Saturday, 31 July 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்...நாட்டுக்கு ரொம்ப தேவை

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த (மாட்டி விட்ட) பிரியமுடன் வசந்த்துக்கு நன்றி :-)

வழக்கம் போல இதுவும் மொக்கையாத்தான் இருக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும் :-).

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அதான் எல்லாருக்குமே தெரியுமே கவிசிவா ன்னு (என்னா விவரமா கேட்கறாங்கப்பா)

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இந்த கேள்விக்கு கண்டிப்பா உண்மைய சொல்லணுமா? சொல்லிடறேன். என் உண்மை பெயரில் பாதிதான் பதிவில் தோன்றும் பெயர். எங்கப்பா புள்ள வளந்து நல்ல கவிதையெல்லாம் எழுதணும்னு நினைச்சுதான் இந்த பேர் வச்சார். ஆனா எனக்கு மொக்கைதான் போட வருது. அதுகூட உருப்படி இல்லை :-(

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

என் தனிமையை விரட்ட நெட்டில் உலவிக் கொண்டிருக்கும் போது அறுசுவை அறிமுகம். அங்கே எல்லோருடனும் பேசி கலாய்த்துக் கொண்டிருக்கும் போது சிலர் திடீர்னு காணாம போய்ட்டாங்க :(. அப்போ ஜலீலாக்கா ப்ளாக் ஆரம்பிச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டு அவங்க பக்கத்துக்கு வந்தேன். பார்த்தா என் காணாமல் போன தோழிகள் எல்லாரும் இங்க சுத்திக்கிட்டு இருந்தாங்க. அவங்க எல்லார் பதிவையும் சத்தமில்லாம கொஞ்ச நாள் வாசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் சுபயோக சுப நாளில் நானும் ப்ளாக் ஆரம்பிக்கணும்னு ஆரம்பிச்சு இதோ இப்ப உங்களையெல்லாம் மொக்கை போட்டு கொன்னுக்கிட்டு இருக்கேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

இன்னும் பிரபலமாகவில்லை. பிரபலம் ஆகும்னு நினைக்கவும் இல்லை. நம்ம எழுத்தைப் பற்றி நமக்குத் தெரியாதா :-)? பெருசா எதுவும் செய்யலை. நாஞ்சில் ப்ரதாப் மற்றும் ஜலீலாக்கா சொன்ன மாதிரி பிறருக்கு பின்னூட்டங்கள் இட்டேன் அப்புறம் தமிழிஷில் இணைத்தேன். அவ்வளவுதான். அதற்காக ரொம்ப மெனக்கெடவெல்லாம் இல்லை(மெனக்கெட்டுட்டாலும்...).

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஆமா... பல பதிவுகளும் சொந்த புலம்பல்கள்தானே :-) பெருசா எந்த விளைவுகளும் இல்லை.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவுலகம் மூலம் சம்பாதிச்சு சிங்கையில் ஒரு காண்டோமினியம் வாங்கிப் போட்டிருக்கிறேன் :-). வெளிய சொல்லிடாதீங்க இன்கம்டேக்ஸ் காரன் வந்துடப் போறான் :-)
பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லை சில நேரம் மனக்குமுறல்களைக் கொட்டவும் பதிவுகள் எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு. இன்னொன்னு ஒப்புக்கு சப்பாணியா டெம்ப்ளேட் மாற்றங்கள் பரீட்சித்துப் பார்க்க

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம்... அது என்னோடவே பிறந்தது. தவறாக கண்ணில் படும் எதுவும் என்னைக் கோபப்படுத்தும். அடுத்தவர் மனதை நம்பிக்கைகளைப் பாதிக்கும் சில பதிவுகள் என்னை கோபப்படுத்தியிருக்கின்றன. பொறாமை வந்ததில்லை. வியந்திருக்கிறேன் நிறையபேரைப் பார்த்து. பல விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

பாராட்டுற மாதிரி நான் எந்த பதிவும் போடலை. அறுசுவை தோழிகள் விஜிசத்யா, மேனகாசத்யா,ஆசியா, ஜலீலாக்கா, அதிரா அப்புறம் ஜெய்லானி, நாஞ்சில் ப்ரதாப், பிரியமுடன் வசந்த் இவங்கதான் எனக்கு பின்னூட்டங்கள் மூலம் முதலில் ஊக்கமளித்தவர்கள்.

