவே செய்யும். சரி அதையாவது பொறுப்பா பயனிகளுக்கு சொல்லுவானுங்களான்னு கேட்டா அதுவும் கிடையாது.

எனக்கென்னவோ இவனுங்க மற்ற ஏர்லைன்ஸுக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுக்கவே இப்படி செய்யறானுங்களோன்னு சந்தேகம்... இல்லை இல்லை உறுதியாவே சொல்லலாமோன்னு தோணுது :(. தாமதமாவதற்கு இவனுங்க சொல்ற காரணம் பைலட் இல்லை பைலட் வரலை பைலட்டுக்கு ட்யூட்டி டைம் முடிஞ்சிடுச்சும்பானுங்க. ஏன் இவனுங்களுக்கு முன்னாடியே ஃப்ளைட் ஷெட்யூல் எல்லாம் தெரியாதா? அதற்கேற்ற மாதிரி பைலட் ட்யூட்டி ஷெட்யூல் பண்ண முடியாதா? அப்படி பைலட் பற்றாக்குறைன்னா புதிய ஆட்களை எடுக்கணும். இல்லேன்னா பைலட் எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி முதலிலேயே ஷெட்யூல் செய்யணும்.

இதையெல்லாம் விட்டுட்டு அவனுங்க பொறுப்பில்லாம பயணிகளை அலைக்கழிப்பானுங்களாம். சும்மா ஃப்ரீயாவா ஃப்ளைட்டுல ஏத்தறானுங்க. இதையெல்லாம் கேட்டா கோர்ட்டுக்குப் போவியா போ எனக்கொண்ணும் பிரச்சினை இல்லேன்னு தெனாவெட்டா பதில் சொல்றானுங்க.

என் அண்ணி இந்தியாவுக்கு போறதுக்காக சிங்கப்பூர் டூ திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் மூன்று மாதத்திற்கு முன்பே டிக்கெட் புக் பண்ணியிருந்தாங்க. பயணத்திற்கு ஒருவாரம் இருக்கும் முன்பு எதற்கும் ஃப்ளைட் டைமை செக் பண்ணிக்கலாம்னு ஏர் இந்தியா வெப்சைட்டுக்குப் போய் தேதியையும் ஃப்ளைட் நம்பரையும் கொடுத்தா அன்னிக்கு ஃப்ளைட்டே இல்லேன்னு மெசேஜ் வருது. சரி நாம் ஃப்ளைட் நம்பரைத் தப்பா டைப் செய்துட்டோமோன்னு திரும்பவும் ட்ரை பண்ணினா அப்பவும் அதே மெசேஜ்தான் வருது.

இது என்னடா வம்பா போச்சுனு ஏர் இந்தியா ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணி கேட்டா நீங்க வெப் சைட்டிலேயே செக் பண்ணுங்க அப்படீன்னு பொறுப்பில்லாம பதில் சொல்லி வச்சிட்டானுங்க.
திரும்பவும் ஃபோன் பண்ணி வெப் சைட்டில் இல்லன்னுதான உங்களுக்கு ஃபோன் பண்றோம் அப்ப்டீன்னோம். அதுக்கு அந்த பொண்ணு ஏதோ அவங்க சொத்தையே நாங்க எழுதி கேட்ட மாதிரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னுட்டு 5நிமிஷம் கழிச்சு வந்து ஃப்ளைட் கேன்சல் மேடம் அப்படீன்னு கூலா சொல்லுது.

என்னங்க இது ஆன்லைன்ல புக் பண்ணினா ஃப்ளைட் கேன்சல் பத்தி ஒரு மெயில் கூட அனுப்ப மாட்டீங்களா நாங்க பாட்டுக்கு ஃப்ளைட் டைமை ரீ செக் செய்யாம ஏர்போர்ட் போய் நின்னா என்னங்க பண்றதுன்னு கேட்டா அதெல்லாம் நாங்க மெயில் பண்ண மாட்டோம். அது எங்க வேலை இல்லன்னு சொல்லிட்டு வேணும்னா டிக்கெட்டை ரீஷெட்யூல் பண்ணித்தரோம்னு சொல்லுச்சு.

