Tuesday, 3 May 2011

மீண்டும் ஒரு ப்ரேக் :(

மீண்டும் ஒரு நீண்ட விடுப்பு எடுக்கப் போகிறேன். இப்பவே நீ விடுப்புலதானே இருக்கறேன்னு நீங்க எல்லாரும் சொல்றது கேட்குது :)). இந்தோனேஷியாவில் இருந்தாலும் தொடர்ச்சியாக பங்கு கொள்ள முடியாத அளவுக்கு பயணங்கள்.  பதிவுலக நண்பர்களின் வலைப்பூவுக்கு வரமுடியவில்லை. பின்னூட்டங்கள் இட முடியவில்லை. இப்படி ஒரே முடியவில்லை புராணம்தான்.
அதனால் எல்லா  வேலைகளும்  முடிந்து  ஓரிடத்தில்  நிலை  கொள்ளும்   வரைக்கும்  தற்காலிக விடுப்பு. மீண்டும் உங்களை சந்திக்கும் வரை

அன்புடன்
கவிசிவா

Sunday, 10 April 2011

தேர்தல் விழா!!!

நாட்டுல தேர்தல் ஜுரம் சூடு பிடிச்சுடுச்சாம். நானும் அது பற்றி பதிவு எழுதலேன்னா நாளைய வரலாறு நம்மை குற்றம் சொல்லிடுமே அப்படீங்கற தார்மீக (அப்படீன்னா என்ன?!!) எண்ணத்தின் அடிப்படையில்தான் இந்தப் பதிவு :-)


 
உண்மையிலேயே நம்ப மக்கள் கொடுத்து வச்சவங்கதான். பின்னே இந்த அரசியல்வியாதிங்க அடிக்கற கோமாளிக் கூத்தெல்லாம் பார்த்து சிரிச்சி சிரிச்சு சந்தோஷமா இருக்காங்க. ஆனா இந்த எலகஷன் கமிஷன் மேலதான் மக்கள் ரொம்ப கடுப்பாயிருக்காங்களாம். பின்னே அஞ்சு வருஷத்துக்கு ஒருவாட்டியாவது கொள்ளையடிச்ச பணத்துல கொஞ்சூ.......ண்டு பங்கை கிள்ளி கவர்ல போட்டுக் கொடுப்பானுங்க நம்ப அரசியல் வியாதிங்க. அதுக்கும் ஆப்பு வச்சா என்ன பண்றது!

தேர்தல் அறிக்கைன்னா இப்படீல்ல இருக்கோணும். எல்லாம் இலவசமாம். சுருக்கமா சொன்னா இலவசமா அரிசி வாங்கி கஞ்சியை வச்சு குடிச்சுக்கிட்டு இலவச டிவியில வர மொக்கைகளைப் பார்த்து மூக்கை சிந்திக்கிட்டு மூக்கு சிந்தின துணியை இலவசமா கிடைக்கற வாஷிங் மெஷின்ல போட்டுட்டு (கவனிச்சு படிக்கோணும் வாஷிங் மெஷின்ல போட மட்டும்தான் முடியும் துவைக்கறது நாமதான் துவைச்சுக்கணும். ஹி ஹி க்ரெண்ட் இருக்காதே) கம்முன்னு குந்தியிருக்கணும்.   நாடு... அதை நாங்க குடும்பத்தோடவோ இல்லை கூடவே இருக்கும் நட்போடவோ சேர்ந்து கொள்ளையடிச்சுப்போம்னு தலீவருங்க சொல்லிப்புட்டாங்கோ.

இதுல ஒரு கட்சிக்கு தேர்தல அறிக்கை வெளியிடக் கூட நேரமில்லாம கடைசீஈஈஈஈ நேரத்துலதான் வெளியிட்டிருக்காங்கோ. ஆமாமா கோஷ்டிப் பூசலை சமாளிச்சு அங்கே கிழிஞ்ச வேஷ்டியை தைச்சு கட்டிக்கிட்டு வர நேரமாகாதா! இதையெல்லாம் நாம புரிஞ்சுக்கலேன்னா இந்தியக் குடிமகனாக இருக்க நமக்கு தகுதியே இல்லேன்னு அர்த்தம்.

ஒருத்தரு ஒரு மாசத்துக்கு முன்னாடி வரை ஒரு வயசான தாத்தாவைப் போட்டு அந்தத் தாக்கு தாக்கினாரு. ஆனா இப்போ அந்தர்பல்டியில்ல அடிச்சுட்டாரு. தாங்க முடியலீடா சாமீஈஈஈ... ஆங் இதுக்குப் பேரு கூட்டணி தர்மம். இதையெல்லாம் குறை சொன்னா அவிங்க பொழப்பு நடத்தறது எப்பூடி?!

ஒருத்தவங்க வேற நாட்டிலேருந்து இப்போதான் இறங்கி வந்திருக்காங்க. அவங்க தமிழ்நாட்டுல இருக்கணுமா இல்லையாங்கறதை நம்ப மக்கள்தான் முடிவு பண்ணோணுமாம். எம்மாம் பெரிய பொறுப்பை நம்ப மக்கள் தலையிலே கட்டியிருக்காங்கோ! யோசிச்சு முடிவெடுக்கோணும்.

ஒருத்தர் இன்னொரு வாட்டி அய்யோ... அம்மா... ன்னு அவலக் குரல் எழுப்ப வேண்டி வந்திருமோங்கற பயத்தில் இப்பவே எலக்ஷன் கமிஷனைப் பார்த்து லபோ...திபோ...ன்னு குதிக்க ஆரம்பிச்சுட்டாரு.

இன்னொருத்தரு மைக்கை சரியா புடிக்கத் தெரியாம கீழே போட்டுட்டு(?!) ஒருத்தரை மக்கள் முன்னால அடிச்சுட்டாருன்னு பாட்டு வாங்கிட்டு இருக்கார். அடிச்சாலும் அவரு ஆளைத்தானே அடிச்சாரு உங்களையா அடிச்சாரு இதைப் போய் பெருசாக்கிட்டு... போங்க போங்க யாராச்சும் கவர் கொண்டு வாராங்களான்னு பாருங்க.

ஏற்கெனவே ஜெயிச்ச இடத்துல திரும்பவும் தெருத் தெருவா ஓட்டு கேட்டுப் போனா திருவோடு(டெப்பாசிட்) கூட மிஞ்சாதுன்னு பூர்வீக இடத்தையும் சொந்த ஊரையும் தேடி ஓடிப்போய்ட்டாங்கோ ! சந்தோஷப் படுங்கப்பா உங்க தொகுதிக்கு ஸ்டார் வேல்யூ வந்திருக்குல்ல :)

இந்த எலக்ஷன்ல அரசியல்வியாதிகள் எல்லாரும் காமெடிப் பீசுன்னா ஹீரோ யாருப்பா? எல்லாம் நம்ப எலெக்ஷன் கமிஷன் தாங்க. ஒட்டுமொத்த அரசியல்வியாதியும் பேதி மருந்து கொடுத்த மாதிரி டரியல் ஆகி கிடக்கறாங்க இல்ல! எம்பூட்டு சந்தோஷமா இருக்கு! ஒவ்வொருத்தரும் எலெக்ஷன் கமிஷனைப் பற்றியும் அதிகாரிகளைப் பற்றியும் குய்யோ முறையோன்னு கத்தும் போது சிப்பு சிப்பா வருது. எல்லாம் கொஞ்ச நாளைக்குதான் எலெக்ஷன் முடிஞ்சு ஆட்சியை அமைச்சதுக்கு அப்புறம் காமெடிப் பீசாகப் போறது பொதுமக்களாகிய நாமதானுங்கோ :-(. அது வரைக்கும் என்ஜாய்!!!
 
படங்கள்: நன்றி கூகுளாண்டவர்!

Tuesday, 29 March 2011

புதுசு கண்ணா புதுசு!

அடுத்தமுறை திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் போய் இறங்கும் நம்ப ஊர் மக்கள்ஸ் வேறெங்கேயோ ஃப்ளைட்டை இறக்கிட்டானுங்களோனு திரு திருன்னு முழிக்காதீங்க. புதிய ஏர்போர்ட்டை திறந்துட்டாங்கள்ல! அழகா இருக்கு புதிய விமான நிலையம்.

இன்னும் வேலைகள் முழுவதுமாக முடியவில்லை. ஆனாலும் எல்லா வசதிகளுடன் அழகா இருக்கு. Arrival மற்றும் Departure வாயில்கள் தனித்தனியே சற்று அதிக இடைவெளியில் இருப்பதால் பழைய விமானநிலையம் போல் நெருக்கடியாக இல்லை. சுகமான கடல்காற்று
காத்திருக்கும் நேரத்தைக் கூட இனிமையாக்குகிறது :).விசாலமான கார்பார்க்கிங் வசதியும் இருக்கு.

ஏர்ப்போர்ட்டுக்கு போகும் சாலையும் குண்டு குழியில்லாமல் நேர்த்தியாக போட்டிருக்கிறார்கள். திருவனந்தபுரம் களக்கூட்டம் பைபாஸ் ரோட்டில் அனந்தபுரி மருத்துவமனைக்கருகில் இருந்து புதிய மேம்பாலம் வழியாக ஏர்ப்போர்ட்டை இணைத்திருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் இருந்து வருபவர்கள் டிராஃபிக் நெரிசலில் சிக்காமல் களியக்காவிளையில் இருந்தே பைபாஸ் ரோடு வழியாக வந்துவிடலாம்.

என்னதான் எல்லாம் மாறினாலும் இமிக்ரேஷன் அதிகாரிகள் மட்டும் மாறவே இல்லை :-((. அதே கடுகடுப்புதான்.