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஊழலற்ற வளமான இந்தியாவைக் கனவு காணும் எண்ணற்ற பேரில் நானும் ஒருத்தி. மற்றபடி பெருசா ஒண்ணுமில்லை


அதிரா, ஆசியாஓமர், கீதா ஆச்சல், மேனகாசத்யா ஆகியோரை இந்த தொடர்பதிவுக்கு அழைக்கிறேன். பூஸை மாட்டி விட்டதும் மனசுக்கு என்னா சந்தோஷமா இருக்குது :-)))

Friday, 30 July 2010

யுனிவர்சிட்டி வச்ச ஆப்பு

இது கொஞ்சம் பழைய மேட்டர்தான்.

நாம எதுக்குங்க படிக்கறோம்? என்னது... காது கேட்கலை அறிவை வளர்க்கவா? அது இருந்தாத்தானே வளர்றதுக்கு :-(
அடிச்சு புடிச்சி படிச்சு கிழிச்சு ஒரு வேலையைத் தேடி சம்பாதிக்கத்தானே? அதுக்கும் நம் ஊர்ல ஒரு பல்கலைக்கழகம் ஆப்பு வச்ச கதை தெரியுமா?

இப்படித்தாங்க எங்க காலேஜ்ல மொத்தம் 260பேர் படிச்சு கிழிச்சு பாசும் பண்ணிட்டோம். சிலருக்கு பல்கலைக்கழக ரேங்கும் உண்டு.
அப்புறம் நாம படிச்சதுக்கு அத்தாட்சியா டிகிரி(ஜீரோ டிகிரியா 100டிகிரியான்னு கேனத்தனமா கேக்கப்படாது சொல்லிட்டேன்) சர்ட்டிஃபிகேட் கொடுப்பாங்க. அங்கதான் எங்களுக்கு யூனிவர்சிட்டி வச்சது ஆப்பு.

ஆனா எங்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டிருப்பது தெரியாமலயே நாங்களும் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு வந்து பத்திரமா பூட்டி வச்சுட்டோம். கூடப்படிச்சவனுக்கு காலேஜ்ல படிக்கற ஆசை இன்னும் தீரல. அதனால இன்னொரு காலேஜில் எம்பிஏ படிக்க அப்ளை பண்ணி இடமும் கிடைச்சு காலேஜில் சேரப் போனான். அப்பதான் யுனிவர்சிட்டி வச்ச ஆப்பு வேலையை காட்ட ஆரம்பிச்சுது.

சர்ட்டிஃபிகேட் எல்லாம் வெரிஃபை பண்ணும் போதுதான் தெரிஞ்சுது எங்களுக்கு கொடுத்த சர்ட்டிஃபிகேட்டில் யுனிவர்சிடி ரெஜிஸ்ட்ராரின் கையொப்பம் மற்றும் சீல் இல்லைன்னு. காலேஜில் சேர்க்க முடியாதுன்னு அவனைத் திருப்பி அனுப்பிட்டாங்க.

அவன் எங்களுக்கெல்லாம் ஃபோன் பண்ணி எங்க சர்டிஃபிகேட்டுகளை பார்க்கச் சொன்னான். அப்பதான் தெரிஞ்சுது ஆப்பு எல்லாருக்கும் வச்சிருக்காங்கன்னு. சரின்னு காலேஜ் போய் ப்ரின்சிப்பலை பார்த்து விஷயத்தைச் சொன்னோம். அவர் எங்களை நேரடியாக யுனிவர்சிட்டி போகச் சொல்லிட்டார்.

