இன்று நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது என் சிறுவயது மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து மனது ஏங்குகிறது.
சுமார் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்... நாங்கள் அப்போது மதுரையில் இருந்தோம். நாங்கள் இருந்த காம்பவுண்டில் மொத்தம் நான்கு வீடுகள். ஒரு இந்து குடும்பம் ஒரு க்றிஸ்தவ குடும்பம் ஒரு முஸ்லீம் குடும்பம் மற்றும் ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம். அத்தனை பேரும் அத்தனை ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தோம். தீபாவளி அன்று எங்கள் வீட்டில்தான் அத்தனை பேருக்கும் சாப்பாடு. க்றிஸ்துமஸ் அன்று க்றிஸ்தவர்கள் வீட்டில்தான் நாங்கள் மொத்தம் பேரும் இருப்போம். சர்ச்சுக்கு எல்லோரும் போவோம். நோன்பு மாதம் வந்து விட்டால் குழந்தைகள் எங்களுக்கு கொண்டாட்டம்தான். தினமும் நோன்பு திறப்பதற்கு எல்லா குழந்தைகளும் ஆஜராகி விடுவோம். ரம்ஜான் அன்று எல்லோரும் பள்ளிவாசலுக்கு செல்வோம் அதுவும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு. அன்று எங்களை யாரும் தடுக்கவில்லை. மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொண்டார்கள். அது போல் அவர்களும் எங்களோடு கோவிலுக்கு வருவார்கள். எந்த வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக சந்தோஷமாக இருந்தோம். எங்கள் காம்பவுண்டுக்கு பாரத விலாஸ் என்று நாங்களே பெருமையாக பெயர் வைத்துக் கொண்டோம்.
10வருடங்கள் முன்பு கல்லூரியில் படித்த போது ஒரு அனுபவம். அவர் என் மிக நெருங்கிய தோழி. எல்லோரும் கல்வி சுற்றுலா சென்ற போது மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று திரும்பும் போது நான் வாங்கிய அம்பாளின் படம் ஒன்றை அந்த நெருங்கிய தோழியின் பெட்டியில் வைக்க கொடுத்தேன் (என்னுடைய பையில் வைத்தால் கசங்கிவிடும் அவரது பெட்டியில் விரித்து வைக்கலாம் என்பதால்). கையில் கூட வாங்க மறுத்து இந்து கடவுளின் படத்தை வைக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார் (அவர் இன்னொரு மதத்தை பின்பற்றுபவர்). எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. மத வேறுபாட்டை முதன் முதலில் நான் உணர்ந்த நாள் அது. ஆனாலும் சரி இது அவரது மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று விட்டு விட்டேன். ஆனால் மற்றொரு அவரது மதத்தை சார்ந்த தோழி அப்படத்தை தன் பெட்டியில் வைத்துக் கொள்ள முன் வந்த போது அதையும் தடுத்தபோது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் சண்டை போடவில்லை. அவர் வளர்ந்த சூழல் அப்படிப்பட்டதாயிருக்கும் என்று விட்டு விட்டேன்.
கல்லூரி விடுதியிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்க ஆரம்பித்த போதுதான் மதம் என்பது எப்படி ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக ஓடியிருக்கிறது என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால் என் மற்றொரு தோழி எனக்கு சிறிது ஆறுதல் அளித்தார். அவரும் என்னைப்போலவேதான் வேற்று மதத்தவர் என்றாலும் என்னோடு கோவிலுக்கும் வருவாள். நானும் அவளோடு சர்ச்சுக்குப் போவேன். அவளுக்கு எந்த வேறுபாடும் கிடையாது.
இப்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தன் வகுப்பில் படிக்கும் மாணவனைப் பற்றி பேசும் போது முதலில் அவனின் பெயரைச் சொல்லிவிட்டு அவர் வேறொரு மதத்தை சார்ந்தவராக இருந்தால் அதையும் சேர்த்தே சொல்கிறார்கள் (நான் சந்தித்த பெரும்பான்மையான மாணவர்கள்). இன்று குழந்தைகள் மனதில் கூட மதம் படிய ஆரம்பித்து விட்டது.
இனி வரும் காலத்திலாவது இந்த வேறுபாடுகள் மறைந்து என் பழைய பாரத விலாஸ் மீண்டும் கிடைக்குமா? நாம் அனைவரும் மனது வைத்தால் இது நடக்கும். வைப்போமா?!
ஏக்கத்துடன்
கவிசிவா
வரும்.. கவி.. ரொம்ப நாளில்லை.... மனசு வைக்கணும்..
ReplyDeleteஎனக்கும் நம்பிக்கை இருக்கிறது இலா. நாம எல்லாரும் மனசு வச்சா கண்டிப்பா நல்ல காலம் வரும்.
ReplyDelete