Tuesday, 29 March 2011

புதுசு கண்ணா புதுசு!

அடுத்தமுறை திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் போய் இறங்கும் நம்ப ஊர் மக்கள்ஸ் வேறெங்கேயோ ஃப்ளைட்டை இறக்கிட்டானுங்களோனு திரு திருன்னு முழிக்காதீங்க. புதிய ஏர்போர்ட்டை திறந்துட்டாங்கள்ல! அழகா இருக்கு புதிய விமான நிலையம்.

இன்னும் வேலைகள் முழுவதுமாக முடியவில்லை. ஆனாலும் எல்லா வசதிகளுடன் அழகா இருக்கு. Arrival மற்றும் Departure வாயில்கள் தனித்தனியே சற்று அதிக இடைவெளியில் இருப்பதால் பழைய விமானநிலையம் போல் நெருக்கடியாக இல்லை. சுகமான கடல்காற்று
காத்திருக்கும் நேரத்தைக் கூட இனிமையாக்குகிறது :).விசாலமான கார்பார்க்கிங் வசதியும் இருக்கு.

ஏர்ப்போர்ட்டுக்கு போகும் சாலையும் குண்டு குழியில்லாமல் நேர்த்தியாக போட்டிருக்கிறார்கள். திருவனந்தபுரம் களக்கூட்டம் பைபாஸ் ரோட்டில் அனந்தபுரி மருத்துவமனைக்கருகில் இருந்து புதிய மேம்பாலம் வழியாக ஏர்ப்போர்ட்டை இணைத்திருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் இருந்து வருபவர்கள் டிராஃபிக் நெரிசலில் சிக்காமல் களியக்காவிளையில் இருந்தே பைபாஸ் ரோடு வழியாக வந்துவிடலாம்.

என்னதான் எல்லாம் மாறினாலும் இமிக்ரேஷன் அதிகாரிகள் மட்டும் மாறவே இல்லை :-((. அதே கடுகடுப்புதான்.

User Development Fee ன்னு சொல்லி ஏர்போட்டில் வைத்து 575ரூபாய் வசூலிச்சுட்டாங்க. ஆனால் தொடர்ந்து இதே போல் சுத்தமாக பராமரிக்கறாங்கன்னா கொடுத்துட்டு போகலாம் தப்பில்லைன்னு தோணுது.









Thursday, 24 March 2011

வந்துட்டோம்ல மொக்கை போட :-)

அப்புறம் எல்லாரும் எப்படி இருக்கீங்க?  நல்லாத்தான் இருக்கோம் நீ வந்துட்டீல்ல இதுக்கு அப்புறம் எப்படி இருப்போம்னு தெரியாதுன்னு நீங்க எல்லாம் நல்ல மனசோட சொல்றது நல்லாவே கேட்குது :)

இந்தியாவில் நல்லா வீட்டை சுத்திக்கிட்டு வந்தாச்சு. நிஜம்மாவே இந்த முறை வீட்டை மட்டும்தான் சுத்தினேன் :-(. மூணே மூணு நாள் மூணார் போயிட்டு வந்ததோட சரி அப்புறம் நாகர்கோவில் வாசம்தான்.

கூடிய சீக்கிரம் வழக்கமான மொக்கை பதிவுகளோட வரேன். அதுவரைக்கும் என்ஜாய் பண்ணுங்க மக்காஸ்......

Saturday, 11 December 2010

ஊருக்குப் போறோம்!

என் மொக்கைகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும்  நம் நட்புகளுக்கு மீண்டும் ஒரு குறுகிய கால விடுதலை :-). சந்தோஷமா இருங்க மக்கா!

பல வருடங்களுக்குப் பிறகு புகுந்த வீட்டு சொந்தங்கள் அனைவரும் மீண்டும் ஒரே இடத்தில் கூடப்போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு ஊருக்கு செல்கிறோம்.  அந்த மகிழ்ச்சியோடு அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Saturday, 4 December 2010

இடுக்கண் வருங்கால் நகுக

இன்னிக்கு நாட்டு நிலைமை இப்படித்தான் இருக்கு. மக்களே ஊழல்தொகையை பார்த்து மனம் வருந்தாதீர் என்று அரசியல்வியாதிகள் கோமாளிகளாக மாறி தினம் தினம் அறிக்கை விட்டு  மக்களை வேதனையில் சிரிக்க வைக்கறாங்க.
ஆரம்பிச்சு வச்சுது இத்தாலி மகராசி அன்னை சோனியா காந்தி

ஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா "அட்வைஸ்"

எப்படீங்க போஃபர்ஸ் விவகாரத்தில் குவாட்ரோச்சியை தப்பிக்க வச்சீங்களே அது மாதிரியா? இல்லை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை 16 மாசம் மூடிவச்சீங்களே அது மாதிரியா? புரியலீங்க தெளிவா சொன்னா எல்லாருக்கும் உபயோகப்படும்ல!