கொஞ்ச பசங்க மட்டும் நாங்க போய் என்னான்னு விசாரிச்சுட்டு சொல்றோம்னு சொல்லிப் போனாங்க. யுனிவர்சிட்டில சிம்பிளா "எப்படியோ விட்டுப் போச்சு(?!) கொடுங்க சீல் வச்சுத் தர்றோம்" னு சொல்லி சரிசெய்து கொடுத்தாங்களாம். அப்புறம் என்னா எல்லாரும் யுனிவர்சிட்டி போய் அவங்கவங்க சர்டிஃபிகேட்டை சரி செய்துக்கிட்டோம்.

அது எப்படி தெரியாம விட்டுப் போகும்? அவங்களை ரெண்டு தட்டு தட்டிட்டு சாரி தெரியாம நடந்திடுச்சுன்னு சொன்னா விட்டுடுவாங்களா? தொடர்ந்து படிக்கணும்னு நினைத்தவர்களுக்கு ஒரு வருடம் வீணானது. அந்த வருடத்தை அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா?

சிலர் உடனே போய் சர்டிஃபிகேட்டை சரி செய்ய முடியாமல் 6மாதம் கழித்து சென்றபோது "இவ்வளவு நாள் என்ன செஞ்சீங்க"ன்னு வேற எகிறியிருக்கானுங்க. இவனுங்களை என்ன செய்யலாம்?

நல்ல வேளை இப்போ எல்லா பொறியியல் கல்லூரிகளையும் அண்ணா யுனிவர்சிட்டிக்கு கீழ கொண்டு வந்துட்டாங்க. ஆனா அங்கயும் என்னென்ன குழறுபடிகள் நடக்குதுன்னு தெரியல.

Thursday, 29 July 2010

இந்தோனேஷியவில் இந்தியர் தாக்கப்பட்ட விவகாரம்- மற்றொரு பக்கம்

இந்தோனேசியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே சின்ன பிரச்சினை வந்திடுச்சுனு போன பதிவில் சொன்னேனே அதைப் பற்றிதான் இந்த பதிவு.

இந்த நியூசை பெரும்பாலான இந்தியர்கள் படித்திருப்பீர்கள். "ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தோனேஷியாவிலும் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்" அப்படீன்னு இந்திய பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வந்தன. கண்டிப்பா அது இனவெறித் தாக்குதல் இல்லேன்னு இங்குள்ள உணர்ச்சிவசப்படாத நடுநிலையானவர்களுக்கு தெரியும்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னன்னு பார்க்கணும். ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசர் பொறுப்பிலிருந்த ஒரு இந்தியர் தன் கீழ் வேலை பார்த்த இந்தோனேஷிய தொழிலாளியிடம் "முட்டாள் இதுகூடத் தெரியாதா" என்று திட்டி விட்டார். பிரச்சினையின் ஆரம்பம் இதுதான். இதனால் கோபமடைந்து இந்தோனேஷிய தொழிலாளிகள் அங்கு வேலை பார்த்த இந்தியர்களை தாக்கியும் அவர்களது வாகனங்களை அடித்தும் நொறுக்கினர்.

இவ்வளவையும் கேட்டவுடன் சக இந்தியன் இன்னொரு நாட்டவனால் தாக்கப்பட்டால் எல்லோருக்கும் எழும் இயல்பான கோபத்தைதான் நம் பத்திரிக்கைகளும் எழுதியது. ஆனால் உண்மையில் "முட்டாள் இது கூட தெரியாதா படிக்கவில்லையா" போன்ற வார்த்தைகள் இந்தோனேஷியர்களை மிகவும் கோபம் கொள்ளவைக்கக் கூடிய வார்த்தைகள். வீட்டில் வேலை செய்பவரிடம் "இது கூடத் தெரியாதா"ன்னு கொஞ்சம் குரலை உயர்த்திக் கேட்டாலே அழ ஆரம்பித்து விடுவார்கள். அவர்களை மிகவும் வேதனைப்பட வைக்கக் கூடிய வாரத்தைகள் இவை (நமக்கு மிக சாதாரணமானவையாக தோன்றினாலும்)

இங்கே வரும் வெளிநாட்டு ஊழியர்களிடம் அங்கு ஏற்கெனவே வேலை பார்ப்பவர்கள் இதைச் சொல்லி எச்சரிக்கையும் செய்வார்கள். அப்படியும் ஏதோ ஒரு வேகத்தில் நம்மவர் வார்த்தையை விட்டு விட்டார். அன்று இந்த வார்த்தையை சொன்னது இந்தோனேஷியனாக இருந்தாலும் அவரையும் தாக்கியிருப்பார்கள்.

