Sunday, 31 October 2010

ரங்ஸ் கொடுத்த பல்பு :(

இன்னிக்கு டின்னருக்கு வெளிய போகலாம்னு ரங்கமணி சொல்லிட்டார். (இன்னிக்கு ஒருநாளாவது தப்பிச்சுக்கலாம்னு நினைச்சிருப்பார். அது பொறுக்காதே!). நானும் நல்லா பந்தாவா கிளம்பி ரெடியாயிட்டேன். இல்லேன்னா பெரிய ரெஸ்ட்ராண்டுகளுக்கு கூட்டிட்டு போகாம குட்டி கடைகளுக்குப் போய் பர்சை பாதுகாத்துக்குவாரே! அதுக்கெல்லாம் இடம் கொடுக்கலாமோ! (அதானே நாம யாரு)நான் நினைச்ச படியே ஸ்டார் ஹோட்டலுக்குத்தான் போனோம். (நீ நினைக்கறதைத்தானே அவரு நினைச்சாகணும். வேற வழி). கேண்டில் லைட் டின்னர்ங்கற பேர்ல கரண்டு செலவை மிச்சம் புடிக்கறான் ஹோட்டல் காரன். கூடவே அந்த மங்கலான வெளிச்சத்துல மெனுகார்டில் ஒவ்வொரு ஐட்டங்களுக்கும் என்ன விலைன்னு சரியாவே தெரிய மாட்டேங்குது. அதானே அவனுக்கு வேணும். இது புரியாம ஆஹா ரொமாண்டிக் லைட்டிங்னு மதி மயங்கிடறோம். பில் வரும்போதுதானே தெரியும் ரொமாண்டிக்கா இல்லையான்னு!மெனு கார்ட் வந்ததும் நீங்களே ஆர்டர் பண்ணிடுங்கன்னு அவரோட சாய்சுல விட்டுட்டேன். (மெனுவுல போட்டிருக்கறது என்ன ஐட்டம்னு தெரியாது எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்னுதானே அப்படி சொல்லியிருப்ப). அவரும் ஏதோ ஸ்டீக் ஹாட் ப்ளேட் -னு ஆர்டர் செய்தார். முன்னாடியே இதுபோன்று சிக்கன் ஸ்டீக் சாப்பிட்டிருக்கிறேன் என்பதால் நானும் ஓகே சொல்லிட்டேன்.ஆர்டர் பண்ணின ஐட்டமும் வந்தது. நானும் சாப்பிட்டேன். ரொம்ப டேஸ்டியா இருந்துச்சு. ஆனா எப்பவும் சாப்பிடற மாதிரி இல்லை. அவரிடம் கேட்டதற்கு இது நல்லாயில்லையா வேற ஆர்டர் பண்ணவான்னார். நல்லா இருக்கு ஆனா எப்பவும் சாப்பிடறது மாதிரி இல்லைன்னேன். நல்லா இருக்குல்ல சாப்பிடுன்னார். நானும் நம்பி சாப்பிட்டேன்.ஆனா ரங்ஸ் முகத்துல ஏதோ கள்ளத்தனம் தெரிஞ்சுது. சாப்பாட்டோட ருசியில அதை பெருசா எடுத்துக்கலை. எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் சாப்பாடு பிடிச்சிருந்துதா அப்படீன்னு கேட்டார். நானும் ரொம்ப நல்லா இருக்குங்க அடுத்தவாட்டியும் இங்கேயே வருவோம்னேன்.அவர் சிரிச்சுக்கிட்டே பீஃப் எல்லாம் சாப்பிட மாட்டேன்னு ரொம்ப பந்தா காமிச்ச இப்போ அதை நல்லா ஒரு வெட்டு வெட்டினதும் இல்லாம அடுத்தவாட்டியும் இதுதான் வேணுங்கற அப்படீங்கறார். நான் ?!?! :((((அடுத்து பில் வந்துச்சு. ஹோட்டல் காரன் ரொம்ப விவரம். பில் கொண்டு வரும் போது மட்டும் குட்டியூண்டு டார்ச் லைட் கொண்டு வந்து பில்லில் அடிச்சுக் காமிக்கறான். இது மட்டும் தெளிவா தெரியணுமாம். பில்லைப் பார்த்து மயக்கம் போடாத குறைதான் :(முள்ளங்கி சாப்பிடாதவருக்கு பருப்போடு சேர்த்து கடைந்து கொடுத்து ஏமாத்தினதுக்கு இப்பூடி பழி வாங்கிட்டார். ஆனாலும் பீஃப் ரொம்ப ருசியா இருந்திச்சு :). அடுத்தவாட்டி சாப்பிடுவேனான்னு கேட்டால் பதில் நோ தான். தெரியாமல் சாப்பிட்டதால் ஓகே. ஆனால் பீஃப்னு தெரிஞ்சப்புறம் சாப்பிட முடியாது :(. ஏன்ன்னு எல்லாம் கேட்கக் கூடாது. அது அப்படித்தான் :)டிஸ்கி: ரங்க்ஸைப் பற்றி எழுதினாலே கூடவே மைண்ட் வாய்சும் வந்துடுது :(. ஃபோட்டோ கூகுளாண்டவரிடம் சுட்டது :))

