குமரி மாவட்டத்தின் அழகான ஒரு சிறு கிராமம்தான் என் சொந்த ஊர். 8வயது வரை அந்த கிராமத்தில்தான் வளர்ந்தேன். பின்னர்தான் நகர வாழ்க்கை. அப்போது எப்போதாவது வானில் ஒரு விமானம் பறக்கும்சத்தம் கேட்டு விட்டால் போதும். எல்லா குழந்தைகளும் எங்கிருந்தாலும் தெருவிற்கு ஓடி வந்து அண்ணாந்து ஆ.... வென்று வாய் பிளந்து பார்த்து டாட்டா சொல்லுவோம். அப்போதெல்லாம் நானும் ஒருநாள் விமானத்தில் போவேன் என்று நினைத்ததில்லை. விமானத்தில் போனால் ஜன்னல் வழியாக கைநீட்டி மேகத்தைப் பிடித்து பையில் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்ததுண்டு :-).
அப்படிபட்ட நான் விமானத்தில் ஏறும் நாளும் வந்தது. திருமணமாகி கணவரோடு பிறந்த வீட்டு புகுந்த வீட்டு சொந்தங்கள் புடை சூழ (சுமார் 20பேர்) எங்கள் ஊரில் இருந்து விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். அழுகையுடனான விடைபெறும் படலங்கள் முடிந்து செக் இன் செய்து லக்கேஜ்கள் எல்லாவற்றையும் உள்ளே போட்ட பின் அறிவிப்பு " சிங்கப்பூர் புறப்படுவானிருந்த சில்க் ஏர் விமானம் MI497 சாங்கேதிக ப்ரஸ்னன்ங்களால் வைகி புறப்படும். புறப்படானுள்ள சமயம் பீன்னிடு அறியிக்கப்படும்"(சிங்கப்பூர் செல்லும் சில்க் ஏர் விமானம் தொழில்நுட்ப பிரச்சினையினால் தாமதமாக புறப்படும். புறப்படும் சமயம் பின்னர் அறிவிக்கப்படும்).
விமான நிறுவனத்தின் உபயத்தில் ஸ்டார் ஹோட்டலில் ரூம் தரப்பட்டது. நாங்கள் விமான நிறுவனத்தின் வாகனத்தில் புறப்பட பின்னால் மூன்று கார்களில் எங்கள் சொந்தங்கள். இருவருக்கான அறையில் 20பேர் :-(. நாங்கள் இருவரும் அந்த ஹோட்டலிலேயே சாப்பிட்டோம். பின்னே 20பேருக்கு ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என்றால் யார் பில் கட்டுவது. எல்லாம் முடிந்து மீண்டும் விமான நிலையத்தை நோக்கி ஊர்வலம். மீண்டும் அழுகை படலம் முடிந்து ஒரு வழியாக மாலை 3.15க்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 1.45க்கு புறப்பட்டது.
ஃப்ளைட்டில் ஏறி உட்கார்ந்ததும் பெல்ட் எப்படி போடுவது என்று தெரியவில்லை. கணவரிடம் கேட்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. நமக்குத்தான் தன்மானம் ஜாஸ்தியாச்சே :-(.
அதான் சின்ன டி வியில் படம் போட்டு காண்பிப்பானே அதைப்பார்த்து போட்டிருக்க வேண்டியதுதானேன்னு எல்லாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது. நாங்க அதையெல்லாம் பார்ப்போமா! நாங்க யாரு பட்டிக்காட்டு பரமேஸ்வரியாச்சே! பராக்கு பார்க்கறதுக்கே நேரம் பத்தாதே! ஒருவழியா பெல்ட் போட்டுக்கிட்ட மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டு பெல்ட்டை துப்பட்டாவால் மறைத்து வைத்துக் கொண்டேன். (அதில எல்லாம் விவரமா இருப்போம்ல). விமானம் டேக் ஆஃப் ஆன போதும் பெல்ட் போடவில்லை. இறங்கும் போதும் போடவில்லை. அவ்வளவு தைரியசாலியாக்கும் நான்.
