இது நான் ஒரு கவிதைப் போட்டிக்காக கிறுக்கியது. தலைப்பு "வாய்ப்பும் வியப்பும்"
யாம் பெற்ற இ(து)ன்பம் இவ்வையம் பெறுக :-)
பத்தாண்டு உணவு தானிய கையிருப்பு
பட்டினி ஏழைக்கும் வயிறு நிறையும் வாய்ப்பு
படித்த சீமான்களின் பழுதான கொள்கைப் பிடிப்பு
பசித்தவன் வாய்க்கு எட்டாது தடையானது வியப்பு!
பத்தாயத்து எலிகளுக்கு உணவாய்
பயனற்றுப் போனதில் மனம் நொந்த வெறுப்பு
பகல் கொள்ளை கல்வி கட்டணம்
சீரமைத்த அரசின் ஆணை
பரிதவித்த பெற்றோருக்கு கிடைத்த வாய்ப்பு
தடை விதித்து தன்னிருப்பை உணர்த்திய
நீதிமன்ற ஆணை கண்டு வியப்பு
பட்டிகாட்டு பட்டாம் பூச்சிகள்- பாங்காய்
படிக்க கிடைத்த சமச்சீர் கல்வி வாய்ப்பு
பகல் கொள்ளை பள்ளிகளின் முறையீட்டை
புறம் தள்ளிய நீதியின் கருணை கண்டு வியப்பு
இருமொழி கல்வி திட்டம்
இது தமிழக அரசு வழங்கிய வாய்ப்பு
இந்தியா முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு
இழந்தது தமிழர் கூட்டம் என்பது வியப்பு
தமிழில் கற்பவருக்கு வேலைவாய்ப்பில்-முன்னுரிமை
தருவதாக செப்பியது நல்ல வாய்ப்பு
தமிழில் கற்றவருக்கு கிடைத்த வேலையின்
தரம் என்னவோ கடைநிலையில்.. என்னே வியப்பு
சாதிகள் இல்லை என்று பெரியார்
சமத்துவபுரமாய் வந்தது வாய்ப்பு
கல்வியில் வேலையில் சாதி கேட்டு
கலங்க வைப்பது வியப்பு
பெண்களுக்கு முப்பத்திமூன்று சதவீத ஒதுக்கீட்டு
மசோதா கொண்டு வந்தது வாய்ப்பு
மன்றத்தில் அதனை நிறைவேற்றாத
மடமையை கண்டு வியப்பு
காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
கர்வத்தோடு பெருமை கொள்ள கிடைத்த வாய்ப்பு
கடமை மறந்த நிர்வாகிகளின் அலட்சியத்தால்
கர்வம் இழந்து தலைகுனியும் நிலை கண்டு வியப்பு.
அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்ட
அரசின் கொள்கைகள் கண்டு வியப்பு
அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ள
அருமையாய் அமைந்தது இந்த வாய்ப்பு.