Sunday, 24 October 2010

சாதனைத் தமிழன்

இது எனக்கு மெயிலில் வந்த செய்தி

நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள். நம்மை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கும் இந்த தமிழரின் சாதனை சமூகத்தொண்டை எல்லோரிடமும் கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் வலைப்பூவில் இதனை வெளியிட்டு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெற உதவுவோம்.


                           A real hero from Madurai

                                     http://heroes.cnn.com/vote.aspx2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்

வயது : 29

இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust

9, West 1st Main Street,

Doak Nagar Extension,

Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
E mail : ramdost@sancharnet.in


மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

பின்குறிப்பு: ஒருவரே எத்தனை ஓட்டு வேண்டுமென்றாலும் போடலாம். எந்த கட்டணமும் இல்லை. கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை ஓட்டு போடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, 21 October 2010

தென்னை மரத்தில் தேள் கொட்டியதால் பனை மரத்தில் நெறி கட்டியிருக்கிறது

இந்தோனேஷியாவின் சுமத்ராவில் காட்டுத் தீ. இதன் காரணமாக சிங்கப்பூரிலும் மலேஷியாவிலும் இந்தோனேஷியாவிலும் ஒரே புகை மூட்டம். காற்றுத் தரக் குறியீட்டு எண் 108 ஐ தாண்டி விட்டது. இது ஆரோக்கியமான நிலை இல்லை.குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் ரொம்பவே சங்கடமா இருக்கும். சென்ற ஆண்டு இதே போல் புகை மூட்டம் ஏற்பட்ட போது கண் எரிச்சல் ஏற்பட்டது. இப்போதும் லேசான கண் எரிச்சல் இருக்கிறது. இந்த ஆண்டு அந்த அளவுக்கு மோசமாகாமல் இருக்க வேண்டும்.


இந்தோனேஷியாவில் காட்டுத் தீக்கு முக்கிய காரணம் நிலச்சீரமைப்பு என்ற பெயரில் காடுகளுக்கு தீ வைப்பதுதான். சிறு விவசாயிகள்தான் தீ வைக்கிறார்கள் என்ற போர்வையில் பல தனியார் கம்பெனிகள்தான் இந்த தீ வைப்புகளுக்கு பின்னால். ஒருகட்டத்தில் தீ கட்டுக்குள் அடங்காமல் காட்டுத் தீயாக பரவுகிறது. ஒவ்வொரு வருடமும் இதே பிரச்சினைதான்.


காடுகளை சமப்படுத்த மிக எளிதாக தீ வைத்து விடுகிறார்கள். இங்கேயே பலமுறை நான் பார்த்திருக்கிறேன். சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து சரிகட்டிடறாங்க :(


இவர்கள் இப்படி காடுகளை அழிப்பதால் புகைமூட்டம் ஒரு பிரச்சினை என்றால் தட்பவெப்ப நிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள். பத்து வருடங்களுக்கு முன் அதிகபட்சமாக 32டிகிரி செல்சியஸ் வெப்பநிலைதான் இருக்கும். மிக அரிதாக 34டிகிரி செல்சியசுக்கு போகும். இப்போது 36டிகிரி 37டிகிரின்னு சர்வசாதாரணமா போகுது. முன்பு போல் மழைப்பொழிவும் இல்லை. சில நேரங்களில் ஒரேயடியாக கொட்டி வெள்ளப்பெருக்கும் வருகிறது.