அடுத்து வந்தாருய்யா நம்ப மாண்புமிகு(?!) முதலமைச்சர்

ஊழல் விஷயங்களில் நான் நெருப்பு மாதிரி!

எப்படீங்க எங்கயாச்சும் ஊழல் பண்ண வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச உடனே நெருப்பு மாதிரி கப்புன்னு புடிச்சுக்குவீங்களே அதுமாதிரியா? இல்லை பணம் கொழிக்கும் துறைகள் உங்களுக்கு வேணும்னு நெருப்பு மாதிரி இருந்து சாதிப்பீங்களே அது மாதிரியா? சொல்றதை தெளிவா சொன்னா நாங்களும் நெருப்பு மாதிரி இருப்போம்ல

அடுத்து அடிச்சாரு பாருங்க ஒரு ஜோக்கு...

"கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை"

ஆமாமா வேற எல்லாம் "வாங்கவில்லை". நாங்க நம்பிட்டோம்.

அதுலயும் ஓடாத படங்களுக்கு கதைவசனம் எழுதி 50லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாராம். இதுதாங்க இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜோக்.

நானும் கதைவசனம் எழுதலாமான்னு யோசிக்கறேன். 50லட்சமெல்லாம் வேணாம் ஒருலட்சம் கிடைச்சாலும் போதும்.

அடுத்து துணைமுதல்வர் எனக்கு மட்டும் ஜோக்கடிக்கத் தெரியாதான்னு கேட்டுட்டு வந்தார்

"தி.மு.க ஆட்சியின், "இமேஜ்' உயர்ந்து கொண்டிருக்கிறது : துணை முதல்வர் பெருமிதம்"

ஹி ஹி டங்கு ஆஃப் த ஸ்லிப்பு தூ தூ ஸ்லிப்பு ஆஃப் த டங்கு... டேமேஜ்னு சொல்றதுக்கு பதிலா இமேஜ்னு சொல்லிட்டார் போல

எது எப்படியோ நல்லா வாய் விட்டு சிரிக்கலாம் இந்த ஜோக்குக்கு.
அரசியல்வாதிக்கு குறைஞ்சவனா நானுன்னு ஸ்டேஜுக்கு வந்தாரு தொழிலதிபர் ரத்தன் டாட்டா
நீரா ராடியா டேப் விவகாரம்: "ரத்தன் டாடா, இது தனி மனித உரிமையை மீறிய செயல் என்று கருத்து தெரிவித்திருந்தார்."

ஆமாமா பிளாக் டை பிளாக் கவுன் ன்னு நீங்க ஜொள்ளியதையெல்லாம் வெளியிட்டது தனி மனித உரிமை மீறல்தான். அதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனா மாறன் மந்திரி ஆகக் கூடாதுன்னு சொன்னீங்களே அது என்னங்க தனி மனித விஷயம் புரியலியே! சொன்னீங்கன்னா அப்பாவிங்க நாங்க புரிஞ்சுக்குவோம்.

மக்களே தினந்தோறும் செய்தித் தாள் படியுங்க. நம்ப அரசியல்வியாதிகள் வெளியிடற அறிக்கைகளைப் படிச்சா வாழ்க்கையில் என்ன டென்ஷன் ஸ்ட்ரெஸ் எல்லாம் இருந்தாலும் பறந்து போயிடும். வாய் விட்டு சிரிப்பீங்க

இடுக்கண் வருங்கால் நகுக!

Wednesday, 1 December 2010

முதன்முறை அழுகைகள்- ஒரு எதிர்வினை!

வலைப்பூ ஆரம்பிச்சு பல மாதங்கள் ஆயிடுச்சு. இதுவரைக்கும் ஒரு எதிர்வினை கூட எழுதலேன்னா நானும் பதிவர்னு சொல்லிக்கிட்டு திரிய முடியுமா! ஆனால் எதிர்வினை எழுதி அடிவாங்கும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை. அதனால் யாரும் அடிக்க மாட்டாங்கன்னு நம்பி எதிர்கவுஜ எழுதிட்டேன் :)

நாஞ்சிலார் எழுதிய இந்த கவிதைக்கு எதிர்கவுஜ...