அதிலும் இந்த சீன விமான பணிப்பெண்களின் ஆங்கிலம் ஒரு இளவும் புரியவில்லை. என்னை நினைத்து எனக்கு கேவலமாக இருந்தது. இதுங்க இங்கிலிபீசையே புரிஞ்சுக்க முடியலியே இதுல அங்க இருக்கறதுங்களோட இங்கிலிபீசை எப்படி சமாளிக்கிறது நாம காமடிப் பீசாயிடுவோமோன்னு ஒரே கிலிபிடிச்சுக்கிச்சு. இதையெல்லாம் யோசிச்சு முதலிலேயே கணவரிடம் ஒரு பிட்டை போட்டு வச்சிருந்தேன். புதுசா பார்க்கறவங்கக்கிட்ட நான் அவ்வளவாக பேசமாட்டேன் அப்படீன்னு அவருக்கு வார்னிங் கொடுத்துட்டேன். அதாவது புதுசு புதுசா யாரையும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வராதீங்கனு அர்த்தம்.
இதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல அனுபவம் விமானத்தில் எனக்கு காத்திருந்தது. முதல் விமானப்பயணம் என்பதால் எனக்கு தூக்கம் வரவில்லை. அதிகாலையில் மெல்ல மெல்ல விடிய தொடங்கியிருந்தது. ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக் கொண்டே வந்தேன். தூரத்தில் தொடுவானிலொரு ஆரஞ்சுத்துண்டு கடலிலிருந்து மெல்ல எழும்பி வந்துக் கொண்டிருந்தது. ஆஹா...அத்தனை அழகு. மெல்ல மெல்ல மேலெழும்பி சூரியன் தன்னை சோம்பல் முறித்துக் கொண்டே வெளிவந்த அழகு காணக் கண்கோடி வேண்டும். குமரிக்கரையில் இருந்து காணும் சூரிய உதயம் ஒரு அழகு என்றால் வானில் விமானத்திலிருந்து காணும் சூரிய உதயம் வேறொரு அழகு.
புதிய இடத்தில் என் புதிய வாழ்க்கை தொடங்கப்போவதை அந்த சூரிய உதயம் எனக்கு உணர்த்தியதாக நினைத்தேன். சந்தோஷமாக இருந்தது.
அதன்பின் எத்தனையோ முறை விமானத்தில் பறந்தாலும் மறுபடியும் அந்த சூரிய உதயத்தை காணும் பாக்கியம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. மீண்டும் விமானம் தாமதமாக புறப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
என்ன படிச்சுக்கிட்டு ரொம்ப மொக்கையா தோணுதா?! மொக்கை போடுறதுதான எங்க வேலையே :-). இதுக்கே பயந்துட்டா எப்படி இன்னும் ஒரு கடல் பயணத்தையும் தாண்டித்தானே நான் இருக்கும் இடத்தை அடைய முடியும். அதுக்கும் ஒரு பதிவு நடுக்கடலில் ஒரு சூரிய அஸ்தமனம் என்று இதுக்கு பார்ட் 2 போடுவோம்ல. அதையும் நீங்கதானே படிக்கணும் :-)
அன்புடன்
கவிசிவா
//ஒருவழியா பெல்ட் போட்டுக்கிட்ட மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டு பெல்ட்டை துப்பட்டாவால் மறைத்து வைத்துக் கொண்டேன். (அதில எல்லாம் விவரமா இருப்போம்ல). விமானம் டேக் ஆஃப் ஆன போதும் பெல்ட் போடவில்லை. இறங்கும் போதும் போடவில்லை. அவ்வளவு தைரியசாலியாக்கும் நான்.// ஹா ஹா சூப்பர்ர்.எனக்கும் அந்த அனுபவம் இருக்கு கவி...
ReplyDelete//அதிலும் இந்த சீன விமான பணிப்பெண்களின் ஆங்கிலம் ஒரு இளவும் புரியவில்லை. என்னை நினைத்து எனக்கு கேவலமாக இருந்தது. இதுங்க இங்கிலிபீசையே புரிஞ்சுக்க முடியலியே இதுல அங்க இருக்கறதுங்களோட இங்கிலிபீசை எப்படி சமாளிக்கிறது நாம காமடிப் பீசாயிடுவோமோன்னு ஒரே கிலிபிடிச்சுக்கிச்சு. இதையெல்லாம் யோசிச்சு முதலிலேயே கணவரிடம் ஒரு பிட்டை போட்டு வச்சிருந்தேன். புதுசா பார்க்கறவங்கக்கிட்ட நான் அவ்வளவாக பேசமாட்டேன் அப்படீன்னு அவருக்கு வார்னிங் கொடுத்துட்டேன். அதாவது புதுசு புதுசா யாரையும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வராதீங்கனு அர்த்தம். //எனக்கும் இங்க ப்ரெஞ்சுகாரங்க பேசும் ப்ரெஞ்சு ஒன்னும் புரியாது.பே பேன்னு முழிப்பேன்.நமக்கும் செட் கிடைச்சாச்சுன்னு சந்தோஷப்பட்டுக்கறேன்.
