Sunday, 14 February 2010

புதிய மொழி கற்றுக்கொள்ள எளிய வழி(ஆண்களுக்கு மட்டும்)

அடுத்த மொக்கைக்கு ரெடியாகுங்கோ :-)

என்னவரோடு சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்து ஒருவழியாக நாங்கள் இருக்கும் தீவுக்கு வந்து சேர்ந்தோம். இங்கு ஆங்கிலம் பேசுபவர்கள் மிக மிக குறைவு இல்லை இல்லை மிக மிக அரிது.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அன்னிக்கு இரவு என்னவரின் பாஸ் வீட்டுக்கு போனோம். அங்க இருந்த மெய்ட் வயதான ஒரு அம்மா.பல வருடங்கள் என்னவருக்கும் அவருடன் வேலை
பார்ப்பவர்களுக்கும் சமைத்து கொடுப்பவர். அவரை தங்கள் வீட்டில் ஒருவராகவே எல்லாரும் நடத்துவாங்க. அவரிடம் "இனி இஸ்திரி கு" ன்னு ஏதோ சொன்னார். எனக்கோ தூக்கி வாரி போட்டுடுச்சு என்னடா நம்மளைக்காட்டி ப்ளாஸ்திரி இஸ்திரி பொட்டின்னு என்னவோ சொல்றாறேன்னு குழப்பம். நம்மாளு நான் குழம்பறதை பார்த்து ரசிச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு இருந்தார். மற்றவர்களும் இருந்ததால் நானும் எதுவும் கேக்கலை. நம்மளை வச்சு ஏதோ காமடி பண்றாரோன்னு நினைச்சுக்கிட்டேன். எப்படியும் நம்மக்கிட்ட மாட்டாமலா போவாருன்னு அப்போ வச்சுக்கலாம்னு மனசை தேத்திக்கிட்டேன்.

வீட்டுக்கு வந்தபின் என்ன சொன்னீங்கன்னு கேட்டா நீயே எப்படியாவது கண்டு பிடிச்சுக்கோன்னுட்டார். எனக்கு ரோஷம் வந்திடுச்சு. உங்க உதவி இல்லாம நான் இந்த மொழியை கத்துக்கறேன்னு சவால் விட்டுட்டேன். உள்ளுக்குள் உதறல்தான் :-). ஆனாலும் நமக்கு வீண் ஜம்பத்துக்கு சொல்லியா கொடுக்கணும்?!

அடுத்த நாள் காலையில் இவர் வேலைக்கு போயிட்டார். எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் மெய்ட் வந்தார். "இஸ்திரி சிஃபா யா?" ன்னு ஏதோ கேட்டார். ஆஹா எல்லாரும் சேர்ந்து நம்மளை இஸ்திரி பொட்டியாக்கிட்டாங்களேன்னு நொந்து போயிட்டேன். அன்னிக்கு மெய்ட் கிட்ட நல்லா கையை காலை ஆட்டி சைகை பாஷையில் பேசினேன். ஒருவழியா மெய்டும் சைகை பாஷையில் இஸ்திரின்னா மனைவி ன்னு அர்த்தம்னு சொல்லி புரிய வச்சுட்டாங்க. அடப்பாவிங்களா எங்கூருல அந்த காலத்துல ஸ்த்ரீன்னு சொல்றதைத்தான் நீங்க இஸ்திரின்னு கொன்னுட்டீங்களான்னு நினைச்சுக்கிட்டேன்.

சரி மனைவிக்கு இஸ்திரி, கணவருக்கு என்ன சொல்லனும்னு அவங்ககிட்டயே சைகையில் கேட்டேன். "சுவாமி" ன்னு சொல்லணும்னு சொன்னாங்க. ஆஹா இந்த பாஷை மொத்தமும் காப்பி போலத்தானோன்னு தோணுச்சுது! அவங்கக்கிட்டயே நம்பர்ஸ் மற்றும் சில அடிப்படை வார்த்தைகள்கள் கத்துக்கிட்டேன். இந்த பாஷையின் எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்கள் என்பதால் வாசிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனாலும் எழுத்துக்களின் ஒலியில் வித்தியாசம் இருப்பதால் கரெக்டாக உச்சரிப்பதில் பிரச்சினை. ஆனாலும் கண்ணில் பட்டதையெல்லாம் வாசிப்பேன்.