சரின்னு அடுத்த ஃப்ளைட்டில் புக் பண்ணுங்கன்னு சொன்னா அது ஃபுல் ஆயிடுச்சு அதற்கடுத்த வாரம்தான் டிக்கெட் இருக்குதுன்னு சொல்லுது அந்த பொண்ணு. அப்ப்டீன்னா அண்ணியோட மொத்த பயணதிட்டத்தையும் மாத்தணும் அதனால டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுங்கன்னு கேட்டா அது முடியாது மேடம், ஃப்ளைட் ரீசெட்யூல் மட்டும்தான் பண்ணமுடியும்ங்கறாங்க.

ஏங்க இவங்க ஃப்ளைட்டுல போறவங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கானுங்களா? இல்லை இவனுங்க மட்டும்தான் ஏர்லைன்ஸ் வச்சிருக்காங்களா? ஒருவாரம் பயணத்தை பின் தள்ளணும்னா அலுவலகத்தில் லீவை மாற்ற வேண்டும். இந்தியாவினுள் போய்வர எடுத்த ரயில் டிக்கெட்டுகளையெல்லாம் மாத்தணும் (டிக்கெட் வேறு கிடைக்காது). மொத்தத்தில் எல்லாமே குழப்படி ஆகும்.

இதையெல்லாம் கஸ்டமர் சர்வீசில் புகாராக சொன்னால் நீங்க வேணும்னா கோர்ட்டுக்குப் போங்க. அதான் நாங்க terms and conditions ல் தெளிவா எப்ப வேணும்னாலும் ஃப்ளைட் ஷெட்யூலை மாத்துவோம்னு சொல்லியிருக்கோமேங்கறாங்க. கண்ணுக்கு தெரியாத எழுத்துல ஒரு லைனை கண்டிஷன்னு போட்டு வச்சுக்கிட்டு என்ன வேணும்னாலும் செய்யலாமா? என்ன கொடுமை சரவணா இது :(.

அன்னிக்கே நான் முடிவெடுத்துட்டேன் ஏர் இந்தியாவில் போவதில்லைன்னு. சில்க் ஏரில் கொஞ்சம் காசு அதிகம்(150டாலர் வரை அதிகம்) ஆனாலும் பிரச்சினைகள் இல்லாமல் போய்வர முடிகிறது. இதுவரை ஒரே ஒரு முறைதான் ஃப்ளைட் தாமதமாகியிருக்கிறது. அதற்கு அந்த பணியாளர்கள் மன்னிப்பு கேட்ட விதம், ஹோட்டல் ரூம் சாப்பாடு என எந்த குறையுமில்லாமல் கவனித்துக் கொண்டதால் அந்த தாமதம் பெரிதாக தெரியவில்லை. ஆனால ஏர் இந்தியா ஊழியர்களின் அலட்சியம் பொறுப்பின்மை இதெல்லாம் பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது.

எப்பதான் மாறுவாங்களோ?!

டிஸ்கி: வெளிநாட்டுக்குப் போயிட்டா உங்களுக்கெல்லாம் இந்தியாவை குறை சொல்றதே வேலையாப்போச்சுன்னு கும்ம வந்துடாதீங்க. தப்பை தப்புன்னு சொல்ல இந்தியாவில்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை.

Saturday, 14 August 2010

தாய் மண்ணே வணக்கம்

Clipartஅனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

தேசியகீதம் வரிகள் மறந்தவர்களுக்காக

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விததா
பஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா
திராவிட உத்கல பங்கா
விந்த்ய ஹிமாச்சல யமுனா கங்கா
உஜ்ஜல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிச மாகே
காஹே தவ ஜெய காதா
ஜன கண மங்கள தாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜெய ஹே ஜெய ஹே ஜெய ஹே
ஜெய ஜெய ஜெய ஹே!

வருங்கால தலைமுறையின் இனிய மழலையில் நம் தேசிய கீதம்... ரசியுங்கள்

Wednesday, 11 August 2010

என்னைய பார்த்தா எப்படி இருக்கு :-(

என்னையப் பார்த்தாவே எல்லாருக்கும் கலாய்க்கணும்னு தோணுமோ என்னவோ தெரியல :-(.
இதுவும் காலேஜ் கொசுவத்திதான் :-). தைரியம் இருந்தா கீழே படியுங்கோ!