User Development Fee ன்னு சொல்லி ஏர்போட்டில் வைத்து 575ரூபாய் வசூலிச்சுட்டாங்க. ஆனால் தொடர்ந்து இதே போல் சுத்தமாக பராமரிக்கறாங்கன்னா கொடுத்துட்டு போகலாம் தப்பில்லைன்னு தோணுது.









Thursday, 24 March 2011

வந்துட்டோம்ல மொக்கை போட :-)

அப்புறம் எல்லாரும் எப்படி இருக்கீங்க?  நல்லாத்தான் இருக்கோம் நீ வந்துட்டீல்ல இதுக்கு அப்புறம் எப்படி இருப்போம்னு தெரியாதுன்னு நீங்க எல்லாம் நல்ல மனசோட சொல்றது நல்லாவே கேட்குது :)

இந்தியாவில் நல்லா வீட்டை சுத்திக்கிட்டு வந்தாச்சு. நிஜம்மாவே இந்த முறை வீட்டை மட்டும்தான் சுத்தினேன் :-(. மூணே மூணு நாள் மூணார் போயிட்டு வந்ததோட சரி அப்புறம் நாகர்கோவில் வாசம்தான்.

கூடிய சீக்கிரம் வழக்கமான மொக்கை பதிவுகளோட வரேன். அதுவரைக்கும் என்ஜாய் பண்ணுங்க மக்காஸ்......

Saturday, 11 December 2010

ஊருக்குப் போறோம்!

என் மொக்கைகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும்  நம் நட்புகளுக்கு மீண்டும் ஒரு குறுகிய கால விடுதலை :-). சந்தோஷமா இருங்க மக்கா!

பல வருடங்களுக்குப் பிறகு புகுந்த வீட்டு சொந்தங்கள் அனைவரும் மீண்டும் ஒரே இடத்தில் கூடப்போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு ஊருக்கு செல்கிறோம்.  அந்த மகிழ்ச்சியோடு அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Saturday, 4 December 2010

இடுக்கண் வருங்கால் நகுக

இன்னிக்கு நாட்டு நிலைமை இப்படித்தான் இருக்கு. மக்களே ஊழல்தொகையை பார்த்து மனம் வருந்தாதீர் என்று அரசியல்வியாதிகள் கோமாளிகளாக மாறி தினம் தினம் அறிக்கை விட்டு  மக்களை வேதனையில் சிரிக்க வைக்கறாங்க.
ஆரம்பிச்சு வச்சுது இத்தாலி மகராசி அன்னை சோனியா காந்தி

ஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா "அட்வைஸ்"

எப்படீங்க போஃபர்ஸ் விவகாரத்தில் குவாட்ரோச்சியை தப்பிக்க வச்சீங்களே அது மாதிரியா? இல்லை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை 16 மாசம் மூடிவச்சீங்களே அது மாதிரியா? புரியலீங்க தெளிவா சொன்னா எல்லாருக்கும் உபயோகப்படும்ல!

அடுத்து வந்தாருய்யா நம்ப மாண்புமிகு(?!) முதலமைச்சர்

ஊழல் விஷயங்களில் நான் நெருப்பு மாதிரி!

எப்படீங்க எங்கயாச்சும் ஊழல் பண்ண வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச உடனே நெருப்பு மாதிரி கப்புன்னு புடிச்சுக்குவீங்களே அதுமாதிரியா? இல்லை பணம் கொழிக்கும் துறைகள் உங்களுக்கு வேணும்னு நெருப்பு மாதிரி இருந்து சாதிப்பீங்களே அது மாதிரியா? சொல்றதை தெளிவா சொன்னா நாங்களும் நெருப்பு மாதிரி இருப்போம்ல

அடுத்து அடிச்சாரு பாருங்க ஒரு ஜோக்கு...

"கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை"

ஆமாமா வேற எல்லாம் "வாங்கவில்லை". நாங்க நம்பிட்டோம்.

அதுலயும் ஓடாத படங்களுக்கு கதைவசனம் எழுதி 50லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாராம். இதுதாங்க இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜோக்.

நானும் கதைவசனம் எழுதலாமான்னு யோசிக்கறேன். 50லட்சமெல்லாம் வேணாம் ஒருலட்சம் கிடைச்சாலும் போதும்.

அடுத்து துணைமுதல்வர் எனக்கு மட்டும் ஜோக்கடிக்கத் தெரியாதான்னு கேட்டுட்டு வந்தார்

"தி.மு.க ஆட்சியின், "இமேஜ்' உயர்ந்து கொண்டிருக்கிறது : துணை முதல்வர் பெருமிதம்"

ஹி ஹி டங்கு ஆஃப் த ஸ்லிப்பு தூ தூ ஸ்லிப்பு ஆஃப் த டங்கு... டேமேஜ்னு சொல்றதுக்கு பதிலா இமேஜ்னு சொல்லிட்டார் போல

எது எப்படியோ நல்லா வாய் விட்டு சிரிக்கலாம் இந்த ஜோக்குக்கு.
அரசியல்வாதிக்கு குறைஞ்சவனா நானுன்னு ஸ்டேஜுக்கு வந்தாரு தொழிலதிபர் ரத்தன் டாட்டா
நீரா ராடியா டேப் விவகாரம்: "ரத்தன் டாடா, இது தனி மனித உரிமையை மீறிய செயல் என்று கருத்து தெரிவித்திருந்தார்."

ஆமாமா பிளாக் டை பிளாக் கவுன் ன்னு நீங்க ஜொள்ளியதையெல்லாம் வெளியிட்டது தனி மனித உரிமை மீறல்தான். அதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனா மாறன் மந்திரி ஆகக் கூடாதுன்னு சொன்னீங்களே அது என்னங்க தனி மனித விஷயம் புரியலியே! சொன்னீங்கன்னா அப்பாவிங்க நாங்க புரிஞ்சுக்குவோம்.

மக்களே தினந்தோறும் செய்தித் தாள் படியுங்க. நம்ப அரசியல்வியாதிகள் வெளியிடற அறிக்கைகளைப் படிச்சா வாழ்க்கையில் என்ன டென்ஷன் ஸ்ட்ரெஸ் எல்லாம் இருந்தாலும் பறந்து போயிடும். வாய் விட்டு சிரிப்பீங்க

இடுக்கண் வருங்கால் நகுக!

Wednesday, 1 December 2010

முதன்முறை அழுகைகள்- ஒரு எதிர்வினை!

வலைப்பூ ஆரம்பிச்சு பல மாதங்கள் ஆயிடுச்சு. இதுவரைக்கும் ஒரு எதிர்வினை கூட எழுதலேன்னா நானும் பதிவர்னு சொல்லிக்கிட்டு திரிய முடியுமா! ஆனால் எதிர்வினை எழுதி அடிவாங்கும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை. அதனால் யாரும் அடிக்க மாட்டாங்கன்னு நம்பி எதிர்கவுஜ எழுதிட்டேன் :)

நாஞ்சிலார் எழுதிய இந்த கவிதைக்கு எதிர்கவுஜ...




முதல்முறை பள்ளி சென்ற போது
வராத அழுகை

முதல்முறை பரீட்சையில்
முட்டை வாங்கியபோது
வராத அழுகை

முதல்முறை ஆசிரியரிடம்
அடி வாங்கியபோது
வராத அழுகை

முதல்முறை சைட் அடித்து அவள் அண்ணனிடம்
மாட்டிக் கொண்டதும்
வராத அழுகை

முதல்முறை காதலில் தோற்ற போது
வராத அழுகை

முதல்முறை பார்த்த பெண்
வேண்டாம்னு சொன்ன போது
வராத அழுகை

முதல் முறை வேலை புட்டுக்கிட்ட போது
வராத அழுகை

முதல்முறை காதலித்த பெண்ணை
திருமணம் செய்தபோது
வராத அழுகை

முதல்முறை மனைவி சமையலை
சாப்பிட்ட போது
வராத அழுகை

முதல்முறை மொக்கை கவுஜ
எழுதிய போது
வராத அழுகை

பல முதல்முறை அழுகைகளை
முறியடிக்கும் ஏதாவது
ஒரு பிரகாசமான பல்பை
எதிர்பார்த்து வாழ்க்கையை
பல பல்புகளுடன் கழித்துக்
கொண்டிருக்கிறார்கள்...

Tuesday, 23 November 2010

புத்தியும் மனமும்!

அப்பா உன் கண்ணில் செய்யும்


அறுவை சிகிச்சை என்னவோ

அரைமணி நேரம்தான்

ஆபத்தும் இல்லாததுதான்

காலை சென்று மாலையில் வீடு திரும்பி விடுவாய்தான்

சுற்றமும் நட்பும் உன்னருகில் இருக்கிறதுதான்

அத்தனையும் என் புத்திக்கு தெரிகிறது

மனம் கேட்க மறுக்கிறதே அப்பா!

உன் அருகில் நானின்றி

அயல்நாட்டில் அமைதியின்றி தவிக்கிறேன்

அலைபேசியில் ஆயிரம் தைரியம் சொன்னாலும்

உன் கண்ணில் ஆயுதமிடப் போவதை எண்ணி

என் கண்ணில் நீர் வடிகிறதே

அண்ணனும் இதே மனநிலையில்தான்

செய்வதறியாது தவிக்கிறான்

விரைவில் நீ குணமடைய வேண்டுமென

பிரார்த்திக்க மட்டுமே முடிகிறது எங்களால்!

Thursday, 18 November 2010

சந்தேகமுங்கோ!

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஹலோ எங்க ஓடறீங்க? சத்தியமா இது ஜெய்லானி கேட்கற மாதிரி சந்தேகம் இல்லை.  நம்புங்க அட நம்புங்கப்பா? பாருங்க ஜெய் உங்க சந்தேகங்கள் நம்ப மக்களை எம்பூட்டு தூரம் பாதிச்சிருக்குன்னு :)




என்ன பிரச்சினைன்னாலும் நம்ப எதிர்க்கட்சி எம்பி க்களும் எம்எல்ஏ க்களும் உடனே நாடாளுமன்றத்தையும் சட்டசபையையும் கத்தி கூச்சலிட்டு குடுமிப்பிடி சண்டையிட்டு ஸ்தம்பிக்க வைத்து ஒத்தி வச்சுடறாங்களே! அதனால அந்த பிரச்சினைக்கு என்னிக்காவது ஏதாச்சும் உருப்படியான முடிவு வந்திருக்கா?