இன்னொரு முக்கிய விஷயம் சம்பளத்தில் காட்டப்படும் வித்தியாசம். ஒரே வேலையை செய்யும் இந்தோனேஷியனுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட வெளிநாட்டு ஊழியர் வாங்கும் சம்பளம் 5 முதல் 6மடங்கு அதிகம். நம் நாட்டில் இந்த நிலை என்றால் நாம் சும்மா இருப்போமா? ஆங்கிலம் தெரியாதது மட்டுமே அவர்களின் மைனஸ் பாய்ண்ட். மற்ற படி இருவரும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள்.

உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தார்கள். ஒரு கம்பெனியில் ஒரே வேலைபார்க்கும் ஒருவர் சொகுசான வாழ்க்கை வாழும் போது இன்னொருவர் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருப்பார். மால்களில் நாம் நம் பில்லுக்கான பணம் கொடுக்கும் போது அவர்களின் முகத்தில் ஒரு ஏக்கப் பார்வை இருக்கும். அவர்களின் ஒருமாதச் சம்பளத்தை நாம் ஒரே பில்லாக கொடுத்துக் கொண்டிருப்போம்.

நம்மவர்களில் சிலர் இந்தோனேஷியர்களை கொஞ்சம் மரியாதைக் குறைவாகவே நடத்துவார்கள் என்பது வேதனையோடு ஒத்துக் கொள்ளவேண்டிய விஷயம். என்னதான் நாம் அவர்களை விட அதிகம் சம்பாதித்தாலும் அது அவர்களுடைய நாடு என்பதை மறந்து விடுகிறார்கள்.

எல்லா வருத்தமும் சேர்ந்து நம்மவர்கள் மீது காட்டி விட்டார்கள். பாவம் அந்த இந்தியருக்கும் வேலை போய் விட்டது. இப்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் அவர்களின் முகத்தில் முன்பிருந்த நட்புப் பார்வை இப்போது இல்லை என்றே சொல்ல வேண்டும். விரைவில் சரியாக வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

Saturday, 24 July 2010

இந்தோனேஷிய டிவியில் இந்திய நடிகர்கள்

இந்தோனேஷியாவைப் பத்தி மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சேன்னு இந்த பதிவு

கல்யாணமாகி இங்க வந்த புதுசுல ரங்ஸ் துணை இல்லாம வெளியில் இறங்கவே எனக்கு பயம். அதனால் காலையில் அவர் கிளம்பியதும் பூட்டப்படும் வாசல் கதவு மீண்டும் அவர் வரும்போதே திறக்கப் படும். மெய்ட் மட்டும் பின்புற வாசல் வழியே தானே திறந்து வந்து வேலை செய்து விட்டு போவார்.

ஊரில் இருந்து அப்பா அம்மா எப்படீம்மா இருக்கேன்னு கேட்டால் எனக்கென்னப்பா தங்கக் கூட்டில் கிளி மாதிரி இருக்கேன்ப்பா அப்படீம்பேன் :-). சமையலைத் தவிர வேற வேலையே கிடையாது. அப்புறமென்ன டிவியை போட்டுட்டு சேனலை மாத்திக்கிட்டே இருக்க வேண்டியதுதான் வேலை.