வகுப்பு நடந்துகிட்டு இருந்தது. ஹை வகுப்பு நடக்குமா எப்படீன்னு கலாய்க்க கூடாது அழுதுடுவேன். சரி மேல படியுங்கோ. உடனே முதல்லேருந்து படிக்கப்படாது. தொடர்ந்து படியுங்கோ

ப்யூன் வந்து கவிதா ப்ரின்சிபால் கூப்பிட்றாருன்னு சொன்னார். அய்யோ நாம் எதுவும் தப்புதண்டா பண்ணலியே எதுக்கு கூப்பிடறாறோனு பயந்துகிட்டே போனேன். அங்க பார்த்தா என்னோட ஜூனியர் ஒரு பொண்ணும் நின்னுக்கிட்டு இருந்தா. அய்யோ நாம ராகிங் கூட பண்ணலியே எதுக்கு இவளும் இங்க நிக்கறா என்ன ஏழரையோ தெரியலியேன்னு யோசிச்சுக்கிட்டே போனேன்.

பாழாப்போன ப்ரின்சி அரைமணிநேரம் காக்க வச்சுட்டு எங்களை உள்ள கூப்பிட்டார். ஜூனியர் பொண்ணு ஒருத்தியோட பேரைச் சொல்லி அவ எங்கன்னு கேட்டார். அந்த பொண்ணு எங்க கூட காலேஜ் பஸ்ஸில் வருவா. ரெண்டு நாளா வரலை. நாங்க திருதிருன்னு முழிச்சுக்கிட்டு(எப்பவும் அதை மட்டும் நல்லாவே செய்வோமே) தெரியல சார் அப்படீன்னோம்.

அந்த பொண்ணோட பேர் கொஞ்சம் வித்யாசமா இருக்கும். சட்டுன்னு புரியாது. அதனால் ப்ரின்சி அந்த பொண்ணோட பேர் என்னன்னு திருப்பி கேட்டார். எப்படியும் பேரைச்சொன்னா இவர் அதை தப்பாதான் சொல்லப்போறார் எதுக்கு வம்புன்னு அவளோடப் பேரை எல்கேஜி புள்ளைங்க மாதிரி ஒவ்வொரு எழுத்தா சொன்னேன்.

அப்போ அங்க இருந்த அறிவாளி ஒருத்தர் ஜூனியர் பேரை இவ்வளவு தெளிவா சொல்ற அவ எங்கன்னு கேட்டா தெரியாதுங்கற கதை வுடறியான்னார்? ஏங்க ஒரு புள்ளையோட பேரைச் சரியா சொல்றது ஒரு தப்பா? நாங்களே பிரச்சினை என்னான்னு புரியாம முழிச்சுக்கிட்டு நிக்கறோம் இதுல இவரு வேற கதை வுடறியான்னு கேட்டா கோபம் வருமா வராதா?

எப்படியோ கொஞ்சம் தைரியத்தை வர வச்சுட்டு அவ பேர் தெரியும்கறதால அவ எங்க போறான்னெல்லாம் கேட்டா எனக்கு எப்படி தெரியும்னு கேட்டேன். அப்பதான் ப்ரின்சி சொன்னாரு... அந்த பொண்ணு யாரோ ஒரு பையனோட போயிடுச்சாம். அவங்க அப்பா அம்மா காலேஜ்ல வந்து கேட்கறாங்களாம் அப்படீன்னார்.

எங்களுக்கு ரொம்ப ஷாக்காயிடுச்சு. ஏன்னா ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் அக்கா எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சுன்னு ஃபோட்டோல்லாம் காண்பிச்சிருந்தா. இப்போ எங்களுக்கு குழப்பம். அப்பா அம்மாவே முடிவு பண்ணின கல்யாணம்தானே அப்புறம் ஏன் இந்த பொண்ணு அவசரப்பட்டுச்சுன்னு. அப்புறம்தான் ப்ரின்சி விவரமா சொன்னார் அந்த பொண்ணு வீட்டுப்பக்கத்துல உள்ள ஏதோ வொர்க் ஷாப்புல உள்ள பையனோட போயிடுச்சுன்னு.

அதுசரி எதுக்காக எங்களைக் கூப்பிட்டு விசாரிச்சாருன்னு கேட்கறீங்களா? நாங்க இறங்குற பஸ் ஸ்டாப்பில்தான் அவளும் இறங்குவாளாம். அதனால் எங்களுக்கு தெரிஞ்சுதான் அவள் போயிருக்கணும்னு அவங்க நினைச்சாங்களாம். என்னா கண்டுபுடிப்பு!