அப்புறம் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிங்கற பேர்ல சபையை கூட்டி உடனே ஒத்தி வைக்கறது எல்லாம் ஓவரா இல்லை! இதுவா அஞ்சலி செலுத்தும் லட்சணம்? ஒரு நிமிடம் கண்மூடி மௌனமாக அஞ்சலி தெரிவித்து விட்டு அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் என்ன?

ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் கூடணும்னா கோடிக்கணக்கில் செலவாகுதாமே!  இப்படி ஒத்தி வைக்கறதுனால ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டறது யார்? இளிச்சவாய் மக்கள்தானா :(.

இவங்களுக்கு எல்லாம் சபை கூடும் நாளில் அகவிலைப்படி அந்தப்படி இந்தப்படின்னு படியளக்கறாங்களாமே அந்த படிகள் இப்படி ஒத்தி வைக்கப்படும் நாளுக்கும் சேர்த்துதானே கொடுக்கப் படுது?! யார் அப்பன் வீட்டுப் பணம் இப்படி பணியே செய்யாதவர்களுக்கு படி என்ற பெயரில் வீணடிக்கப் படுகிறது?

திடீர்னு எனக்கு ஏன் இந்த சந்தேகம்னு பார்க்கறீங்களா? நம்ப மாண்புமிகு(குறை) முன்னாள் அமைச்சர் ராசா விவகாரதில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது. ஏதாச்சும் பயன் இருக்கா :(. தெரிஞ்சவங்க தெளிவு படுத்தினா புண்ணியமா போகும்.

Tuesday, 9 November 2010

கவிசிவானந்தாவின் தனிமை இனிமை கொடுமை-வாழ்வியல் போதனைகள் :)

பெரும்பாலானவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி "எப்படி தனியா இருக்கறீங்க கஷ்டமா இல்லையா?". தனியா இருக்கறது அவ்வளவு கஷ்டமா என்ன? இவங்க அகராதியில் காலையில் ரங்ஸ் அலுவலகம் சென்றதிலிருந்து இரவு திரும்ப வரும்வரை வீட்டில் இருப்பதுதான் தனிமை, தனியாக இருப்பது எல்லாம்.


நம்ப அம்மாவும் இப்படித்தானே இருந்தாங்க. அவங்களுக்கு இல்லாதிருந்த தனிமை உணர்வு இப்போ எப்படி வருது? வெளிநாட்டில் இருப்பதாலா?! நானும் வெளிநாட்டில்தான் இருக்கிறேன். ஆனா எனக்குத் தனிமை உணர்வு இல்லையே! அது ஏன்?!

யோசிச்சுப் பார்த்தா எனக்கு புரிஞ்சது இதுதான். மனசு... இதுதான் தனிமை உணர்வுக்கும் அது இல்லாமல் இருப்பதற்கும் ஒரே காரணம்.

திருமணமாகி வெளிநாடு வரும் பல பெண்களும் சந்திப்பதுதான் இந்த பிரச்சினை. கணவர் துணையின்றி வெளியில் செல்ல முடியாது. கணவர் வரும் வரை வீட்டிற்குள்ளேயேதான் இருக்க வேண்டும். இவை ஒரு வித மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது தனிமையின் இனிமையும் கொடுமையும்.

எந்த விஷயத்தையும் பாசிட்டிவாகவும் பார்க்கலாம். நெகடிவாகவும் பார்க்கலாம். திருமணமான புதிதில் ஏற்படும் இந்த தனிமையை எப்படி பாசிட்டிவா பார்க்கலாம்?  கணவன் மனைவிக்கிடையே மூன்றாவது மனிதர் இடையூறு இல்லாமல் இருக்கலாம். இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்க இந்த தனிமையை பயன் படுத்திக் கொள்ள முடியும். கணவர் வரும் நேரத்தில் புன்னகையுடன் எதிர்கொண்டு இனிமையாக பேசி களித்து சந்தோஷமாக இருந்தால் அதுவே அடுத்த நாளுக்கான புத்துணர்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்குமே!

இதையே எப்படி நெகடிவாக அணுகலாம்?  பகல் எல்லாம் நான் தனியாக இருக்கிறேன். கஷ்டப் படுகிறேன்னு கணவர் அலுவலகத்தில் இருந்து வந்ததும் மூக்கைச் சிந்தினால் முதலில் கணவர் பரிதாபப் பட்டு நம்மை வெளியில் அழைத்து சென்று சமாதானப் படுத்த முயன்றாலும் இது தொடர்கதையானால் அவருக்கே சலிப்பு தட்டி விடும். தாம்பத்தியத்தையே அது பாதிக்கும். தேவையா இது?

இப்போதெல்லாம் திருமண நிச்சயதாம்பூலத்திற்கும் திருமணத்திற்கும் இடையே குறைந்தது ஆறு மாத காலம் இடைவெளி இருக்கிறது. அந்த காலத்தில் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அப்போதே அந்த ஆண் அவர் இருக்கும் ஊரைப் பற்றி அவருடைய வேலையைப் பற்றி வேலை நேரத்தைப் பற்றி பெண்ணிடம் விளக்கி விட்டால் அந்த பெண்ணாலும் புதிய வாழ்க்கையை எதிர்கொள்ள மனதைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். (திருமணம் நிச்சயிக்கப்பட்ட, நிச்சயிக்கப்பட இருக்கும் மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ளவும் :D)

என்னதான் மனதைத் தயார்ப் படுத்தினாலும் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். தனிமையை வெல்ல இணையம் ஒரு வரப்பிரசாதம். மெல்லிய இசையை வீட்டில் எப்போதும் ஒலிக்க விடலாம். நமக்குப் பிடித்த ஹாபியை தொடரலாம். படிக்க நினைத்து முடியாது போன விஷயங்களைப் புதிதாக கற்றுக் கொள்ளலாம். மொத்தத்தில் நமக்குப் பிடித்த விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு நம்மை எப்போதும் எங்கேஜ்டாகவே வைத்திருந்தால் தனிமைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பீங்க என்னை மாதிரி :-)).

என்னைப் பொறுத்த வரை தனிமை எனக்கு கொடுமையாக இல்லை. இனிமையாகவே இருக்கிறது :-). ஆரம்பத்தில் கொடுமையாக இருந்தது உண்மை. ஆனால் எதிர்பார்ப்புகளைத் தூர எறிந்து விட்டு யதார்த்தத்தை மனம் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்ததும் இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. சந்தோஷமாகவே இருக்கிறோம்.

எனக்கு மற்றவர்கள் எல்லாம் எப்படி தனியா இருக்கீங்கன்னு கேட்கும் போதுதான் நாம் தனியாத்தான் இருக்கோமோ அப்படீன்னு தோணுது :(. ஆனால் நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரியும். என் மனதுக்குத் தெரியும். என் சொந்தங்கள் நட்புகள் தொலைவில் இருந்தாலும் எனக்காக அவர்கள் இருக்கிறார்கள் என்று என் மனதுக்கு நல்லாவே தெரியும். நான் தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லை :-).

தனிமையை தூக்கி எறியுங்க சந்தோஷமா இருங்க. எனக்கு அது இல்லையே இது இல்லையேன்னு இல்லாததை நினைத்து இருப்பதைத் தொலைக்காமல் இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவேது :-)
 
அன்புடன்,
கவிசிவானந்தா :-)

Wednesday, 3 November 2010

மலரும் தீபாவளி நினைவுகள் :-)

தீபாவளி வருது. அது பற்றி பதிவு போடலேன்னா மொக்கை போடும் பதிவுலகம் என்னாவது?

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி அலங்காரம்(2009ல்)

    சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி அலங்காரம்(2008ல்)



சிறுவயதில் தீபாவளின்னா (அப்போ நீ கிழமான்னு கேணத்தனமா உண்மையை எல்லாம் கேட்கப் படாது :D) கொண்டாட்டம் குதூகலம்தான். புதிய காலெண்டர் வந்தவுடன் பார்ப்பது இரண்டு விஷயங்கள். முதலில் எனது பிறந்த நாள்(நட்சத்திரப் படி) . அடுத்தது தீபாவளி!

எப்படி பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதம் முன்பே எங்கப்பாவை ட்ரெஸ் வாங்கணும்னு கேட்டு நச்சரிப்பேனோ அதே போல் தீபாவளிக்கும் நச்சரிக்க ஆரம்பித்து விடுவேன் :). பெரும்பாலும் ரெடிமேட் ஆடைகள்தான். அதனால் டெய்லர் கடையில் போய் காத்து நிற்கும் வேலையெல்லாம் அப்போ கிடையாது.