ReplyDeleteஎன் பக்கமும் வாங்க கவி...
ஹய்யா என்னை மாதிரியே இன்னொரு ஆள் :-). மேனகா இப்போ இவங்களை மாதிரியே நானும் இங்கிலிபீசு பேச ஆரம்பிச்சுட்டேன். பழக்கதோஷத்தில் இதே மாதிரி இந்தியாவில் பேசினால் மேலும் கீழும் ஜந்து போல் பார்க்கிறார்கள் :-(
ReplyDeleteஉங்கப்பக்கம் விசிட் அடிச்சாச்சு மேனு.
interesting!!
ReplyDeletethank u susri
ReplyDelete//நடுக்கடலில் சூரிய அஸ்தமனம் //இடுகையில் கமெண்ட் ஆப்ஷன் இல்லையே கவி...
ReplyDeleteபோட்டோஸ் எல்லாமே அழகா இருக்கு...
அப்பாடா கவியும் ப்ளாக் ஆரம்பிச்சாச்சா ?வாழ்க.இந்த விமான பெல்ட் மேட்டரில் நீங்களும் நானும் ஒண்ணு தான் போல ? உங்கள் அனுபவத்தை சொன்ன விதம் அருமை,என்னையும் முதலில் திருவனந்தபுரம் வழியாக ஒரு வேனில் அனுப்ப வந்த உறவினர் கூட்டமும் வழியில் உள்ள பீமா பள்ளியில் சென்று கட்டி சென்ற சேமியா பிரியாணியை பரிமாறிட்டு அவசர அவசரமாக அரைமணி இருக்கும் பொழுது பிள்ளைகளும் நானும் ஓடி விமானம் ஏறியதும்,துபாய் எஸ்கலேட்டரில் ஹேண்ட் லகேஜுடன் விழுந்து பிரண்டதும் மல்ரும் நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள்.என் குழந்தைகள் மம்மி,டேடி நிக்கிறாங்க என்று சொன்னதும் தான் உயிரே வந்தது.விட்டால் என் கதை இங்கே அரங்கேறிவிடும் போல் தெரிகிறது.நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் வந்து செல்வேன் கவி.
ReplyDeleteரொம்ப நல்ல இருக்கு கவி, மேனகா அனுபவம், இது போல் வந்த புதிதில் நான் அரபி டாக்டரிடம் மாட்டி கொண்டு பே பே தான் நினைவுக்கு வருது.
ReplyDeleteவிமான அனுபவம் தெரிந்தவர்களுடன் வந்ததால். பிரசனை இல்லை
கவிசிவா, நானும் வந்துபிடித்துவிட்டேன், நீங்கள் வீட்டின் முகவரி தரவில்லையல்லவா? அதனால் என் உயிர் உடன்பிறப்புக்களையெல்லாம் கேட்டுத்தான் இங்கு வந்து சேர்ந்தேன். நன்றாக இருக்கு வாழ்த்துக்கள். Ferry பற்றிய புதிய பதிவில் , பதில் போடமுடியவில்லையே... மீண்டும் வருவேன்.