மாதம் மும்மாரின்னு சொல்லுவாங்களே அது போல் மாதம் 10 மாரிகளாவது பொழியும்.இந்த வருடம் தொடர்ச்சியாக 35நாட்கள் மழை இல்லை. நல்ல சூடும் அனுபவப்பட்டது.  நாங்கள் இருப்பது சிறிய தீவு.  மழை நீர்தான் ரிசர்வாயர்களில் தேக்கப்பட்டு விநியோகிக்கப் படுகிறது. இப்படி தொடர்ச்சியா மழை இல்லேன்னா தண்ணீர் கஷ்டம். அப்புறம் என்ன கப்பலில்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும் :(.  தண்ணீர் விநியோகம் தனியார் வசம் என்பதால் அதுவும் நடக்கும். ஒருமுறை அப்படியும் நடந்ததாம். தகவல் உண்மையான்னு உறுதியாத் தெரியலை. இப்போ இந்த புகைமூட்டம் மாறணும்னா கூட மழைபெய்ய வேண்டும்.  வருணபகவான் கருணை காட்டுவாரான்னு பார்த்துக்கிட்டு இருக்கோம்.

Sunday, 3 October 2010

காமன் வெல்த் விளையாட்டுகள் கோலாகலத் தொடக்கம்


 
முன்குறிப்பு:  கொஞ்சம் பெரிய பதிவுதான். எடிட் பண்ணாமலேயே போட்டுட்டேன் :)
 
காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பல தடைகளையும் விமர்சனங்களையும் தாண்டி இன்று கோலாகலமாக நமது தலைநகர் புதுதில்லியில் துவங்கி விட்டது.


ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டது. வழக்கமான இந்திய பங்க்சுவாலிட்டியாகத்தான் இருக்கப் போகிறது என்ற எனது நம்பிக்கையை(?!) தவிடு பொடியாக்கி சரியாக ஏழு மணிக்கு விழா தொடங்கியது.

முதலில் பிரதமரும் அவரது மனைவியும் வந்தனர். அடுத்து இளவரசர் சார்லசும் அவரது மனைவியும் வந்தனர். தொடர்ந்து நமது ஜனாதிபதி வந்தார். இவர்கள் எல்லோருக்கும் முன்னரே நம் அன்புக்குரிய ஜனாதிபதி (ஜனாதிபதிகளை 'முன்னாள்' என்று சொல்லக் கூடாது என்று எங்கேயோ படித்த ஞாபகம் :D) அப்துல் கலாம் ஐயா வந்து விட்டார்.

முதலில் நம் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் அந்த ராட்சச ஹீலியம் பலூன் உயரே எழும்பியது. அதன் அடியில் கட்டப்பட்டிருந்த எட்டு பாவைகளும் (பல்வேறு கலாச்சார உடைகள் அணிந்திருந்தவை) உயர்ந்தன. அந்த பலூனே பெரிய டிஸ்ப்ளே ஸ்க்ரீனாகவும் அமைந்தது.

முதல் கலை நிகழ்ச்சியாக நம் நாட்டின் பல்வேறு பாரம்பரிய தாள வாத்தியக் குழுக்களின் (கேரளா, மணிப்பூர், பஞ்சாப், மேலும் சில மாநில குழுக்கள்) இசை நிகழ்ச்சி. உண்மையிலேயே எல்லோரையும் எழும்பி ஆட வைக்கும் தாளம். அதிலும் ஒரு சுட்டி மழலை மேதை 7வயது கேசவ் நடுநாயகமாக அமர்ந்து தபலா வாசித்த அழகே அழகு!

அடுத்து டெல்லி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம்(ஸ்வாகதம்) அருமையிலும் அருமை. பாடகர் ஹரிஹரன் பாடலைப் பாட, வளையணிந்த கரங்கள் கை கூப்பி வணங்குவது போல் உருவம் வரும்படி மாணவர்கள் அணிவகுத்து நின்று நடனம் ஆடினர். நடனத்தின் இறுதியில் மேலே அணிந்திருந்த அங்கி போன்ற ஆடையை கழற்றியதும் சிவப்பு வெள்ளை பச்சை உடையணிந்த மாணவர்கள் மூவர்ணக் கொடியை உருவாக்கினர். அதை ரசித்து முடிக்கும் முன் திடீரென்று அவர்கள் மேல் பெரிய வெள்ளைத்துணியால் மூடினர். என்ன நடக்கிறது என்று ஆவலோடு பார்க்கையில் துணிக்கு அடியில் நின்ற மாணவர்கள் சிவப்பு வண்ணத்தால் அந்த துணியில் ஏதோ வரைய ஆரம்பித்தனர். ஒரு நிமிடத்திற்குள் அருமையான பிசிறில்லாத மெஹந்தி டிசைன் வரைந்து ஆச்சரியப் படுத்திவிட்டனர் மாணவர்கள்! இதற்காக அவர்கள் எத்தனை மாதங்கள் பயிற்சி எடுத்தனர் எனத் தெரியவில்லை. ஹேட்ஸ் ஆஃப் மாணவர்களே!