நல்ல நாள் எல்லாம் பார்த்து அப்பா அம்மா அண்ணா நான்னு தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்க கிளம்புவோம். நமக்கு ட்ரெஸ்சை விட அதன் விலைதான் ரொம்ப முக்கியம் :). அழகான ட்ரெஸ்ஸாக இருந்தாலும் விலை குறைவானது என்றால் எனது அப்போதைய அகராதியில் நல்லா இல்லைதான் :). எங்க அப்பாவுக்கு கொஞ்சமே கொஞ்சம் எங்கயாவது ஜரிகை இருந்து விட்டால் போது ரொம்ப பிடித்துப் போகும் (அப்பா அப்படித்தானே :D). அப்படி இப்படி கொஞ்சம் அழுது அடம் பிடிச்சு நான் நினைக்கற ட்ரெஸ்ஸை வாங்கிடுவேன். அண்ணா பாவம் அதிகமா எதுவும் சொல்ல மாட்டார். கொஞ்சம் வளர்ந்த பிறகு அவரே ஃப்ரெண்ட்ஸோட போய் எடுத்துக்குவார். அம்மாவும் அதிகமா எதுவும் சொல்ல மாட்டார். (நீதான் குடும்பத்தில் ரவுடியான்னு கேட்கக் கூடாது. ஹி ஹி கடைக்குட்டி அதான் அப்படி)

பலகாரங்கள் எல்லாம் அம்மாவும் பாட்டியும் பத்து நாட்களுக்கு முன்னாடியே செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. அச்சு முறுக்கு, முறுக்கு, முந்திரி கொத்து இந்த மூணு ஐட்டங்களும் தவறாமல் எல்லா தீபாவளிக்கும் செய்யப்படும். வழக்கம் போல் நான் முதலில் எதுவும் சரியாக சாப்பிடாமல் எல்லாம் தீர்ந்த பிறகு நான் சாப்பிடவே இல்லைன்னு சொல்லி அழுவேன் :(. எங்க பாட்டி என் குணம் தெரிந்தே கொஞ்சம் தனியா வச்சிருப்பாங்க :)

எட்டு வயது வரை நாங்கள் இருந்தது ஒரு கிராமம். தீபாவளிக்கு முன் சிவகாசியில் படித்துக் கொண்டிருந்த உறவினர் ஒருவரிடம் சொல்லி அப்பா பட்டாசு வாங்கிட்டு வரச் சொல்வார். கம்பி மத்தாப்பு வைக்கக் கூட பயப்படும் படுதைரியசாலி நான் :). அப்பா வாழைத்தண்டில் கம்பி மத்தாப்பை குத்தி பிடிக்க வைப்பார் :). அதையும் அப்படியே கையை நீட்டிக் கொண்டு தலையை திருப்பிக் கொண்டு பிடிப்பேன். ஆனால் அதிலும் ஒரு சந்தோஷம். அண்ணாவும் அப்பாவும் சேர்ந்து ராக்கெட் எல்லாம் வெடிப்பாங்க.

கடைசியா ட்ரெயின் வெடி! நீளமா கயிறு கட்டி அதன் ஒரு முனையில் பத்த வச்சா அது அப்படியே ட்ரெயின் மாதிரி போகும். அதைப் பார்க்க எல்லாரும் ஏதோ புல்லட் ட்ரெயினின் வெள்ளோட்டம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நிற்போம் :)

கொஞ்சம் வளர்ந்த பிறகு மதுரை நாகர்கோவில்னு வந்துட்டோம். மதுரையிலும் தீபாவளி ஜாலிதான். முந்தைய நாள் இரவு வீட்டிலுள்ள ஆண்கள் மட்டும் (நிறைய உறவினர்கள் மதுரையில் இருந்ததால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு வீட்டில் கூடிதான் தீபாவளி கொண்டாட்டம்) மதுரை டவுன்ஹால் ரோட்டுக்கு போவாங்க பட்டாசு வாங்க. எல்லா சாமான்களும் மிகவும் மலிவாக கிடைக்கும். இப்போது நடக்கிறதான்னு தெரியலை. அங்கேயே ஒரு பெரிய பையோ பக்கெட்டோ வாங்கி அது நிறைய பட்டாசு வாங்கிட்டு வருவாங்க. கம்பி மத்தாப்பு மட்டுமே எனக்கு :(

அப்புறம் நாகர்கோவிலில் தீபாவளி. சேட்டிலைட் தொலைக்காட்சியின் தாக்கம் ஆரம்பித்திருந்த நேரம். நானும் கம்பி மத்தாப்பிலிருந்து ஊசிவெடிக்கு பிரமோஷன் ஆகியிருந்தேன். அதைக் கூட ஏதோ ஆட்டம் பாம் ரேஞ்சுக்கு திரியை எல்லாம் பிய்த்து ஊதுபத்தியால் பயந்து பயந்து வைப்பேன் :)

அப்புறம் காலேஜ் போன பிறகு வெடிகளின் மீது நாட்டம் குறைந்து விட்டது. ஆனாலும் தீபாவளின்னா சந்தோஷம் இருந்துச்சு.
இப்போ இங்கே தீபாவளி வார நாட்களில் வந்தால் வார இறுதிக்கு தள்ளிவைக்கப் படுகிறது :(. தீபாவளி நேரத்தில் இந்தியாவில் இருந்தால் கூட முன்பிருந்த கொண்டாட்டம் குறைவாகவே இருக்கிறது. எல்லோரும் டிவி முன்னே தவம் கிடக்கிறார்கள். தெருக்களில் குழந்தைகள் வெடி வெடிப்பது கூட குறைந்து விட்டது :(. ஏதோ கடமைக்காக கொண்டாடுவது போல் இருக்கிறது.
இங்கு தீபாவளிக் கொண்டாட்டங்கள் வசதியான நாட்களுக்கு மாற்றப் பட்டாலும் கூட அன்றைய நாள் நிஜம்மாகவே தீபாவளி போல் நண்பர்கள் இணைந்து கொண்டாடுகிறோம். வெடிகள் வெடிக்கிறோம். ஆட்டம் பாட்டம்னு சந்தோஷமா இருக்கோம். ஆனாலும் எதையோ இழந்த உணர்வு இருக்கவே செய்கிறது. இந்த தடவை எங்கள் ஊர் தீபாவளிக் கொண்டாட்டம் நவம்பர்28 :).

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தலைதீபாவளி கொண்டாடுபவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

தனி தீபாவளி கொண்டாடும் சகோஸ் அடுத்த வருடம் ஜோடியோடு தலை தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்! :)

Tuesday, 2 November 2010

தூதரகம்னா இப்படி இருக்கணும்!

நமது இந்திய தூதரகங்கள் மீது பொதுவாக நமக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. கசப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கும். தூதரக அதிகாரிகளை பலவாறாக குறை சொல்லியிருப்போம்.


ஆனால் சில நல்ல இந்திய தூதரகங்களும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டவே இந்தப் பதிவு.

நாங்கள் இருப்பது இந்தோனேஷியாவில். (அதான் தெரியுமே திரும்ப திரும்ப எதுக்கு சொல்லிக்கிட்டு :D). நாங்கள் இருக்கும் தீவின் அருகே இருக்கும் இந்திய தூதரகம்னா அது மேடான் ல் இருக்கும் தூதரகம்தான். கடல் கடந்து விமானத்தில்தான் போக முடியும். சிறு சிறு தூதரக வேலைகளுக்கு கூட போய் வருவது என்பது சிரமம்.

அதனால் தூதரக அதிகாரிகள் இங்குள்ள இந்தியர்கள் சங்கத்தோடு இணைந்து வருடத்திற்கு இரண்டு முறை நாங்கள் இருக்கும் தீவில் கேம்ப் நடத்துவார்கள். கேம்ப் நடக்க ஒரு மாதம் முன்பாகவே இந்திய சங்கங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் மெயில் மூலம் தெரிவிக்கப் பட்டு விடும்.

அப்போது தங்களுக்கு என்னென்ன பாஸ்போர்ட் மற்றும் தூதரக சேவைகள் வேண்டுமோ அது பற்றி தூதரகத்துக்கு மெயில் அனுப்பி விட வேண்டும். ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டியதையும் செய்து விட வேண்டும். உதாரணமாக பிறப்புச் சான்றிதழ் பெறுவது, பாஸ்போர்ட் புதுப்பித்தல், பாஸ்போர்ட்டில் கணவர்/மனைவி பெயர் சேர்த்தல், பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்க வேண்டிய சான்றிதழ் பெறுதல் இப்படி தூதரகத்தில் செய்யப்படும் அத்தனை சர்வீஸ்களும் செய்து கொடுக்கப் படும்.

கேம்ப் நடக்கும் அன்று காலையில் நம்மிடம் இருந்து டாக்குமெண்டுகள் மற்றும் கட்டணத் தொகையை பெற்றுக் கொள்வார்கள். மாலையில் போய் வாங்கிக் கொள்ளலாம். சில வேலைகள் உடனேயே முடிந்து விடும். ஒரு மணிநேரத்திற்குள் கையில் கொடுத்து விடுவார்கள்.அப்போது தூதரக அதிகாரிகளும் நம்மோடு தோழமையோடு பேசுவார்கள். நமக்கு ஏதும் பிரச்சினை இருக்குதான்னு கேட்டு தயங்காமல் அணுகுங்கள் என்றும் சொல்லுவார்கள்.

இந்த சேவைகளை நாம் பெற தூதரகத்தில் நம் பெயரை பதிந்திருக்க வேண்டும். ஏற்கெனவே பதியாதவர்கள் இந்த கேம்ப் நடக்கும் போதே பதிந்து கொள்ளலாம். அப்படி பதிந்து கொண்டால் கேம்ப் நடக்கும் வரை கூட காத்திருக்கத் தேவையில்லை.

ஆன்லைனில் அப்ளை பண்ணி விட்டு டாக்குமெண்டுகளை கூரியரில் அனுப்பி வைத்து தூதரக அதிகாரிக்கும் ஒரு மெயில் செய்து விட்டால் போதும். நமக்கான வேலைகள் எளிதில் முடிந்து விடும். நமக்கு ஏதும் சந்தேகம் என்றாலும் நேரடியாக தொடர்பு கொண்டு பேச முடியும்.

சென்ற ஆண்டு தீபாவளிக்கு இந்திய தூதரகம் இங்குள்ள இந்தியர்களுக்காக சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அருமையாக நடத்தினார்கள் (மழைதான் கொஞ்சம் சொதப்பிடுச்சு).