முதல்முறை பள்ளி சென்ற போது
வராத அழுகை

முதல்முறை பரீட்சையில்
முட்டை வாங்கியபோது
வராத அழுகை

முதல்முறை ஆசிரியரிடம்
அடி வாங்கியபோது
வராத அழுகை

முதல்முறை சைட் அடித்து அவள் அண்ணனிடம்
மாட்டிக் கொண்டதும்
வராத அழுகை

முதல்முறை காதலில் தோற்ற போது
வராத அழுகை

முதல்முறை பார்த்த பெண்
வேண்டாம்னு சொன்ன போது
வராத அழுகை

முதல் முறை வேலை புட்டுக்கிட்ட போது
வராத அழுகை

முதல்முறை காதலித்த பெண்ணை
திருமணம் செய்தபோது
வராத அழுகை

முதல்முறை மனைவி சமையலை
சாப்பிட்ட போது
வராத அழுகை

முதல்முறை மொக்கை கவுஜ
எழுதிய போது
வராத அழுகை

பல முதல்முறை அழுகைகளை
முறியடிக்கும் ஏதாவது
ஒரு பிரகாசமான பல்பை
எதிர்பார்த்து வாழ்க்கையை
பல பல்புகளுடன் கழித்துக்
கொண்டிருக்கிறார்கள்...

Tuesday, 23 November 2010

புத்தியும் மனமும்!

அப்பா உன் கண்ணில் செய்யும்


அறுவை சிகிச்சை என்னவோ

அரைமணி நேரம்தான்

ஆபத்தும் இல்லாததுதான்

காலை சென்று மாலையில் வீடு திரும்பி விடுவாய்தான்

சுற்றமும் நட்பும் உன்னருகில் இருக்கிறதுதான்

அத்தனையும் என் புத்திக்கு தெரிகிறது

மனம் கேட்க மறுக்கிறதே அப்பா!

உன் அருகில் நானின்றி

அயல்நாட்டில் அமைதியின்றி தவிக்கிறேன்

அலைபேசியில் ஆயிரம் தைரியம் சொன்னாலும்

உன் கண்ணில் ஆயுதமிடப் போவதை எண்ணி

என் கண்ணில் நீர் வடிகிறதே

அண்ணனும் இதே மனநிலையில்தான்

செய்வதறியாது தவிக்கிறான்

விரைவில் நீ குணமடைய வேண்டுமென

பிரார்த்திக்க மட்டுமே முடிகிறது எங்களால்!

Thursday, 18 November 2010

சந்தேகமுங்கோ!

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஹலோ எங்க ஓடறீங்க? சத்தியமா இது ஜெய்லானி கேட்கற மாதிரி சந்தேகம் இல்லை.  நம்புங்க அட நம்புங்கப்பா? பாருங்க ஜெய் உங்க சந்தேகங்கள் நம்ப மக்களை எம்பூட்டு தூரம் பாதிச்சிருக்குன்னு :)




என்ன பிரச்சினைன்னாலும் நம்ப எதிர்க்கட்சி எம்பி க்களும் எம்எல்ஏ க்களும் உடனே நாடாளுமன்றத்தையும் சட்டசபையையும் கத்தி கூச்சலிட்டு குடுமிப்பிடி சண்டையிட்டு ஸ்தம்பிக்க வைத்து ஒத்தி வச்சுடறாங்களே! அதனால அந்த பிரச்சினைக்கு என்னிக்காவது ஏதாச்சும் உருப்படியான முடிவு வந்திருக்கா?

அப்புறம் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிங்கற பேர்ல சபையை கூட்டி உடனே ஒத்தி வைக்கறது எல்லாம் ஓவரா இல்லை! இதுவா அஞ்சலி செலுத்தும் லட்சணம்? ஒரு நிமிடம் கண்மூடி மௌனமாக அஞ்சலி தெரிவித்து விட்டு அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் என்ன?

ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் கூடணும்னா கோடிக்கணக்கில் செலவாகுதாமே!  இப்படி ஒத்தி வைக்கறதுனால ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டறது யார்? இளிச்சவாய் மக்கள்தானா :(.

இவங்களுக்கு எல்லாம் சபை கூடும் நாளில் அகவிலைப்படி அந்தப்படி இந்தப்படின்னு படியளக்கறாங்களாமே அந்த படிகள் இப்படி ஒத்தி வைக்கப்படும் நாளுக்கும் சேர்த்துதானே கொடுக்கப் படுது?! யார் அப்பன் வீட்டுப் பணம் இப்படி பணியே செய்யாதவர்களுக்கு படி என்ற பெயரில் வீணடிக்கப் படுகிறது?

திடீர்னு எனக்கு ஏன் இந்த சந்தேகம்னு பார்க்கறீங்களா? நம்ப மாண்புமிகு(குறை) முன்னாள் அமைச்சர் ராசா விவகாரதில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது. ஏதாச்சும் பயன் இருக்கா :(. தெரிஞ்சவங்க தெளிவு படுத்தினா புண்ணியமா போகும்.