சிங்கப்பூரிலிருந்து ஒளிபரப்பப்படும் "வசந்தம் சென்ட்ரல்" மற்றும் மலேசியாவிலிருந்து "டிவி3" இதில் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதுவும் காலையில் ஒன்றரை மணிநேரம் டிவி3யும் மாலை இரண்டரை மணிநேரம் வசந்தத்திலும்(இப்போது 3மனி முதல் 11மணிவரை) வரும். எல்லாமே படு மொக்கையான நிகழ்ச்சிகளாகத்தான் இருக்கும். இப்பவும் அப்படித்தான் இருக்கு அதிக மாற்றம் ஒண்ணும் இல்லை. அதுவும் ஒரு திரைப்படத்தை 'தொடரும்' போட்டு இரண்டு நாட்களாக டிவி3யில் போடுவானுங்க.

ஆனாலும் அந்த மொக்கைகளையும் தமிழ்மொழியின் இனிமைக்காகவும் வேறு வழியில்லாததாலும் பார்ப்பேன் :-). மற்ற நேரங்களில் சேனல்கள் சும்மாவேனும் மாற்றிக் கொண்டு ஏதாவது புரியறமாதிரி நிகழ்ச்சி இருக்கான்னு தேடிக்கிட்டு இருப்பேன் :-(

இப்படி சேனல்கள் மாற்றும் போது ஒரு இந்தோனேஷியன் சேனலில் நம்ப பிரபுதேவாவும் ரோஜாவும் இந்தோனேஷிய மொழியில் பேசிக்கிட்டு இருந்தாங்க. அடடா நம்ம ஆளுங்க இந்தோனேஷிய சினிமாக்களில் கூட நடிக்கறாங்களான்னு வாயைப் பிளந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்புறம்தான் புரிஞ்சுது அது 'ராசையா' தமிழ்படத்தின் இந்தோனேஷிய டப்பிங்னு. எனக்கு சந்தோஷம் தாங்கல. உடனே என் மெய்டை கூப்பிட்டு எங்க ஊர்க்காரங்கன்னு பெருமையா காண்பிச்சேன். அப்போ அவங்க சொன்னாங்க டெய்லி அந்த சமயத்தில் இந்திய படங்கள் டப் பண்ணி அந்த சேனலில் போடுவாங்களாம். அவங்களைப் பொறுத்தவரை அது ஒரு ஹிந்தி படத்தின் மொழிமாற்று படம்.

அது எங்கள் தமிழ் மொழி படம்னு சொல்லி புரிய வைக்கறதுக்கு ரொம்ப கஷ்டப் பட்டேன். ஏன்னா இந்தியர்களின் மொழி ஹிந்தி என்பது இங்குள்ள பெரும்பாலானவர்களின் எண்ணம். இத்தனைக்கும் இங்கே தமிழ் பேசும் பூர்வீக இந்தியர்கள் உண்டு. அப்புறம் டயலாக் புரியுதோ இல்லியோ இந்திய முகங்களைப் பார்ப்பதற்காகவே தினமும் பார்க்க ஆரம்பித்தேன்.

இங்குள்ளவர்களிடையே அதிகம் பிரபலமான தமிழ்படம் 'தளபதி'. ரஜினியை தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களின் ஆல் டைம் ஃபேவரைட் 'குச் குச் ஹோத்தா ஹை'. இந்திய பெண்களை பார்த்தவுடன் அவர்கள் அந்த குச் குச் ஹோத்தா ஹை பாட்டை பாட ஆரம்பித்து விடுவார்கள். மொழி தெரியாவிட்டாலும் ஹிந்தி பாட்டுக்களை அருமையாக பாடுவார்கள். ரெஸ்ட்ராண்டுகளுக்கு போனால் அங்குள்ள ம்யூசிக் க்ரூப் நம்மைக் கண்டதும் கண்டிப்பாக ஒரு ஹிந்தி பாட்டு பாடுவார்கள். அந்நிய தேசத்தில் நமக்காக நம் தேசத்துப் பாடலை அவர்கள் பாடி கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

எந்த ஒரு இந்தோனேஷிய இளம்பெண்ணும் இந்தியரைப் பார்த்ததும் கேட்கும் கேள்வி ஷாருக்கான் உங்க ஊர்க் காரரான்னுதான். ஷாருக்கான்னா அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அடுத்தது ஹ்ருத்திக்ரோஷன். இந்திய நடிகைகளையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். நாங்களும் சும்மானாச்சுக்கும் ஷாருக்கானும் நாங்களும் ஒரே ஊர்தான் என்று டூப் அடித்து விடுவோம் :-)