ஒருமுறை இங்கே சுற்றுலா வந்த இந்திய பயணி இறந்து விட அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க எல்லா உதவிகளையும் தூதரகம் செய்தது. ஆனால் பொதுமக்களாகிய நாமும் அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த பத்து வருடங்களில் இரண்டு முறை பாஸ்போர்ட் அடிஷனல் புக்லெட் வாங்கியிருக்கிறேன். ஒருமுறை பாஸ்போர்ட் புதுப்பிக்கவும் செய்தாச்சு. எந்த பிரச்சினையும் இல்லை. பாஸ்போர்ட் புதுப்பிக்க எல்லாவற்றையும் கூரியரில்தான் அனுப்பினேன். இரண்டு வாரத்தில் வீடு தேடி பாஸ்போர்ட் வந்திடுச்சு.

எங்கள் நண்பர் ஒருவர் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு தவித்த போது கூட அவருக்கு எல்லா உதவிகளையும் செய்து புது பாஸ்போர்ட் கிடைக்க வழி செய்து கொடுத்தது.

எல்லா தூதரகமும் இதுபோல் இருந்தால் நல்லா இருக்கும் :). ஒருவேளை மற்ற நாடுகள் போல் இல்லாமல் இங்கு இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் எல்லோரையும் அவர்களால் சரியாக கவனிக்க முடிகிறதோ!

நாமும் இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமாவது தமிழர் சங்கம், மலையாளி சங்கம், பஞ்சாபி சங்கம்னு மாநில வாரியா ஒரு சங்கம் வச்சுக்காம பொதுவா இந்திய சங்கமாக இணைந்து தூதரகங்களோடு இணைந்து பணியாற்றினால் எல்லோரும் பயனடையலாம்.

சில தூதரகங்களில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவு. அப்படிப்பட்ட சூழல்களில் இது போன்ற கேம்ப்கள் அமைத்து தன்னார்வ ஊழியர்களையும் இணைத்துக் கொண்டு பணிகளைச் செய்தால் பலரும் ஒரே நேரத்தில் பலனடையலாம். ஒரேயடியாக குறை சொல்லிக் கொண்டிருக்காமல் இப்படியும் முயற்சிக்கலாமே!

டிஸ்கி:

ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகம் பற்றி தெரியவில்லை. மேடானில் உள்ள இந்திய தூதரகம் சிறந்ததுதான். எனக்குத் தெரிந்தவரை இங்கே யாரும் தங்களுக்கு கசப்பான அனுபவம் நடந்ததாக சொல்லவில்லை.

Sunday, 31 October 2010

ரங்ஸ் கொடுத்த பல்பு :(

இன்னிக்கு டின்னருக்கு வெளிய போகலாம்னு ரங்கமணி சொல்லிட்டார். (இன்னிக்கு ஒருநாளாவது தப்பிச்சுக்கலாம்னு நினைச்சிருப்பார். அது பொறுக்காதே!). நானும் நல்லா பந்தாவா கிளம்பி ரெடியாயிட்டேன். இல்லேன்னா பெரிய ரெஸ்ட்ராண்டுகளுக்கு கூட்டிட்டு போகாம குட்டி கடைகளுக்குப் போய் பர்சை பாதுகாத்துக்குவாரே! அதுக்கெல்லாம் இடம் கொடுக்கலாமோ! (அதானே நாம யாரு)



நான் நினைச்ச படியே ஸ்டார் ஹோட்டலுக்குத்தான் போனோம். (நீ நினைக்கறதைத்தானே அவரு நினைச்சாகணும். வேற வழி). கேண்டில் லைட் டின்னர்ங்கற பேர்ல கரண்டு செலவை மிச்சம் புடிக்கறான் ஹோட்டல் காரன். கூடவே அந்த மங்கலான வெளிச்சத்துல மெனுகார்டில் ஒவ்வொரு ஐட்டங்களுக்கும் என்ன விலைன்னு சரியாவே தெரிய மாட்டேங்குது. அதானே அவனுக்கு வேணும். இது புரியாம ஆஹா ரொமாண்டிக் லைட்டிங்னு மதி மயங்கிடறோம். பில் வரும்போதுதானே தெரியும் ரொமாண்டிக்கா இல்லையான்னு!



மெனு கார்ட் வந்ததும் நீங்களே ஆர்டர் பண்ணிடுங்கன்னு அவரோட சாய்சுல விட்டுட்டேன். (மெனுவுல போட்டிருக்கறது என்ன ஐட்டம்னு தெரியாது எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்னுதானே அப்படி சொல்லியிருப்ப). அவரும் ஏதோ ஸ்டீக் ஹாட் ப்ளேட் -னு ஆர்டர் செய்தார். முன்னாடியே இதுபோன்று சிக்கன் ஸ்டீக் சாப்பிட்டிருக்கிறேன் என்பதால் நானும் ஓகே சொல்லிட்டேன்.



ஆர்டர் பண்ணின ஐட்டமும் வந்தது. நானும் சாப்பிட்டேன். ரொம்ப டேஸ்டியா இருந்துச்சு. ஆனா எப்பவும் சாப்பிடற மாதிரி இல்லை. அவரிடம் கேட்டதற்கு இது நல்லாயில்லையா வேற ஆர்டர் பண்ணவான்னார். நல்லா இருக்கு ஆனா எப்பவும் சாப்பிடறது மாதிரி இல்லைன்னேன். நல்லா இருக்குல்ல சாப்பிடுன்னார். நானும் நம்பி சாப்பிட்டேன்.



ஆனா ரங்ஸ் முகத்துல ஏதோ கள்ளத்தனம் தெரிஞ்சுது. சாப்பாட்டோட ருசியில அதை பெருசா எடுத்துக்கலை. எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் சாப்பாடு பிடிச்சிருந்துதா அப்படீன்னு கேட்டார். நானும் ரொம்ப நல்லா இருக்குங்க அடுத்தவாட்டியும் இங்கேயே வருவோம்னேன்.



அவர் சிரிச்சுக்கிட்டே பீஃப் எல்லாம் சாப்பிட மாட்டேன்னு ரொம்ப பந்தா காமிச்ச இப்போ அதை நல்லா ஒரு வெட்டு வெட்டினதும் இல்லாம அடுத்தவாட்டியும் இதுதான் வேணுங்கற அப்படீங்கறார். நான் ?!?! :((((



அடுத்து பில் வந்துச்சு. ஹோட்டல் காரன் ரொம்ப விவரம். பில் கொண்டு வரும் போது மட்டும் குட்டியூண்டு டார்ச் லைட் கொண்டு வந்து பில்லில் அடிச்சுக் காமிக்கறான். இது மட்டும் தெளிவா தெரியணுமாம். பில்லைப் பார்த்து மயக்கம் போடாத குறைதான் :(



முள்ளங்கி சாப்பிடாதவருக்கு பருப்போடு சேர்த்து கடைந்து கொடுத்து ஏமாத்தினதுக்கு இப்பூடி பழி வாங்கிட்டார். ஆனாலும் பீஃப் ரொம்ப ருசியா இருந்திச்சு :). அடுத்தவாட்டி சாப்பிடுவேனான்னு கேட்டால் பதில் நோ தான். தெரியாமல் சாப்பிட்டதால் ஓகே. ஆனால் பீஃப்னு தெரிஞ்சப்புறம் சாப்பிட முடியாது :(. ஏன்ன்னு எல்லாம் கேட்கக் கூடாது. அது அப்படித்தான் :)



டிஸ்கி: ரங்க்ஸைப் பற்றி எழுதினாலே கூடவே மைண்ட் வாய்சும் வந்துடுது :(. ஃபோட்டோ கூகுளாண்டவரிடம் சுட்டது :))

Sunday, 24 October 2010

சாதனைத் தமிழன்

இது எனக்கு மெயிலில் வந்த செய்தி

நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள். நம்மை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கும் இந்த தமிழரின் சாதனை சமூகத்தொண்டை எல்லோரிடமும் கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் வலைப்பூவில் இதனை வெளியிட்டு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெற உதவுவோம்.


                           A real hero from Madurai

                                     http://heroes.cnn.com/vote.aspx



2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.



இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்

வயது : 29

இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust

9, West 1st Main Street,

Doak Nagar Extension,

Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
E mail : ramdost@sancharnet.in


மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

பின்குறிப்பு: ஒருவரே எத்தனை ஓட்டு வேண்டுமென்றாலும் போடலாம். எந்த கட்டணமும் இல்லை. கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை ஓட்டு போடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, 21 October 2010

தென்னை மரத்தில் தேள் கொட்டியதால் பனை மரத்தில் நெறி கட்டியிருக்கிறது

இந்தோனேஷியாவின் சுமத்ராவில் காட்டுத் தீ. இதன் காரணமாக சிங்கப்பூரிலும் மலேஷியாவிலும் இந்தோனேஷியாவிலும் ஒரே புகை மூட்டம். காற்றுத் தரக் குறியீட்டு எண் 108 ஐ தாண்டி விட்டது. இது ஆரோக்கியமான நிலை இல்லை.குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் ரொம்பவே சங்கடமா இருக்கும். சென்ற ஆண்டு இதே போல் புகை மூட்டம் ஏற்பட்ட போது கண் எரிச்சல் ஏற்பட்டது. இப்போதும் லேசான கண் எரிச்சல் இருக்கிறது. இந்த ஆண்டு அந்த அளவுக்கு மோசமாகாமல் இருக்க வேண்டும்.


இந்தோனேஷியாவில் காட்டுத் தீக்கு முக்கிய காரணம் நிலச்சீரமைப்பு என்ற பெயரில் காடுகளுக்கு தீ வைப்பதுதான். சிறு விவசாயிகள்தான் தீ வைக்கிறார்கள் என்ற போர்வையில் பல தனியார் கம்பெனிகள்தான் இந்த தீ வைப்புகளுக்கு பின்னால். ஒருகட்டத்தில் தீ கட்டுக்குள் அடங்காமல் காட்டுத் தீயாக பரவுகிறது. ஒவ்வொரு வருடமும் இதே பிரச்சினைதான்.