வாட்டர் பாட்டிலில் "Air minum" அப்படீன்னு எழுதி இருந்தது. உடனே எனக்கு மண்டையில் பல்ப் எரிஞ்சுட்டுது. "ஏர் மைனம்" னா தண்ணீர் அப்ப்டீன்னு முடிவு பண்ணிட்டேன். அடுத்த நாள் என் மேதாவித்தனத்தை மெய்டிடம் காட்ட அவரிடம் வாட்டர் பாட்டிலை காட்டி "ஏர் மைனம்" அப்படீன்னேன். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஐர் மினும்" அப்படீன்னாங்க. இப்போ நான் திரு திருன்னு முழிச்சேன். என் மெய்ட் ரொம்ப புத்திசாலி (அது எப்படி கவி எல்லாரும் உன்னைவிட புத்திசாலியாவே இருக்காங்க!). நான் முழிக்கறதை பார்த்ததுமே ஒவ்வொரு வார்த்தையிலும் கை வைத்து "ஐர்" "மினும்" அப்படீன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதோட நிறுத்தாம தண்ணீரை ஒரு கப்பில் ஊற்றி
"ஐர்" அப்பட்டீனு சொல்லி "மினும்" னு சொல்லி குடிச்சு காமிச்சாங்க. ஐர் னா தண்ணி மினும் னா குடி அப்படீன்னு புரிஞ்சுது. இதத்தானே எங்க ஊர் ரெயில்வே ஸ்டேஷனில் குடி தண்ணீர்னு எழுதி பக்கத்துலயே ஒரு கப்பை செயினால் கட்டிப் போட்டிருப்பாங்க. இதுக்குத்தானா இம்புட்டு அலப்பறை அதையும் தலைகீழா சொல்லிப்புட்டு அப்படீன்னு மனசுக்குள்ளயே கறுவிக்கிட்டேன்.

என் கணவரின் நண்பர் முப்பது நாட்களில் ஹிந்தி புத்தகம் போல் பஹாஸா இந்தோனேசியா பேசுவது எப்படீன்னு ஒரு புத்தகம் கொடுத்தார். ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை :-(. இப்படியே போனா சைகை பாஷைதான் நல்லா கத்துக்குவேன்னு மட்டும் புரிஞ்சுது. உடனே ஒரு பஹாசா இந்தோனேசியா-ஆங்கிலம், ஆங்கிலம்-பஹாசா இந்தோனேசியா அகராதி வாங்கி வைத்துக் கொண்டேன்.

தினமும் அதைப்பார்த்து புதிய புதிய வார்த்தைகளாக படித்தேன். வாசலில் யார் வந்தாலும் அவர்கள் பேசுவதைக் கேட்டு டிக்ஷ்னரியில் அர்த்தம் தேடி அதற்கு பதில் சொல்ல மீண்டும் டிக்ஷ்னரியில் வார்த்தை தேடி பதில் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக இந்த மொழியைக் கத்துக்கிட்டேன். இப்போ ஓரளவு நல்லாவே பேசுவேன். ஆனால் என்ன சைகை பாஷைதான் மறந்து போச்சு :-( .

இந்த பாஷை கற்றுக் கொள்ள எளிதுதன். ஏன்னா கிராமர்னு ஒண்ணு கிடையவே கிடையாது. கொஞ்சம் தமிழ் கொஞ்சம் ஹிந்தி கொஞ்சம் ஆங்கிலம் கொஞ்சம் டச்சு மொழி எல்லாம் கலந்ததுதான் இந்த மொழி. என்ன நாம் பேசறதை கொஞ்சம் ரிவர்சில் பேசணும் அவ்வளவுதான். இங்கே திரும்புன்னு சொல்லணுமான திரும்பு இங்கேன்னு சொல்லணும் அவ்வளவுதான். நம்பர்ஸ் எழுதும் போது புள்ளி வக்கிற இடத்தில் "கமா" போடனும் கமா போடற இடத்தில் புள்ளி வைக்கணும். இப்படி எல்லாத்தையும் தலைகீழாத்தான் செய்யணும் (-:.

இப்படி நான் கஷ்டப்பட்டு இந்த பாஷையை கத்துக்கிட்டா... என்னவரிடமும் அவரது இந்திய நண்பர்களிடமும் நீங்கள்லாம் எப்படி சீக்கிரமா கத்துக்கிடீங்கன்னு கேட்டா குறும்பா சிரிச்சுக்கிட்டு ஒரு பதில் சொன்னாங்க பாருங்க....நான் கண்ணாலயே என்னவரை
பொசுக்கிட்டேன். "ஹி..ஹி... இங்க வந்த உடனேயே ஒவ்வொருத்தரும் கம்பெனியில்
உள்ள பொண்ணுங்களை ஆளுக்கொண்ணா பிடிச்சு கேர்ள் ஃப்ரெண்டாக்கிட்டோம். சீக்கிரமா கத்துக்கிட்டோம்" இதுதான் அவங்க சொன்ன பதில்.

அடப்பாவிங்களா கேர்ள் ஃப்ரண்ட் வச்சுக்கறத்துக்கு இப்படீல்லாமா காரணம் கண்டுபுடிப்பீங்க!