ஏங்க ஒரே பஸ் ஸ்டாப்பில் இறங்கறோம்ங்கறதுக்காக அவங்க எல்லாரும் எங்க போறாங்க வாரங்கன்னா கவனிச்சுக்கிட்டு இருக்க முடியும்? இதைத்தான் ப்ரின்சிகிட்டயும் கேட்டேன்.
அதுக்கு அவரு சொல்றாரு "கவிதா நான் உன்னை சந்தேகப்படலை. ஆனா உனக்கு தெரிஞ்சிருக்குமோன்னு விசாரிச்சேன்"னார்.

இதுக்கு என்னங்க அர்த்தம். அவரு என்னை சந்தேகப்படலேங்கறாரா இல்லை எனக்கு தெரிஞ்சுதான் நடந்திருக்கும்னு சந்தேகப்பட்டாரா? இன்னிக்கு வரைக்கும் அதுக்கு அர்த்தம் என்னான்னு புரியலை.

ஒரே ஸ்டாப்பில் இறங்கினோம்ங்கறதுக்காக ஒரு விசாரணை. இதைத்தான் போலீசுக்காரங்களும் செய்யறாங்களோ :(

நம்மைப் பார்த்தாலே எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க :(

டிஸ்கி: படிப்பை பாதியில் விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் இப்போ தினம் தினம் கஷ்டப்படறான்னு கேட்கும் போது கஷ்டமா இருக்கு. ஏன் தான் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவு எடுக்கறங்களோ தெரியல.

Monday, 2 August 2010

மீண்டும் ஒரு பல்பு

நான் வாங்கிய பல பல்புகளில் இதுவும் ஒண்ணு :-(

பள்ளியில் படிக்கும் போது கம்பன் கழகம் பல்பு கொடுத்துச்சுன்னா கல்லூரியில் என் ஆசிரியரே கொடுத்தார் :-(. என்னைப்பார்த்தாலே அவங்களுக்கெல்லம் பல்பு கொடுக்கணும்னு தோணுமோ என்னவோ :-(

கொசுவத்தியை மூஞ்சிக்கு முன்னாடி வச்சு சுத்துங்கோ....

காலேஜில் அப்போ செகண்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்தேன்(காலேஜில் படிச்சேன்னு சொல்றதை நீங்க நம்பித்தான் ஆகணும் வேற வழியில்லை). ஒரு நாள் எங்க கணித விரிவுரையாளர் வகுப்பில் ஒரு விஷயம் அறிவிச்சார். இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இந்த செமஸ்டரில் கணித பாடத்தில் சென்டம்(அதாங்க நூற்றுக்கு நூறு...ஜெய்சங்கர் பட தலைப்புன்னு லொள்ளு பண்ணக்கூடாது சொல்லிட்டேன்) வாங்கறவங்களுக்கு சிறப்பான பரிசு வழங்கப்படும் அப்படீன்னார். நமக்கு கணக்குன்னா ரொம்ப இஷ்டம். எப்பவும் தொண்ணூறு மார்க்குக்கு குறைச்சலா வாங்கினதில்லை. இருநூறு மார்க்குக்குக்கு தொண்ணூறான்னு நீங்க கேட்கறதெல்லாம் எனக்கு நல்லாவே கேட்குது. அப்படீல்லாம் சந்தேகப்படக் கூடாது. அழுதுடுவேன் :-(

எக்ஸாம் முடிஞ்சு ரிசல்ட்டும் வந்திடுச்சு. (எக்சாம் எழுதினாத்தான் ரிசல்ட் வரும்னு லூசுத்தனமா தத்துவம்லாம் சொல்லப்படாது). நான் நூற்றுக்கு நூறும் வாங்கிட்டேன்(இதையும் நீங்க நம்பித்தான் ஆகணும்). காலேஜில் நானும் சிவில் டிப்பார்ட்மெண்டில் ஒரு பையனும் சென்டம் வாங்கியிருந்தோம்.