காடுகளை சமப்படுத்த மிக எளிதாக தீ வைத்து விடுகிறார்கள். இங்கேயே பலமுறை நான் பார்த்திருக்கிறேன். சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து சரிகட்டிடறாங்க :(


இவர்கள் இப்படி காடுகளை அழிப்பதால் புகைமூட்டம் ஒரு பிரச்சினை என்றால் தட்பவெப்ப நிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள். பத்து வருடங்களுக்கு முன் அதிகபட்சமாக 32டிகிரி செல்சியஸ் வெப்பநிலைதான் இருக்கும். மிக அரிதாக 34டிகிரி செல்சியசுக்கு போகும். இப்போது 36டிகிரி 37டிகிரின்னு சர்வசாதாரணமா போகுது. முன்பு போல் மழைப்பொழிவும் இல்லை. சில நேரங்களில் ஒரேயடியாக கொட்டி வெள்ளப்பெருக்கும் வருகிறது.


மாதம் மும்மாரின்னு சொல்லுவாங்களே அது போல் மாதம் 10 மாரிகளாவது பொழியும்.இந்த வருடம் தொடர்ச்சியாக 35நாட்கள் மழை இல்லை. நல்ல சூடும் அனுபவப்பட்டது.  நாங்கள் இருப்பது சிறிய தீவு.  மழை நீர்தான் ரிசர்வாயர்களில் தேக்கப்பட்டு விநியோகிக்கப் படுகிறது. இப்படி தொடர்ச்சியா மழை இல்லேன்னா தண்ணீர் கஷ்டம். அப்புறம் என்ன கப்பலில்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும் :(.  தண்ணீர் விநியோகம் தனியார் வசம் என்பதால் அதுவும் நடக்கும். ஒருமுறை அப்படியும் நடந்ததாம். தகவல் உண்மையான்னு உறுதியாத் தெரியலை. இப்போ இந்த புகைமூட்டம் மாறணும்னா கூட மழைபெய்ய வேண்டும்.  வருணபகவான் கருணை காட்டுவாரான்னு பார்த்துக்கிட்டு இருக்கோம்.

Sunday, 3 October 2010

காமன் வெல்த் விளையாட்டுகள் கோலாகலத் தொடக்கம்


 
முன்குறிப்பு:  கொஞ்சம் பெரிய பதிவுதான். எடிட் பண்ணாமலேயே போட்டுட்டேன் :)
 
காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பல தடைகளையும் விமர்சனங்களையும் தாண்டி இன்று கோலாகலமாக நமது தலைநகர் புதுதில்லியில் துவங்கி விட்டது.


ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டது. வழக்கமான இந்திய பங்க்சுவாலிட்டியாகத்தான் இருக்கப் போகிறது என்ற எனது நம்பிக்கையை(?!) தவிடு பொடியாக்கி சரியாக ஏழு மணிக்கு விழா தொடங்கியது.

முதலில் பிரதமரும் அவரது மனைவியும் வந்தனர். அடுத்து இளவரசர் சார்லசும் அவரது மனைவியும் வந்தனர். தொடர்ந்து நமது ஜனாதிபதி வந்தார். இவர்கள் எல்லோருக்கும் முன்னரே நம் அன்புக்குரிய ஜனாதிபதி (ஜனாதிபதிகளை 'முன்னாள்' என்று சொல்லக் கூடாது என்று எங்கேயோ படித்த ஞாபகம் :D) அப்துல் கலாம் ஐயா வந்து விட்டார்.

முதலில் நம் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் அந்த ராட்சச ஹீலியம் பலூன் உயரே எழும்பியது. அதன் அடியில் கட்டப்பட்டிருந்த எட்டு பாவைகளும் (பல்வேறு கலாச்சார உடைகள் அணிந்திருந்தவை) உயர்ந்தன. அந்த பலூனே பெரிய டிஸ்ப்ளே ஸ்க்ரீனாகவும் அமைந்தது.

முதல் கலை நிகழ்ச்சியாக நம் நாட்டின் பல்வேறு பாரம்பரிய தாள வாத்தியக் குழுக்களின் (கேரளா, மணிப்பூர், பஞ்சாப், மேலும் சில மாநில குழுக்கள்) இசை நிகழ்ச்சி. உண்மையிலேயே எல்லோரையும் எழும்பி ஆட வைக்கும் தாளம். அதிலும் ஒரு சுட்டி மழலை மேதை 7வயது கேசவ் நடுநாயகமாக அமர்ந்து தபலா வாசித்த அழகே அழகு!

அடுத்து டெல்லி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம்(ஸ்வாகதம்) அருமையிலும் அருமை. பாடகர் ஹரிஹரன் பாடலைப் பாட, வளையணிந்த கரங்கள் கை கூப்பி வணங்குவது போல் உருவம் வரும்படி மாணவர்கள் அணிவகுத்து நின்று நடனம் ஆடினர். நடனத்தின் இறுதியில் மேலே அணிந்திருந்த அங்கி போன்ற ஆடையை கழற்றியதும் சிவப்பு வெள்ளை பச்சை உடையணிந்த மாணவர்கள் மூவர்ணக் கொடியை உருவாக்கினர். அதை ரசித்து முடிக்கும் முன் திடீரென்று அவர்கள் மேல் பெரிய வெள்ளைத்துணியால் மூடினர். என்ன நடக்கிறது என்று ஆவலோடு பார்க்கையில் துணிக்கு அடியில் நின்ற மாணவர்கள் சிவப்பு வண்ணத்தால் அந்த துணியில் ஏதோ வரைய ஆரம்பித்தனர். ஒரு நிமிடத்திற்குள் அருமையான பிசிறில்லாத மெஹந்தி டிசைன் வரைந்து ஆச்சரியப் படுத்திவிட்டனர் மாணவர்கள்! இதற்காக அவர்கள் எத்தனை மாதங்கள் பயிற்சி எடுத்தனர் எனத் தெரியவில்லை. ஹேட்ஸ் ஆஃப் மாணவர்களே!

அடுத்து பங்குபெறும் 71 நாடுகளின்  விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். பாகிஸ்தான் அணி வரும் போது பகைமை மறந்து ஆரவாரத்துடன் கூடிய வரவேற்பை ஸ்டேடியத்தில் இருந்த மக்கள் அளித்தனர். இறுதியாக நமது அணியினர் வரும் போது ஸ்டேடியத்தில் இருந்த அறுபதாயிரம் பேரும் ஆர்ப்பரித்து வரவேற்றனர். டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு இந்திய குடிமகனும் பிரச்சினைகளை மறந்து மனப்பூரவமாக வரவேற்றிருப்பான் என்பது உறுதி.

ஆனாலும் அந்த சுரேஷ் களவாணி ச்சே ச்சே சுரேஷ் கல்மாடி வரவேற்புரை வாசித்த போது(உண்மையிலேயே வாசிக்கத்தாங்க செய்தார்) காமெடியா இருந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பான்னு சொல்ற கவுண்டமணிய பார்க்கற மாதிரியே இருந்துச்சு :). எத்தனை பேருக்கு காசு கொடுத்து கூட்டிட்டு வந்தாருனு தெரியலை ஒன்னுமில்லாத்ததுக்கு எல்லாம் கைதட்டி விசிலடிச்சாங்க. ஒருவேளை அவரை கிண்டல் பண்ணினாங்களோ :)

அப்புறம் குத்துச்சண்டை வீரர் சுஷில் குமார் இளவரசர் சார்லசிடம் Queen's Batton ஐ கொடுத்தார். பின்னர் அவர் இங்கிலாந்து ராணியின் செய்தியை வாசித்தார். (மகாராணியார் இந்தியா வந்தால் அதுவே அவரது கடைசிப்பயணமா இருக்கும்னு யாரோ ஜோசியர் சொன்னாராம். அதான் அவர் வரலியாம். அங்கிட்டுமா ஜோசியத்தை நம்புறாக!)

அடுத்து நம்ம ஜனாதிபதி போட்டியை துவங்கி வைத்தார். அபினவ் பிந்த்ரா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

Tree of knowledge என்ற பெயரில் குரு சிஷ்ய கல்வி முறை பற்றிய விளக்கமும் தொடர்ந்து இந்திய நடனங்களின் தொகுப்பாகவும் ஒரு நடன நிகழ்ச்சி. பரதநாட்டியம், மோகினி ஆட்டம், மணிப்பூரி நடனம், ஒடிசி, கதக், குச்சுப்புடி என் இந்திய பாரம்பரிய நடனங்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டது. அடுத்து பாரம்பரிய இந்திய கலையான யோகாசனங்களை செய்து காட்டினர்.

அடுத்து இந்திய ரெயில்வேயின் க்ரேட் இந்தியன் ஜர்னி நிகழ்ச்சி. இந்தியாவின் கலாச்சாரத்தை விளக்கும் வாகனங்கள் ஊர்வலமாக வந்தன கூடவே கிராமிய நடனக்கலைஞர்களின் நடனங்களும். அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்பதை சித்தரிக்கும் வாகனம் கூழைக் கும்பிடு போடும் அரசியல்வாதிகளோடும் ஏகப்பட்ட லவுட் ஸ்பீக்கரோடும் அமர்க்களமாக வந்தது :). இது எந்த புண்ணியவானோட யோசனைன்னு தெரியல ஆனா பார்த்து நல்லா சிரிச்சேன் :).   மணல் ஓவியக்கலைஞர்கள் காந்திஜி மற்றும் இந்தியக் கொடியோடு பின் தொடரும் மக்களையும் மணலில் ஓவியமாக வரைந்தனர். அவர்கள் வரைய வரைய அது அப்படியே டிஸ்ப்ளே ஸ்க்ரீனில் வரும் போது பார்க்க ரொம்ப நல்லா இருந்தது.