அடுத்து பங்குபெறும் 71 நாடுகளின்  விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். பாகிஸ்தான் அணி வரும் போது பகைமை மறந்து ஆரவாரத்துடன் கூடிய வரவேற்பை ஸ்டேடியத்தில் இருந்த மக்கள் அளித்தனர். இறுதியாக நமது அணியினர் வரும் போது ஸ்டேடியத்தில் இருந்த அறுபதாயிரம் பேரும் ஆர்ப்பரித்து வரவேற்றனர். டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு இந்திய குடிமகனும் பிரச்சினைகளை மறந்து மனப்பூரவமாக வரவேற்றிருப்பான் என்பது உறுதி.

ஆனாலும் அந்த சுரேஷ் களவாணி ச்சே ச்சே சுரேஷ் கல்மாடி வரவேற்புரை வாசித்த போது(உண்மையிலேயே வாசிக்கத்தாங்க செய்தார்) காமெடியா இருந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பான்னு சொல்ற கவுண்டமணிய பார்க்கற மாதிரியே இருந்துச்சு :). எத்தனை பேருக்கு காசு கொடுத்து கூட்டிட்டு வந்தாருனு தெரியலை ஒன்னுமில்லாத்ததுக்கு எல்லாம் கைதட்டி விசிலடிச்சாங்க. ஒருவேளை அவரை கிண்டல் பண்ணினாங்களோ :)

அப்புறம் குத்துச்சண்டை வீரர் சுஷில் குமார் இளவரசர் சார்லசிடம் Queen's Batton ஐ கொடுத்தார். பின்னர் அவர் இங்கிலாந்து ராணியின் செய்தியை வாசித்தார். (மகாராணியார் இந்தியா வந்தால் அதுவே அவரது கடைசிப்பயணமா இருக்கும்னு யாரோ ஜோசியர் சொன்னாராம். அதான் அவர் வரலியாம். அங்கிட்டுமா ஜோசியத்தை நம்புறாக!)

அடுத்து நம்ம ஜனாதிபதி போட்டியை துவங்கி வைத்தார். அபினவ் பிந்த்ரா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

Tree of knowledge என்ற பெயரில் குரு சிஷ்ய கல்வி முறை பற்றிய விளக்கமும் தொடர்ந்து இந்திய நடனங்களின் தொகுப்பாகவும் ஒரு நடன நிகழ்ச்சி. பரதநாட்டியம், மோகினி ஆட்டம், மணிப்பூரி நடனம், ஒடிசி, கதக், குச்சுப்புடி என் இந்திய பாரம்பரிய நடனங்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டது. அடுத்து பாரம்பரிய இந்திய கலையான யோகாசனங்களை செய்து காட்டினர்.

அடுத்து இந்திய ரெயில்வேயின் க்ரேட் இந்தியன் ஜர்னி நிகழ்ச்சி. இந்தியாவின் கலாச்சாரத்தை விளக்கும் வாகனங்கள் ஊர்வலமாக வந்தன கூடவே கிராமிய நடனக்கலைஞர்களின் நடனங்களும். அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்பதை சித்தரிக்கும் வாகனம் கூழைக் கும்பிடு போடும் அரசியல்வாதிகளோடும் ஏகப்பட்ட லவுட் ஸ்பீக்கரோடும் அமர்க்களமாக வந்தது :). இது எந்த புண்ணியவானோட யோசனைன்னு தெரியல ஆனா பார்த்து நல்லா சிரிச்சேன் :).   மணல் ஓவியக்கலைஞர்கள் காந்திஜி மற்றும் இந்தியக் கொடியோடு பின் தொடரும் மக்களையும் மணலில் ஓவியமாக வரைந்தனர். அவர்கள் வரைய வரைய அது அப்படியே டிஸ்ப்ளே ஸ்க்ரீனில் வரும் போது பார்க்க ரொம்ப நல்லா இருந்தது.

இறுதியாக வந்தார் நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.   காமென் வெல்த் விளையாட்டின் தீம் பாடலைத் தொடர்ந்து ஜெய் ஹோ பாடலைப் பாடும் போது ஸ்டேடியத்தின் பின்னணியில் வாணவேடிக்கைகள் விண்ணில் வர்ணஜாலம் காட்டியது. அதனுடன் காமென் வெல்த் விளையாட்டுப் போட்டியின் துவக்கம் இனிதே நிறைவடைந்தது.

புகைப்படங்கள் காண க்ளிக் செய்யவும்!

வீடியோ தொகுப்பு காண க்ளிக்கவும்!