ஆண்கள் கேட்கும் ஒரே ஒரு விஷயம் ஹிந்தியில் எப்படி ஐ லவ் யூ சொல்றதுன்னுதான். அவங்க கேர்ள் ஃப்ரெண்டிடம் சொல்லி அசத்துவதற்காம். நமக்கே ஹிந்தி சுத்தமா தெரியாது. நம் வாயில் என்ன வருதோ அதுதான் ஐ லவ் யூ க்கான ஹிந்தி மொழிபெயர்ப்பு :-)
இந்தியர்கள்னா அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவர்களின் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என்ற வரலாறு கொண்டவர்கள்.

இப்படி இந்தியர்கள் மீது தனி பாசம் கொண்டிருந்த மக்களுக்கு இப்போது கொஞ்சம் மனவருத்தம். சில இந்தியர்களுக்கும் இந்தோனேஷியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் :-(. விரைவில் எல்லாம் சரியாகனும்னு ஆசைப்படறேன். ஏன்னா எனக்கு இந்த மக்களை ரொம்பவே பிடிக்கும்.

இந்தோனேஷிய சினிமா தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம் பூர்வீக இந்தியர்களுடையது என்பது பெருமையான விஷயம்.

அந்த பிரச்சினை பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன்

Monday, 19 July 2010

போலி சான்றிதழ் கொடுத்த அப்பாவிகள்

//""போலி சான்றிதழ் விஷயத்தில் அப்பாவி மாணவர்கள், பெற்றோரை தண்டிப்பது நியாயமாகாது,'' என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.//

முழு செய்தியைப் படிக்க இங்கே க்ளிக்கவும்அடங்கொய்யால.... மாணவன் பாவம் அப்பாவி விட்டு விடுவோம் அப்பா சொல்றதுக்கு தலையாட்டும் ஆடு பாவம். ஆனால் போலிச் சான்றிதழை பணம் கொடுத்து வாங்கிய பெற்றோர் அப்பாவியாம். இந்த கொடுமையை எங்க போய் சொல்றது?!

தன்னோட பையன் பரீட்சையில மார்க் குறைவா எடுப்பாராம். உடனே அப்பாகாரர் போலிச்சான்றிதழ் எங்க கிடைக்கும்னு விசாரிச்சு கேட்டுத் தெரிஞ்சு கொடுக்கவேண்டியதைக் கொடுத்து வேண்டிய மார்க் ஷீட் வாங்கி கல்லூரிகளுக்கு அப்ளை பண்ணி சீட்டும் வாங்கிடுவாராம். பையனும் தட்டுத்தடுமாறி படிச்சு வெளிய வந்து ஏதோ ஒரு இடத்தில் குப்பை கொட்டி சம்பாதிப்பானாம். இப்படி அடுத்தவன் குடியை கெடுக்கற அப்பா அப்பாவியாம். அமைச்சர் சர்ட்டிஃபிகேட் கொடுக்கறார். கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? நல்லா வருது வாயில.

ஒருவகையில் அமைச்சர் சொல்றது போல இவர்கள் அப்பாவிகள்தான். இல்லேன்னா பேப்பர் சேஸ் பண்ணி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கியிருப்பாரே. இல்லேன்னா பையனுக்கு பிட் அடிக்க வசதி செய்து கொடுத்திருப்பாரே. இவர்கள் அப்பாவிகள்தான்.

இப்படிப்பட்ட அப்பாவிகளால் உண்மையாக படித்து மார்க் எடுத்த அப்பாவி அப்பிராணி மாணவனின் வாய்ப்பல்லவா தட்டிப் பறிக்கப் படுகிறது. இதெல்லாம் அமைச்சருக்கு தெரியாதா? இவனுங்களைக் கேட்க யாருமே இல்லையா?