இறுதியாக வந்தார் நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.   காமென் வெல்த் விளையாட்டின் தீம் பாடலைத் தொடர்ந்து ஜெய் ஹோ பாடலைப் பாடும் போது ஸ்டேடியத்தின் பின்னணியில் வாணவேடிக்கைகள் விண்ணில் வர்ணஜாலம் காட்டியது. அதனுடன் காமென் வெல்த் விளையாட்டுப் போட்டியின் துவக்கம் இனிதே நிறைவடைந்தது.

புகைப்படங்கள் காண க்ளிக் செய்யவும்!

வீடியோ தொகுப்பு காண க்ளிக்கவும்!

Wednesday, 29 September 2010

திசைதிருப்பும் தீர்ப்பு

60 வருஷமா நீண்ட வழக்கின் தீர்ப்பு நாளைக்கு சொல்லப் போறாங்களாம். அடேங்கப்பா என்னா வேகம்!  சரி ஒரு வழியா தீர்பை சொல்லப்போறோம்னு வழிக்கு வந்துட்டாங்க. ஆனா இந்த தீர்ப்பு இப்போ வரக்காரணம் என்ன? வழக்கம் போல் மக்களை திசை திருப்பும் முயற்சியோ?!

என்னங்க பண்றது காலங்காலமா நம்ப நாட்டுல அது தானே நடக்குது. ஒரு பிரச்சினையை அமுக்க இன்னொன்றை முன்னாடி கொண்டு வரதுதானே இந்த அரசியல்வியாதிங்க பொழப்பே! மாவோயிஸ்ட் பிரச்சினையின் சலசலப்பை அடக்க உணவு தானிய பிரச்சினை. உணவுதானிய பிரச்சினையை சமாளிக்க காமன்வெல்த் பிரச்சினை. இப்போ அதை மறக்கடிக்க இந்த தீர்ப்பு.  மக்களாகிய நம்ம பழக்கமும் அதுதானே புதுசு கிடைச்சிடுச்சுன்னா பழசை மறந்துடுவோமே!

என் சந்தேகம் வலுக்கக் காரணம்... காமன்வெல்த் விளையாட்டை காரணம் காட்டியே தீர்ப்பை தள்ளி வைக்கணும்னு அபிப்ப்ராய பட்ட ஆளும் கட்சி இப்போ அந்தர் பல்டி அடிச்சிருக்கு. இப்போ உனக்கு சந்தேகம் வலுத்தா என்ன இல்லன்னா என்ன ஒன்னும் ஆகப்போறதில்லைன்னு சொல்றீங்களா அதுவும் சரிதான் :(

எது எப்படியோ தீர்ப்பை காரணம் காட்டி மக்கள் அடிச்சுக்காம இருந்தா சரி.

Monday, 27 September 2010

எங்க அப்பாவும் பிளாக் ஆரம்பிச்சாச்சு :)

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் என்னோட அப்பாவும் பிளாக் ஆரம்பிச்சுட்டாங்க :-). அவங்க பக்கத்துக்கும் விசிட் அடிங்க அப்படீன்னு உங்களை உரிமையோட கேட்டுக்கறேன் :).

குமாரமுதம் இதை க்ளிக் பண்ணினா அங்க போயிடலாம். அவர் மக்கள்நலத்துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். மக்கள் நலத்துறை பற்றிய உங்கள் சந்தேகங்களையும் கேட்கலாம். முக்கியமா பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு சரியான பதில் கிடைக்கும். 

Friday, 24 September 2010

கவிதை கவிதை

இது நான் ஒரு கவிதைப் போட்டிக்காக கிறுக்கியது. தலைப்பு "வாய்ப்பும் வியப்பும்"

யாம் பெற்ற இ(து)ன்பம் இவ்வையம் பெறுக :-)

பத்தாண்டு உணவு தானிய கையிருப்பு
பட்டினி ஏழைக்கும் வயிறு நிறையும் வாய்ப்பு
படித்த சீமான்களின் பழுதான கொள்கைப் பிடிப்பு
பசித்தவன் வாய்க்கு எட்டாது தடையானது வியப்பு!
பத்தாயத்து எலிகளுக்கு உணவாய்
பயனற்றுப் போனதில் மனம் நொந்த வெறுப்பு

பகல் கொள்ளை கல்வி கட்டணம்
சீரமைத்த அரசின் ஆணை
பரிதவித்த பெற்றோருக்கு கிடைத்த வாய்ப்பு
தடை விதித்து தன்னிருப்பை உணர்த்திய
நீதிமன்ற ஆணை கண்டு வியப்பு

பட்டிகாட்டு பட்டாம் பூச்சிகள்- பாங்காய்
படிக்க கிடைத்த சமச்சீர் கல்வி வாய்ப்பு
பகல் கொள்ளை பள்ளிகளின் முறையீட்டை
புறம் தள்ளிய நீதியின் கருணை கண்டு வியப்பு

இருமொழி கல்வி திட்டம்
இது தமிழக அரசு வழங்கிய வாய்ப்பு
இந்தியா முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு
இழந்தது தமிழர் கூட்டம் என்பது வியப்பு

தமிழில் கற்பவருக்கு வேலைவாய்ப்பில்-முன்னுரிமை
தருவதாக செப்பியது நல்ல வாய்ப்பு
தமிழில் கற்றவருக்கு கிடைத்த வேலையின்
தரம் என்னவோ கடைநிலையில்.. என்னே வியப்பு

சாதிகள் இல்லை என்று பெரியார்
சமத்துவபுரமாய் வந்தது வாய்ப்பு
கல்வியில் வேலையில் சாதி கேட்டு
கலங்க வைப்பது வியப்பு

பெண்களுக்கு முப்பத்திமூன்று சதவீத ஒதுக்கீட்டு
மசோதா கொண்டு வந்தது வாய்ப்பு
மன்றத்தில் அதனை நிறைவேற்றாத
மடமையை கண்டு வியப்பு

காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
கர்வத்தோடு பெருமை கொள்ள கிடைத்த வாய்ப்பு
கடமை மறந்த நிர்வாகிகளின் அலட்சியத்தால்
கர்வம் இழந்து தலைகுனியும் நிலை கண்டு வியப்பு.

அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்ட
அரசின் கொள்கைகள் கண்டு வியப்பு
அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ள
அருமையாய் அமைந்தது இந்த வாய்ப்பு.

Friday, 10 September 2010

இடுகையூரில் ஒரு பதிவர் சந்திப்பூஊஊஊஊ- பகுதி2

பகுதி1



எல்லோரும் கிளம்பி பஸ்ஸில் ஏறும் சமயம் ஓட்டமா ஓடி வருகிறார் இலா. கூடவே விஜியும்.

இலா: ஹி ஹி மயில் குட்டி போட கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதான் நானும் லேட்டு

ஜெய்லானி: அதை நீங்க சொல்ல வேற செய்யணுமா. எங்களுக்கே தெரியுமே!

விஜி: நானும் ஃபெட்னா விழாவெல்லாம் முடிச்சு டயர்டா இருந்தேனா அதான் லேட்டாயிடுச்சு.

எல் போர்ட்: எங்களுக்காகவும் பாட்டு பாடுவீங்கல்ல.

விஜி: உங்களுக்கு இல்லாமலா?

விஜியின் இனிமையான பாடலோடு பயணம் தொடர்கிறது.

தீம் பார்க்கில்....

இமா அங்கிருக்கும் செடிகள் பூக்களோடு கையில் இருக்கும் ஃபோட்டோக்களை வைத்துக் கொண்டு உற்று உற்று பார்க்கிறார்

ஹைஷ்: என்ன இமா என்ன ஆராய்ச்சி நடக்குது?

இமா: இது என்ன பூ காய்னு பார்க்கறேன்.

ஹைஷ்: அதுக்கெல்லாம் இவ்வளவு கஷ்டப் பட வேணாம். வேலையை பூஸ்கிட்ட விட்டுடுங்க. வேலை கச்சிதமா முடிஞ்சிடும் :)

எல் போர்ட்: இமா இப்படிப் பார்த்தா ஒண்ணுமே புரியாது. அப்படியே ஒரு ஃபோட்டோவை செலக்ட் பண்ணிட்டு இப்போ பாருங்க எல்லாமே தெளிவா தெரியும் புரியும் :)

வானதி: ஹேஏஏய் இந்த லொகேஷன் நல்லா இருக்கு. இங்கயே சமையல் போட்டி நடத்திடலாம்.

கவிசிவா: நாட்டாமை அப்துல்காதர் இன்னும் வரலை. அதனால அந்த கத்திரிக்காய் மைக்கை உள்ளே வச்சுட்டு வாங்க. இல்லேன்னா 10கிலோ கத்திரிக்காய் வீட்டுக்கு அனுப்பிடுவோம்

நாஞ்சில்: ஆஹா இந்த இடத்தை பார்த்தவுடனேயே கவுஜ எழுதணும்னு தோணுதே!

ஜலீலா: ஏன் தம்பி ஏதாச்சும் பிலிப்பினோ பொண்ணு இந்தப் பக்கமா போச்சுதா?!

நாஞ்சில்: ஏங்க்கா நான் எங்க போனாலும் விடாம நானே மறந்து போன ஃபிலிப்பினோ பொண்ணை ஞாபகப் படுத்தறீங்க?

ஸ்டீபன்: அது ஒண்ணுமில்ல தல...அவங்க எல்லாம் அப்படித்தான். ஏதாச்சும் ஒரு வார்த்தை நம்ப வாயில இருந்து தப்பித் தவறி வந்திடுச்சுன்னா ஆயுசுக்கும் அதை வச்சே ஓட்டுவாங்க. அதுக்காக நாம நினைக்கறதை சொல்லாம இருக்க முடியுமா இல்ல பதிவு போடாமத்தான் இருக்க முடியுமா?