8 comments:

  1. சிரிப்புத் தாங்கலை கவி!! இப்போ இந்த மொழியை நல்லா பேசுவிங்களா?நகைச்சுவையா எழுதறீங்க...

    கவி இன்னும் சிறு சிறு பத்தியா எழுதுங்களேன்.படிப்பவர்களுக்கு சிரமமில்லாமல் படிக்க ஈஸியா க இருக்கும்.தவறாக நினைக்க வேண்டாம்...

    ReplyDelete
  2. மேனகா சிரிச்சீங்களா! இதையெல்லாம் அப்பப்போ நினைச்சு நானும் சிரிச்சுக்குவேன். இப்போ நல்லாவே பஹாசா இந்தோனேஷியா பேசுவேன்.
    நான் மட்டும் இல்லை இங்கு வரும் எல்லா வெளிநாட்டினரும் கத்துக்கிட்டுத்தான் ஆகணும். இல்லேன்னா இங்கே குப்பை கொட்ட முடியாது .

    தப்பா நினைக்க ஒண்ணும் இல்லை மேனகா. இப்போ முன்னாடி இருந்ததை விட சிறு பத்திகளா மாத்திட்டேன்.

    ReplyDelete
  3. கவி உங்கள் எழுத்தின் சுவையே நகைச்சுவை தான்.அருமை.நல்ல அனுபவம்.நானும் அரபிய மொழியை பேச கற்றுக்கொள்ள நினைத்தேன்,யு.ஏ.இ யில் தான் தடுக்கி விழுந்தால் மலையாளமும்,தமிழும் இருக்கே,அவசியமில்லாமல் போய் விட்டது.என் கணவர் அராபிக் கொஞ்சம் புரிந்து பேசுவார்,ஆபிஸில் பக்கத்து சீட்டு அரபிய பெண்ணாம்.இவரோட சீஃபும் அரபிய பெண் தானாம்.என்னத்த சொல்ல.

    ReplyDelete
  4. நன்றி ஆசியா!
    //என் கணவர் அராபிக் கொஞ்சம் புரிந்து பேசுவார்,ஆபிஸில் பக்கத்து சீட்டு அரபிய பெண்ணாம்.இவரோட சீஃபும் அரபிய பெண் தானாம்.என்னத்த சொல்ல.//

    ஆஹா எல்லா இடத்துலயம் நிலைமை இதுதானா?!

    ReplyDelete
  5. கவிசிவா.... வெறும் தலைப்பாக இருந்தால் நேரமில்லாமல் பார்க்காமலே போயிருப்பேன்.. ஆண்களுக்கு மட்டும் எனப் போட்டதாலேதான், அப்படி என்னதான் இருக்கோ என உள்ளே நுழைந்தேன்.. பார்த்தீங்களோ.. இப்படித்தானே கடை விளம்பரங்களும் மக்களைக் கவர்கிறது... நன்றாகவே சிரிக்க வைத்திட்டீங்க... கீப் இற் மேலே:).. மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  6. நன்றி அதிரா! எங்க காலேஜ் பூக்கார அக்காக்கிட்ட இருந்து கொஞ்சம் பிசினஸ் டிப்ஸ் நானும் படிச்சு வச்சிருக்கேனாக்கும் :-)

    ReplyDelete
  7. ///பொண்ணுங்களை ஆளுக்கொண்ணா பிடிச்சு கேர்ள் ஃப்ரெண்டாக்கிட்டோம். சீக்கிரமா கத்துக்கிட்டோம்" இதுதான் அவங்க சொன்ன பதில்.///

    அவங்கதான் பொருமையா கத்துதருவாங்க அதான்

    ///அடப்பாவிங்களா கேர்ள் ஃப்ரண்ட் வச்சுக்கறத்துக்கு இப்படீல்லாமா காரணம் கண்டுபுடிப்பீங்க!///

    உண்மைய சொன்னா வீட்டில கொலபட்டினிதான்.

    ReplyDelete
  8. ஜெய்லானி said...
    ///பொண்ணுங்களை ஆளுக்கொண்ணா பிடிச்சு கேர்ள் ஃப்ரெண்டாக்கிட்டோம். சீக்கிரமா கத்துக்கிட்டோம்" இதுதான் அவங்க சொன்ன பதில்.///

    அவங்கதான் பொருமையா கத்துதருவாங்க அதான்

    ///அடப்பாவிங்களா கேர்ள் ஃப்ரண்ட் வச்சுக்கறத்துக்கு இப்படீல்லாமா காரணம் கண்டுபுடிப்பீங்க!///

    உண்மைய சொன்னா வீட்டில கொலபட்டினிதான்.



    பாம்பின் கால் பாம்பறியும் :-)

    ReplyDelete