Friday, 16 July 2010

இந்திய விமான நிலையங்களில் பாஸ்போர்ட்டுகள் கவனம்

இது எனக்கு மெயிலில் வந்த செய்தி. ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு உதவட்டுமே என்றுதான் இந்த பதிவு.

நாம் பாஸ்போர்ட்டை இமிக்ரேஷன் ஆஃபீசர், அல்லது கஸ்டம்ஸ் அல்லது ஏர் இந்தியா ஊழியர்களிடம் கொடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். நம் பாஸ்போர்ர்ட்டை சேதப்படுத்திவிட்டு நம்மை சிக்கலில் மாட்டி காசு கறக்கப் பார்ப்பார்கள்.

எப்படீன்னா நாம இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு போகும்போது நாம் பாஸ்போர்ர்டை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு நாம் அசந்த சமயம் பார்த்து பாஸ்போர்ட்டில் ஏதேனும் பக்கத்தை கிழித்து விட்டு அல்லது சேதப்படுத்திவிட்டு exit stamp அடித்து தந்து விடுவார். நாமும் இது தெரியாமல் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு போய்விடுவோம். ஆனால் நம் பாஸ்போர்ட் பற்றிய எல்லா விவரங்களையும் ரெட் மார்க்கோடு சிஸ்டத்தில் ஏற்றிவிடுவார்.

அடுத்தமுறை நாம் இந்தியாவரும்போது ஆரம்பிக்கும் ஏழரை. விசாரணை ஆரம்பிக்கும். எவ்வளவு நாள் வெளிநாடுகளில் இருக்கிறார் அவரது வருமானம் இதைப் பொறுத்து பேரம் போலீஸ் மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகளால் பேரம் பேசப்பட்டு பணம் கறக்கப்படும். யாராவது நம்ம மேல தப்பு இல்லன்னுட்டு சண்டை போட ஆரம்பிச்சோம் அவ்வளவுதான் நம்ப எதிர்காலத்தையே நாசமாக்கிடுவானுங்க இந்த படுபாவிங்க.

அதனால பாஸ்போர்ட்டை இந்த படுபாவிங்கக்கிட்ட கொடுத்துட்டு தேமேன்னு நிற்காம நம் பாஸ்போர்ட்டில் எப்போதும் கவனம் வைத்திருக்க வேண்டும். இல்லேன்னா ஆப்புதான்.

இந்த செயல் அதிகம் நடக்கும் ஏர்போர்ட்டுகள் மும்பை,ஹைதராபாத் மற்றும் பெங்களூரு. ஒரு மாதத்தில் 20 முதல் 30 கேஸ்கள் பதிவு செய்யப்படுகின்றனவாம் (இதுக்கு கூட டார்கெட் வச்சிருக்கானுங்க போல).

Aramaco's Arifuddin அப்படீங்கறவர் தன்னோட குடும்பத்தோட மொத்தம் 6பேர் ஜெட்டாவிலிருந்து இந்தியா வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் வந்திறங்கி ஒரு மாதம் தங்கி விட்டு அங்கிருந்து அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்காவில் இறங்கி அங்குள்ள இமிக்ரேஷன் கடக்க இருக்கும் போதுதான் மனைவி பாஸ்போர்ர்ட்டிலிருந்த அமெரிக்க விசா பக்கத்தை காணவில்லை என்பதை பார்த்திருக்கிரார். ஹைதராபாத்தில் இருக்கும் போது விசா இருந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் மொத்த குடும்பமும் இந்தியா திரும்பியிருக்கிறது. மும்பையில் இறங்கியதும் போலீஸ் அரெஸ்ட் செய்து இருக்கிறது. இப்போது கோர்ட்டுக்கும் இமிக்ரேஷன் அலுவலங்களுக்கும் இடையே கிடந்து அல்லாடுகிறார்.

மக்களே கவனமா இருங்க. நீங்களும் சிக்கலில் மாட்டிக்காதீங்க. நண்பர்களிடத்தும் தெரிந்தவர்களிடத்தும் சொல்லி உஷார்ப்படுத்துங்கள். மீடியாவில் வெளியிடப்பட்டால் மிக நல்லது.