ஜலீலா: தம்பிங்கன்னா அப்படித்தான் கிண்டல் பண்ணுவோம். ஏற்கெனவே நாங்க மொட்டமாடி கவிஜ படிச்சு நொந்து போயிருக்கோம். இப்போ இன்னொரு கவிதையும்னா... தாங்க மாட்டோம். அதான் உங்களை டைவர்ட் பண்ண... ஹி ஹி

அப்படியே எல்லாரும் நடந்து போய்கிட்டு இருக்கும் போது ஒரு இடத்தில் கொஞ்சம் சைக்கிள்கள் வரிசையா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது

எல் போர்ட்: அய்யோ என் சைக்கிள் இப்போ எப்படி இருக்கோ தெரியலியே :(. என் ஃப்ரெண்ட் அதை நல்லா கவனிச்சுக்கறாங்களோ இல்லையோ...

இலா: டேக் இட் ஈசி சந்து. தூசு படிஞ்சு போய் உங்ககிட்ட இருந்ததை விட சைக்கிள் இப்போ சந்தோஷமாவே இருக்கும்.

எல் போர்ட்: ?!?!?!?!

அப்படியே எல்லோரும் வேவ் பூல் பக்கம் வராங்க. பூலில் இருந்து யாரோ ஒருவர் நம் பதிவர்களைப் பார்த்து ஹாய் ஹாய்னு சொல்ற மாதிரி கையை ஆட்டறாங்க. எல்லோரும் திரும்பி ஹாய்னு சொல்றாங்க.

தண்ணீரைப் பார்த்ததும் பூஸ் அக்காவும் ஜீனோ தம்பியும் பயந்து நடுங்குகிறார்கள்

ஜீனோ: அக்கா அக்கா எனக்கு பயமா இருக்கு

பூஸ்(அழுகையை அடக்கியபடி): தம்பி அக்கா இருக்கறபோ பயப்படப்படாது. அக்கா மாதிரி தெகிரியமா இருக்கோணும். வா நாம அந்த சேருக்கு கீழே போய் உட்கார்ந்துக்கலாம்.

ஜீனோ: அக்கா நான் தண்ணியை பார்த்து பயப்படலை

பூஸ்: அப்புறம் தம்பி எதுக்கு நடுங்கற?

ஜீனோ: டோரா புஜ்ஜிக்கிட்ட பெர்மிஷன் வாங்காம வந்துட்டேன். இப்போ வீட்டுக்கு போனா என்னை வெளுத்து வாங்கிடும். அதான் அவ்வ்வ்வ்வ்

பூஸ்: சரி சரி நீ அடி வாங்கின அப்புறம் கண்ணை தொடைச்சுக்க ஒரு பாக்ஸ் டிஷ்யூ இமா தருவாங்க. நான் உனக்கு தைலம் வாங்கித் தரேன். அக்கா இருக்கறப்போ தம்பி இப்பூடி பயப்படப்படாது.

அப்போது வேவ் பூலில் இருந்து கை ஆட்டிய அந்தப் பெண் தட்டுத் தடுமாறி கரைக்கு வந்து...

ஆனந்தி: அடப்பாவிங்களா தண்ணிக்குள்ள மூழ்கிக்கிட்டு இருக்கேன் வந்து காப்பாத்துங்கன்னு கையை ஆட்டுனா கூலா ஹாய்னா சொல்றிங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸுங்கப்பா நீங்க எல்லாம்

ஆசியா: இன்னுமா நீங்க நீச்சல் கத்துக்கல?

ஆனந்தி: ஹி ஹி நீச்சல் தெரியும் ஆனா திடீர்னு மறந்து போச்சு

ஆசியா: நீங்க தனியாவா வந்தீங்க?

ஆனந்தி: இல்ல அப்பாவி தங்ஸும்,காயத்ரியும் வந்திருக்காங்க
கவிசிவா: அவங்க எல்லாம் எங்க?

ஆனந்தி: அதோ அங்க இருக்காங்க. காயத்ரியை யாரோ ஒரு பையன் ஆண்டின்னு சொல்லிட்டானாம். அவன அடிக்க துரத்திக்கிட்டு இருக்காங்க

பையன் எஸ்கேப்பாகி விட தளர்ந்து போய் காயத்ரி வருகிறார்

காயத்ரி: என்னை பார்த்து ஒரு பையன் ஆண்டின்னு சொல்லிட்டான். என்ன தீம் பார்க் வந்து... என்ன பிரயோஜனம்... என்ஜாய் பண்ண முடியாம பண்ணிட்டானே!

வசந்த்: ஆமாமா பாட்டியைப் பார்த்து ஆண்டின்னு கூப்பிட்டா கோபம் வரத்தான் செய்யும்.

காயத்ரி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்பாவியும் வந்து சேர்கிறார்.

அப்பாவி: எல்லாரும் எப்படி இருக்கீங்க?

மைண்ட் வாய்ஸ்: இவ்வளவு நேரம் நல்லாத்தான் இருந்தாங்க. இப்பதான நீ வந்திருக்க. இனிமே கஷ்டம்தான்.

அப்பாவி: அப்பப்பா எங்க போனாலும் இந்த மைண்ட் வாய்ஸ் தொல்லை ரொம்ப ஜாஸ்தியா போச்சு

மைண்ட் வாய்ஸ்: ஏன் சொல்ல மாட்ட... உன்னோட பிளாகுக்கு நிறைய பேர் வர்றதே மைண்ட் வாய்சை படிக்கத்தான். அது என்னிக்குத்தான் உனக்கு புரியப்போகுதோ

அப்பாவி: சரி சரி ஒத்துக்கறேன். இப்போ என் இமேஜை டேமேஜ் பண்ணாதே ப்ளீஸ்

மைண்ட்வாய்ஸ்: அது நல்ல பிள்ளைக்கு அழகு

ஜெய்லானி: இந்த குளத்தில் இருக்கும் தண்ணி பச்சைத் தண்ணியா சுடு தண்ணியா

வசந்த்: பச்சைத்தண்ணிதான். ஏன் சுடுதண்ணி சமைக்கப் போறீங்களா?

ஜெய்லானி: பச்சைத் தண்ணியா? அப்போ ஏன் இது பச்சை நிறத்தில் இல்லை? பச்சை நிறத்தில் இல்லாததை ஏன் பச்சைத் தண்ணின்னு சொல்லணும்?

கவிசிவா: அடடா ஆரம்பிச்சுட்டாரய்யா ஆரம்பிச்சுட்டாரு. இனி வரிசையா சந்தேகம் வருமே. வாங்க வாங்க இங்க இருந்து போயிடலாம். இல்லன்னா சந்தேகம் கேட்டே நம்மளக் கொன்னுடுவார்.

ஜெய்லானி: ஏன் நான் அடுத்த இடத்துக்குப் போனா எனக்கு சந்தேகம் வராதா? அப்படீன்னா ஏன் வராது? இங்கன்னா மட்டும் ஏன் சந்தேகம் வருது?

நாஞ்சில்: இது வேலைக்காகாது. ரெண்டு மூணு அ.கோ.மு. வை வாயில் வச்சு அமுக்குங்கப்பா.

ஜெய்லானி: என் வாயிலயா? உங்க வாயிலயா?

நாஞ்சில்: மக்கா ஸ்டீபா என்னை காப்பாத்தூஊஊஊஊ

வசந்த் ஜெய்லானியை திசை திருப்பும் விதமாக சிறிய விளையாட்டுப் போட்டியை நடத்துகிறார். இரண்டு படங்களைக் காட்டி அதற்கான வார்த்தையை கண்டு பிடிக்க சொல்கிறார்.

நாஞ்சில்: தல எனக்கு தூக்கம் வருது. அப்புறமா வந்து விடை சொல்றேன்

ஸ்டீபன் சரியான விடையை சொல்லி பரிசைத் தட்டி செல்கிறார்.

தூரத்தில் ஒருவர் மேஜை அடுப்பு எல்லாம் ரெடியா வைத்து கையில் சுத்தியோடு காத்திருக்கிறார். யாருன்னு பார்த்தா... நாட்டாமை அப்துல் காதர்.

அப்துல்காதர்: வானதி அக்கா சொன்ன மாதிரி இங்கேயே சமையல் போட்டியும் நடத்திடலாம்.

நாஞ்சில்: இது வேறயா?

ஸ்டீபன்: ஆசியாக்கா இந்தாங்க நீங்க கேட்ட மாங்காய். திருட்டு மாங்காய்தானே ருசிக்கும் அதான் பக்கத்து வீட்டில் திருடிக் கொண்டு வந்தேன். வெற்றி உங்களுக்குத்தான்.

மற்ற போட்டியாளர்களும் சமையலுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க அப்பாவி ஒரு பெரிய பார்சலை எடுத்து மேசை மேல் வைக்கிறார்.

அப்துல்காதர்: அது என்ன இவ்ளோ பெரிசா எடுத்துட்டு வந்திருக்கீங்க

அப்பாவி: இட்லி குண்டானும்,நானே அரைத்த இட்லி மாவும்

மற்ற எல்லோரும்: என்னது அப்பாவி இட்லி சமைக்கப் போறாங்களா...... எஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏஏஏப்...................

எல்லோரும் மறைந்து விட அப்பாவியாக தங்கமணி தான் கொண்டு வந்த மாவில் இட்லி செய்து சோகமாக தண்ணீரில் எறிந்து கொண்டிருக்கிறார்.

மைண்ட் வாய்ஸ்: எதுக்கும் கொஞ்சம் மெதுவாவே இட்லியை வீசு. இல்லேன்னா பாவம் தண்ணியில் உள்ள மீனெல்லாம் அடிபட்டு செத்துப் போகும்.

அப்பாவி: ?!?!?!?!