கம்பன் கழகம் சொன்ன மாதிரியே இங்கயும் விழா நடத்திதான் பரிசளிப்போம்னு சொல்லிட்டாங்க. அப்பவே எனக்கு கம்பன் கழகம் கொடுத்த பல்பு மண்டையில பளீர்னு எரிஞ்சுது. சரி காலேஜ் டேயில் தான் கொடுப்பாங்கன்னு இருந்துட்டேன். ஆனால் அதுக்கு முன்னாடியே இந்த ஃபர்ஸ்ட் இயர் பலியாடுகள் சே சே மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி காலேஜில் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. எங்க சேர்மனுக்கு காசு கொடுத்து சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் முன்னாடி காலேஜின் பிரதாபத்தை (கவனிக்கவும் பிரதாப்பை இல்லை) காண்பிக்க எங்களை பலியாடா பயன்படுத்த முடிவு பண்ணிட்டார் :-(

எங்க விரிவுரையாளரும் வந்து இன்னிக்குத்தான் சேர்மன் உங்களுக்கு பரிசு கொடுக்கப் போறார். எஸ்கேப் ஆகி ஊர் சுத்த போயிடாதீங்கன்னார். சரின்னு நாங்களும் வெயிட் பண்ணினோம். ஆனா ரெண்டுமணிநேரமாகியும் விழா ஆரம்பிக்கப் போறதா தெரியல. என்னோட துணைக்கு ஒருத்தியை மட்டும் விட்டுட்டு மற்றவங்க எல்லாம் எஸ்கேப் ஆயிட்டாங்க. பாவம் எனக்காக அவளும் தேவுடு காத்துக்கிட்டு இருந்தா.

ஒருவழியா விழா ஆரம்பிச்சு காலேஜின் சிறப்புக்களையெல்லாம் அள்ளி விட்டுட்டு இருந்தார் சேர்மன். இந்தப் புளுகு புளுகறாங்களேன்னு மனசுக்குள்ள நொந்துக்கிட்டோம். ஒருவழியா எங்களை அவங்க முன்னாடி அறிமுகம் செய்து வைத்தார். ஏதோ அவரே வந்து பரீட்சை எழுதி அதனால் நாங்க மார்க் வாங்கினோம்ங்கற மாதிரி காலேஜைப் பற்றி பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தார். (நூறு மார்க் எடுத்தது ரெண்டு பேர்னா ஃபெயிலானது 50பேருக்கும் மேல அவங்களை கூட்டி வந்து இவங்க முன்னாடி நிக்க வைக்கணுனு இருந்துச்சு ஆனா முடியாதே)

அடுத்து பரிசளிப்பு என்னும் பல்பு வழங்கும் நிகழ்ச்சி. நல்லா கிஃப்ட் பேப்பரில் சுத்தி ஒரு பொட்டலம்தான் பரிசு. அதை கையில் வாங்கினப்பவே புரிஞ்சிடுச்சு இது பல்புதான்னு(பின்னே எத்தனை பல்பு வாங்கியிருக்கோம் அந்த அனுபவம் கைகொடுக்காதா என்ன). விட்டா போதும்னு ஹாஸ்டலுக்கு தோழியின் ரூமுக்கு போயிட்டோம். என்ன பரிசுன்னு எல்லாரும் சேர்ந்து பேப்பரை பிரிச்சா பெரிய பல்பு பளிச்சுன்னு எரிஞ்சுது.

கண்ணாடிப் பொட்டிக்குள்ள நடுவுல ஒரு ப்ளாஸ்டிக் பூவும் ரெண்டு பக்கமும் வாத்தும் இருக்குமே அதே அதே அந்த கண்ணாடிப் பொட்டிதான் பரிசு. என்னோட துணைக்கு நின்ன ஃப்ரெண்டுதான் நொந்து போயிட்டா. அடிப்பாவி இதுக்காகவா அந்த ரம்ப பேச்சைக் கேட்டுக்கிட்டு காத்திருந்தோம். அதுக்கப்புறம் என்ன எல்லாருடைய கிண்டலையும் கேலியையும் கேட்டுக்கிட வேண்டியதுதான்.

அதுக்கப்புறம் அவர் எல்லா செமஸ்ட்டர் ஆரம்பிக்கும் போதும் பரிசு தரப்படும்னுதான் சொல்லுவார். ஆனா நாங்க யாரும் அதுக்கப்புறம் நூறு மார்க் வாங்கவே இல்லையே! எத்தனை வாட்டிதான் பல்பு வாங்கறது? எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது அவ்வ்வ்வ்வ்வ்வ்