பணத்திற்காக அப்பாவிகளை பாடாய்ப்படுத்தும் இந்த ஜென்மங்களை என்ன செய்வது.

Sunday, 11 July 2010

குழந்தைகள்- ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஆசை

கடந்த வாரம் என் செல்ல மருமகளின்(நாத்தனார் மகள்) பிறந்தநாள். அதற்காக சிங்கப்பூர் போயிருந்தேன். அவளுக்கு என்ன கிஃப்ட் வாங்குவது என்று கடந்த இரண்டு மாதங்களாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டால் அதை அவங்க சொல்ல மாட்டாங்களாம். அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு நாங்களே யோசிச்சு அதை அவங்க பிறந்த நாளன்று சர்ப்ரைசாக கொடுக்கணுமாம். அவங்க அப்பா அம்மாவுக்கும் இதே ரூல்தான்.

நானும் என் அண்ணியும் மண்டையை பிச்சுக்கிட்டதுதான் மிச்சம். ரங்கமணிங்க பொண்ணை ஐஸ் வச்சு எஸ் ஆயிட்டாங்க. நாங்கதான் மாட்டிக்கிட்டோம். அப்புறமா என் மருமகளை ஐஸ் வைத்து கெஞ்சி கூத்தாடி(?!)...ஒருவழியா அவளுக்கு மீன்வளர்க்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னா. சரின்னு நானும் என் அண்ணியும் அவளை கூட்டிக்கிட்டு கடைகடையா அலைஞ்சோம். அவளுக்கு பிடிச்ச மாதிரி மீன்தொட்டி கிடைக்கவே இல்லை:( அதற்குள் பிறந்தநாளும் வந்துவிட்டது. அவளே பெரிய மனசு பண்ணி "பரவாயில்ல அத்தை எனக்கு பிடிச்சமாதிரி மீன் தொட்டி கிடைக்கறப்போ வாங்கிகலாம்" அப்படீன்னா. எனக்குத்தான் மனசு கேட்கலை. அய்யோ குழந்தை பிறந்தநாளுக்கு எதுவுமே கொடுக்கமுடியலியேன்னு வருத்தமாயிடுச்சு. அவளுக்கு பிடித்த கேக் மட்டும் வாங்கிக் கொடுத்தேன்.
ஊரில் இருந்து ஃபோன் செய்தவர்களிடம் எல்லாம் அத்தையும் அம்மாவும் எதுவுமே வாங்கித் தரலைன்னு கம்ப்ளெய்ண்ட் வேற :( அப்பாவுக்கும் மாமாவுக்கும் மேல எந்த தப்பும் இல்லையாம். இந்த கொடுமைய எங்க போய் சொல்றது

பிறந்தநாளுக்கு அடுத்த நாள் அவளிடம் "நீ தினமும் மீனுக்கு சாப்பாடெல்லாம் போட்டு கவனிச்சுக்குவியான்னு" கேட்டோம். அதற்கு அவள் பதில்... அத்தை எனக்கு மீன் வளர்க்க வேண்டாம். வேற ஏதாவது வாங்கித்தாங்க அப்படீன்னா... ஆஹா மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறிடுச்சேன்னு முழிச்சோம்.

கொஞ்ச நாளாக முயல் வளர்க்கணும்னு வேற சொல்லிக்கிட்டிருக்கா. அந்த ஆசை எப்போ மாறும்னும் தெரியலை. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கிஃப்ட் வாங்குவது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. பர்ப்பிள் கலரில் எது வாங்கிக் கொடுத்தாலும் சந்தோஷம்தான். இப்போது வயது பன்னிரெண்டாகிறது. தினம் தினம் விருப்பங்களும் ஆசைகளும் மாறுகிறது.

இன்னும் அவளுக்குப் பிடித்த கிஃப்ட் வாங்கவில்லை. அடுத்த பிறந்தநாளுக்கு முன்னாடியாவது வாங்க முடியுமான்னு தெரியல :( உங்க யாருக்காவது ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க.