ReplyDeleteகவி நல்லா இருக்கு. இதில் எனக்கும் கொஞ்சம் அனுபவங்கள் இருக்கு. வேற ஒன்றுமில்லை, அதாவது வெஜ் மட்டுமே சாப்பிடுவோம். இங்கு வந்த புதிதில் பார்டிக்கு அழத்திட்டு போனார். அங்கு என்னாட நல்ல டொமேட்டா கலரில் மெல்லிய வட்டமான ஷேப்பில் ஒரு ட்ரேயிலும் மற்ற ட்ரேயில் குக்கும்பர், கேரட் எல்லாம் இருநது. எனக்கு மற்ற எல்லாம் எடுத்து சான்விட்ச்சில் வைத்தேன் பக்கத்தில் இருந்தவங்க அதையும் எடுத்து வைச்சுட்டாங்க சரி நானும் அதில் இருந்த்2 ஸ்லைஸ் எடுத்து வைச்சு ட்ரஸ்ஸிங் எல்லாம் போட்டு வாயில் வைப்பதற்க்கு கையில் எடுத்து வாய் பக்கம் வந்து வாய்க்குள் போக தொடங்கும் நேரம் ஒரு தோழி வந்து ஒரு தட்டு தட்டி விட்டா என்னை எல்லாரும்+ அவங்களையும் மேலும் கீழுமாக பார்த்து அடுத்தது வரிசையா எல்லாரும் எனக்கு புது சான்விச் கொண்டுவந்து சாப்பிட சொன்னாங்க் இவ மீண்டும் என் கையை தட்டி விட்டு போனா, எனக்கு ஒன்றுமே புரியல்லை ஒரு வழியா என் கனவருக்க்கு புரிந்து அவர் வந்து நீ அதை சாப்பிட வேண்டாம் என்று சொன்னார் பின் புரிந்தது அது பெப்பரோனி என்று (பன்றி) ஒ மை காட் அவ்வளவு தான் கிட்டதட்ட் ஒரு மாதம் என்னால் சான்விட்ச் என்றால் அது நினைவு தான் வரும் பார்டியில் வந்த எல்லாரும் எனாக்காக ஒரு மெஹா வெஜ் சான்விட்ச் ரெடி செய்து ட்ரஸ்ட் மீ இரு ஒன்லி வெஜ் தைரியமா சாப்பிடலாம் என்று சொன்ன பின் தான் சாப்பிடவே செய்தேன்.வாவ் எல்லாருக்கும் ஒரு அயல் நாட்டின் அநுபவம் இருக்கு. கவி வாங்க நம்ம தளத்துக்கு.
ReplyDeleteமேனகா ஏதோ தவறு நடந்து விட்டது. சரியாக்க முயற்சிக்கிறேன். சிங்கப்பூர் சென்று மூன்று நாட்கள் கழித்து இன்றுதான் வந்தேன். அதான் தாமதமான பதில்:-(
ReplyDeleteவருகைக்கு நன்றி ஆசியா! ஆஹா நான் ஒருத்திதான் இப்பட பெல்ட் போடத்தெரியாம முழிச்சேன்னு நினைச்சா நிறைய பேர் இப்படித்தானா?! ஹா...ஹா... உன்னைப் போல் ஒருவன்(ள்) னு சொல்றது சரிதானோ!
ReplyDeleteஜலீலாக்கா வருகைக்கு நன்றி. ஹய்யா மொழி தெரியாம பே பேன்னு முழிச்சீங்களா?! நானும் இந்த மொழிப்பிரச்சினையில் முழித்த தருணங்களை தனிப்பதிவாகவே போடலாம் :-) அவ்வளவு இருக்கு
ReplyDeleteஅதிரா அலைந்து திரிந்து முகவரி தேடி வந்துட்டீங்களே! நன்றி அதிரா. அடிக்கடி வாங்க.
ReplyDeleteவிஜி இப்படி சாப்பாட்டு விஷயத்தில் நானும் அடிக்கடி மாட்டிக் கொள்வது உண்டு. உங்களையாவது உங்கள் தோழி காப்பாற்றினார். நல்லா சாப்பிட்டு விட்டு பின்னர்தான் எனக்கு தெரிய வரும் நான் சாப்பிட்டது பீஃப் என்று :-(. இப்போதெல்லாம் முதலிலேயே கேட்டு விடுவேன். சாப்பிட்டு விட்டு பின்னர் முழிக்க வேண்டாமே என்று :-)
ReplyDelete//உங்களையாவது உங்கள் தோழி காப்பாற்றினார். நல்லா சாப்பிட்டு விட்டு பின்னர்தான் எனக்கு தெரிய வரும் நான் சாப்பிட்டது பீஃப் என்று//எப்படி கவி நம்ம 2 பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை.நானும் இப்படி சாப்பிட்டு கடைசியில் அது மாட்டுக்கறி ,பன்றிக்கறின்னு சொல்லுவாங்க.ஒரே கோபமா வரும்.சாப்பிட்ட பிறகு என்ன பண்ரது.இப்பலாம் உஷாராயிட்டோம்..
ReplyDelete//எப்படி கவி நம்ம 2 பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை//
ReplyDeleteஹை நீங்களும் மாட்டிக்கிட்டு முழிப்பீங்களா?! அப்போ இப்படி நிறைய பேருக்கு நடக்குதா?! எதையும் சாப்பிடும் முன்னாடியே கேட்டுட்டு சாப்பிடுங்கப்பா!