Wednesday 3 February 2010

கேட்கக்கூடாத கேள்விகள்

சமீபத்தில் வாரமலர் அந்துமணியின் பா கே ப பகுதியில் வந்த ஒரு கடிதம் படிக்க நேர்ந்தது. திருமண வயது தாண்டியும் ஏதேதோ காரணங்களால் திருமணமாகாத பெண்ணிடம் கேட்கப்படும் கேள்விகள் பற்றி ஒரு வாசகியின் குமுறல் பற்றியது. இதற்கு பலவித கருத்துக்கள் அப்பக்கத்தில் பதியப்பட்டிருந்தன. அதில் ஒருவர் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படுவது நல்லதுதான். அப்போதுதான் நாம் திருமண முயற்சி எடுப்போம். அதுபோல் ஏன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று கேள்விகள் கேட்கப்படுவதையும் சரியென்றே கருத்து சொல்லியிருந்தார். சிலர் இதை ஆதரிக்கவும் செய்திருந்தனர்.

என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதுபோல் பல கேட்கக்கூடாத நாகரீகமற்ற கேள்விகளை சிலர் ஜஸ்ட் லைக் தட் கேட்டு மற்றவர்களை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்குகின்றனர்.

அப்படி சில கேட்கக்கூடாத கேள்விகள் சில

கல்லூரிப்படிப்பை அப்போதுதான் முடித்திருக்கும் இளைஞர்களிடம்

கேம்பஸ் இண்டர்வியூவில் எதும் கிடைக்கலியா? (கேட்பவர் ஏதோ படித்து போது நான்கைந்து கம்பெனிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனவர் என்பது போல)
இன்னும் சும்மாதான் இருக்கறியா? ( இவர் என்னவோ ரொம்பவும் வேலை செய்து சம்பாதிப்பவர் போல)

திருமணமாகாதவர்களிடம்

எப்போ சாப்பாடு போடப் போற? (வீட்டில் இவனுங்களுக்கெல்லாம் சாப்பாடு போடவே மாட்டாங்க போல அதான் ஊரில் எவனாவது சாப்பாடு போட மாட்டானான்னு அலையுதுங்க)

திருமணமானவர்களிடம்

இன்னும் விஷேஷம் ஒன்னும் இல்லியா? (விஷேஷம் இருந்தாதான் பத்து மாதம் கழித்து தெரியுமே அதுக்கு முன்னாடி என்ன அவசரம்?)

இப்படியே ஜாலியா சுத்தினா போதுமா புள்ளகுட்டி ஒன்னும் வேண்டாமா? (தன்னால ஜாலியா சுத்த முடியலேன்னு வயித்தெரிச்சல்)

குழந்தை இல்லாதவர்களிடம்

வீட்டில் தனியா எப்படி இருக்கறீங்க? எப்படி பொழுது போகுது? (கேட்பவர்கள் மிஞ்சிப்போனா வீட்டிலிருந்து அழுகை சீரியலைப்பார்ப்பர்கள் இல்லையென்றால் அடுத்தவரைப்பற்றி ஏதும் கமெண்ட் அடிப்பார்கள். தங்களைப்பற்றி மற்றவரும் கமெண்ட் செய்வார்களே என்ற எண்ணம் துளி கூட இவர்களுக்கு இருக்காது. அவ்வளவு தன்னம்பிக்கை)

நீ அந்த டாக்டரைப் பாரேன் இந்த கோவிலுக்கு போயேன் அந்த பரிகாரத்தை செய்யேன் என்று கேட்காமலேயே அறிவுரைகளை அள்ளி வீசுவார்கள். (இதையெல்லாம் பற்றி அந்த தம்பதிகளும் குடும்பத்தினரும் யோசிக்காமலா இருப்பார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இருக்காதா). அவர்கள் கேட்டாலன்றி இதுபோன்ற அறிவுரைகளை தவிர்ப்பதே நலம். அனுபவத்தில் சொல்கிறேன். இப்படி கேட்காமலேயே கிடைக்கும் அறிவுரைகள் மிகவும் சங்கடப்படுத்தும்.

தாங்கள் குழந்தை பெற்றுக் கொண்டதை ஏதோ உலக மகா சாதனை போல் பீற்றுவார்கள். குழந்தைகள் ஈடில்லா செல்வம்தான். மறுப்பேதும் இல்லை. ஆனால் அவ்வரம் கிடைக்காதவர்களை இவ்வுலகில் வாழவே லாயக்கில்லாதவர்கள் என்ற ரீதியில் சிலர் பேசுவார்கள். குழந்தை இருப்பவர்கள்தான் வாழ்வில் ஏதோ லட்சியத்தோடு வாழ்வதாகவும் மற்றவருக்கு அப்படிப்பட்ட லட்சியங்கள் இருக்காது என்று பேசும் பலரைப் பார்த்து நொந்து நூலாகிவிட்டேன்.

குழந்தைகளிடம்

நீ ஏன் இவ்வளவு கருப்பா இருக்கற? உன் அக்கா நல்ல சிவப்பா இருக்கறாளே! (இவர் என்னவோ ரொம்ப வெள்ளை என்பது போல)
குழந்தைகளிடம் இப்படி கேட்பவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும்.

ஓஹ் நீ செகண்ட் ரேன்க்தான் வாங்குவியா? என் பையன் எப்பவுமே ஃபர்ஸ்ட்தான் (போய் ரிப்போர்ட் கார்டை வாங்கியா பார்க்கப்போகிறோம்ங்கற தைரியம்) அப்போ யார்தாண்டா செகண்ட் தேர்ட் எல்லாம் வாங்கறது

நம் நண்பர்கள் யாரும் இப்படியெல்லாம் கேட்கமாட்டீர்கள்தானே! ஆனால் இப்படி கேட்பவர்களைக் கண்டால் நல்லா நடுமண்டையில் நச்சுன்னு ஒரு குட்டு வைங்க சரியா?!

2 comments:

  1. கவி சூப்பர் கவி!!! இப்பதான் அஞ்சப்பர் போயி சூப்பரா புஃல் மீல்ஸ் அடிச்ச மாதிரி இருக்கு... மீண்டும் வருவேன்...

    ReplyDelete
  2. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இலா!
    உங்களையெல்லாம் நம்பித்தானே கடை திறந்து வச்சிருக்கோம் :-(

    ReplyDelete